ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்ற காவல்துறைத் தலைவர்களின் (டிஜிபி/டிஐஜி) 57-வது அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
காவல் படைகளை அதிக திறன் கொண்டதாக மாற்றவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார். காவல் அமைப்புகளுக்கு இடையே தரவுப் பரிமாற்றத்தை சுமுகமானதாக்க தேசிய தரவு ஆளுமைக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பயோமெட்ரிக்ஸ் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளை நாம் மேலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். கால்நடையான ரோந்து போன்ற பாரம்பரிய காவல் முறைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். வழக்கற்றுப் போன குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யவும், மாநிலங்களில் காவல்துறை அமைப்புகளுக்கான தரக்கட்டமைப்பை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார். சிறை நிர்வாகத்தை மேம்படுத்த சிறை சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அவர் ஆலோசனை தெரிவித்தார். அதிகாரிகள் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வதன் மூலம் எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர் கருத்துகளைத் தெரிவித்தார்.
திறன்களைப் பயன்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் மாநில காவல்துறை மற்றும் மத்திய அமைப்புகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும் காவல்துறையின் குழுவினரிடையே சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான (டிஜிஎஸ்பி / ஐஜிஎஸ்பி) மாநாடுகளை நடத்துவது குறித்தும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
சிறப்புமிக்க சேவைகளைச் செய்தவர்களுக்கு காவல்துறை பதக்கங்களை பிரதமர் வழங்கியதைத் தொடர்ந்து மாநாடு நிறைவடைந்தது.
இந்த மாநாடு, பயங்கரவாத எதிர்ப்பு, வன்முறைத் தடுப்பு மற்றும் இணையதள பாதுகாப்பு உட்பட காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறைச் செயலாளர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறைத் தலைவர்கள் (டிஜிஎஸ்பி/ஐஜிஎஸ்பி), மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் தலைவர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பல்வேறு நிலைகளைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இந்த மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.