





பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தேசிய இளைஞர் தினத்தையொட்டி இரு நிகழ்ச்சிகளில், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
கிரேட்டர் நொய்டா, கவுதம் புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் கொண்டாட்டம், 2018 துவக்க விழாவில் பிரதமர், பி.எஸ்.எல்.வி.-சி40 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோவை பாராட்டி தனது உரையை துவக்கினார். விண்வெளியில் நமது முன்னேற்றங்கள் நம்முடைய குடிமக்களுக்கு உதவுவதுடன், நமது வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் என பிரதமர் கூறினார்.
2017, டிசம்பர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தாம் மாவட்டங்களில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்ததை அவர் நினைவுக் கூர்ந்தார். மேலும் அவர், அத்தகைய மாதிரி நாடாளுமன்றங்கள் நமது இளைஞர்களிடையே விவாதத்திற்கான உணர்வினை உயர்த்தும் என்றார். நாம் 1947-க்கு பின்பாக பிறந்ததனால், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பெருமை நமக்கு கிட்டவில்லை என பிரதமர் கூறினார். ஆனால், நமது சுதந்திரத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச்சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களின் கனவை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு கிடைத்துள்ளது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு அளிப்பவர்களாக உருவாக்கிட நாங்கள் விரும்புகிறோம் என்றார் பிரதமர். மேலும் அவர், அவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்கக்கூடிய இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றார். இன்றைய இளைஞர்களிடம், ‘தைரியம்’ அல்லது பொறுமை இல்லை என சிலர் கூறுவார்கள் என்றார் பிரதமர். இருப்பினும், ஒருவகையில், அது நமது இளைஞர்களிடையே கண்டுபிடிப்பிற்கான உத்வேகத்தை தூண்டிவிடுகிறது என அவர் கருதினார். அது நமது இளைஞர்களை பல்வகையில் சிந்திக்க வைத்து, புதிய செயல்களை செய்ய வைக்கிறது என்றார் அவர். இளைஞர்கள் விளையாட்டை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
கர்நாடகா, பேலகாவியில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சர்வ தர்ம சபா நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சுவாமி விவேகானந்தர் சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தார் என்றார். மேலும், இந்தியாவில் முன்னேற்றத்தில்தான் நமது நல்வாழ்வு உள்ளது என அவர் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் பிரதமர் கூறினார்.
திரு.நரேந்திர மோடி அவர்கள், மேற்கத்திய உலகில் இந்தியாவிற்கு எதிராக பரப்பியிருந்தவற்றை தவறு என சுவாமி விவேகானந்தர் நிருபித்தார் என்றார். மேலும், சமூக தீமைகளுக்கு எதிராகவும் அவர் குரல் எழுப்பினார் என்றார் அவர்.
நாட்டை துண்டாட சிலர் முயற்சிக்கின்றனர். இந்நாட்டின் இளைஞர்கள் அத்தகையவர்களுக்கு உரிய பதிலை அளிக்கின்றனர் என்றார் பிரதமர். மேலும் பிரதமர், நமது இளைஞர்களை தவறான பாதைக்கு என்றும் அழைத்துச் செல்ல முடியாது என்றார். இந்தியாவின் இளைஞர்கள் தான் தூய்மையான பாரத இயக்கத்தை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் என்றார் பிரதமர். மேலும் அவர், சமூகத்திற்கு பணியாற்றிய மற்றும் சீர்திருத்திய பல்வேறு புனிதர்கள், துறவிகளுக்கு இந்தியா வீடாக அமைந்துள்ளது என்றார்.
நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சேவை புரிதல் இருப்பதாக பிரதமர் கூறினார். மேலும் அவர், இந்தியா முழுவதிலும், சமூகத்திற்காக தன்னலமற்று பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றார். திறந்தவெளி மலம் கழித்தலற்ற தேசமாக நமது நாட்டை மாற்றிட ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
Click here to read PM's speech at Gautam Buddha University in Noida