பிரதமர் மோடி இன்று ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் தேசிய காவலர் பயிற்சிக் கல்லூரியில் நடந்த டிஜிபிக்கள்/ஐஜிக்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், காவல்துறையினர் எப்படி துணிச்சலாக பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினார்கள் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் தேசத்தில் நலனுக்காக தன்னுயிர் நீத்த 33,000 காவல்துறை அதிகாரிகளையும் நினைவுகூர்ந்தார்
இந்த வருடாந்திர மாநாடு, அது நடத்தப்படும் முறையில் பல்வேறு மாற்றங்களை கடந்து வந்திருப்பதாகவும், அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நல்லதொரு தளமாக திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதன்மூலம் கொள்கை முடிவுகளை எடுக்க ஆக்கபூர்வமான தரவுகள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாநாட்டில் முடிவுசெய்யப்பட்ட விஷயங்கள் சார்ந்து உறுதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் பேசினார்.
காவல்துறை பயிற்சி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், மென்திறன் பயிற்சியும் இப்போது மிகவும் அவசியம் என்றும், அதுவும் பயிற்சியில் ஒரு அங்கமாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மனித மனவியல், நடத்தை மனவியல் போன்றவையும் பயிற்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
அதோடு தலைமைப் பண்பும் அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய பண்புகளை காவல்துறை பணியாளர்களிடம் வளர்த்தெடுப்பது மூத்த அதிகாரிகளின் கடமை என்றார்
சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசிய பிரதமர், ரோந்து செல்வதும், காவலர்கள் நேரடியாக சேகரிக்கும் தரவுகளும் சட்டம் ஒழுங்கிற்கு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
கூட்டு பயிற்சியின் மூலம் காவல் படையின் தரத்தை உயர்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர், தொழில்நுட்ப வளர்ச்சியும், மனித சக்தியின் பயன்பாடும் காவல்துறையின் தொடர் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியம் என்றார்.
‘உங்கள் சேவையில் இந்திய காவல்துறை’ என்ற செயலியை பிரதமர் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் புலனாய்வுப் பிரிவில் சாதனை செய்த அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்களை பிரதமர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு முன்பாக, தேசிய காவல்துறை பயிற்சிக் கல்லூரியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், சர்தார் வல்லபபாய் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியதோடு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.