பிரதமர் திரு நரேந்திர மோடி தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று நடைபெற்ற 16-வது ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
16-வது இந்தியா – ஆசியான் உச்சிமாநாட்டில் தாம் கலந்துகொள்வது பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இனிய விருந்தோம்பலுக்காக தாய்லாந்தைப் பாராட்டிய அவர், அடுத்த ஆண்டு உச்சிமாநாட்டில் தலைவராக பொறுப்பேற்கவுள்ள வியட்நாமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ – பசிபிக் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது என்று கூறிய பிரதமர், கிழக்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் முக்கிய இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். வலுவான ஆசியான் அமைப்பு இந்தியாவுக்கு பெரும் பயனை விளைவிக்கும். தரைவழி, கடல்வழி, வான்வழி மற்றும் டிஜிட்டல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு பில்லியன் இந்திய கடன் வரி, டிஜிட்டல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு உரிய பயனை அளிக்கும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டின் உச்சிமாநாடு மற்றும் சிங்கப்பூரில் சாதாரண முறையில் நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகள் அமலாக்கப்பட்டது இந்தியாவையும், ஆசியானையும் மிகவும் நெருக்கத்தில் கொண்டுவந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவுக்கும், ஆசியானுக்கும் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய பகுதிகளில் இந்தியா ஒத்துழைப்பையும், கூட்டாண்மையையும் அதிகரிக்க விரும்புகிறது. விவசாயம், ஆராய்ச்சி, பொறியியல், அறிவியல், தகவல் தொடர்பு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், ஒத்துழைப்பை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியா – ஆசியான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அண்மையில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இது இரு தரப்புக்கும் இடையே பொருளாதார கூட்டாண்மையை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.