மத்திய அரசின் உதவி செயலாளர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டின் தொகுப்பைச் சேர்ந்த 160 இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோடு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.07.2019) கலந்துரையாடினார்.
இந்தக் குழுவினர் மசூரியில் பயிற்சி மேற்கொண்டபோது அவர்களை சந்தித்ததைப் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இந்தக் கலந்துரையாடலின்போது அதிகாரிகள் தங்களின் களப்பணிகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மசூரியில் தங்களின் வகுப்பறைப் பயிற்சிகளை இந்த அனுபவங்களோடு அவர்கள் தொடர்புப்படுத்திக் கொண்டனர். அண்மைக்கால முன்முயற்சியான மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களில் இந்த அதிகாரிகள் பணியாற்றியபோது அவற்றின் செயல்பாடுகளைக் களத்தில் அறிந்துகொண்டனர்.
மத்திய அரசில், வரவிருக்கும் மூன்று மாதங்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றுவது மிகவும் முக்கியமானது என்றும் சிறந்த நடைமுறைக்கான ஒரு பகுதி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் கொள்கை உருவாக்கத்தில் ஒவ்வொரு அதிகாரியும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார் என்று அவர் கூறினார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய பார்வையையும், புதிய சிந்தனையையும், புதிய அணுகுமுறைகளையும் கொண்டிருக்க வேண்டுமென திரு நரேந்திர மோடி இளம் அதிகாரிகளை ஊக்கப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் நோக்கம் அரசுப் பணியில் புதுமையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாகும் என்றும் அவர் கூறினார். இந்த அனுபவமும், உற்சாகமும் இணைவது நிர்வாக முறைக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புக்களை உற்சாகத்தோடும், குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைநோக்கோடும் அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தங்களுக்கு அளிக்கப்படும் பிரச்சினைக்குரிய பணிகளுக்கு முழுமையான தீர்வைக் காண்பதற்கு அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
களப்பணியில் அண்மையில் பெற்ற தங்களின் அனுபவங்களை தில்லியில் மேற்கொள்ளவிருக்கும் பணியோடு அவர்கள் தொடர்புப்படுத்திப் பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலகம் மற்றும் ஊழியர் நலன், பயிற்சித்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியக் குடிமைப்பணிகளின் சிற்பி என கருதப்படும் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கையையும், சாதனைகளையும் சித்தரிக்கும் ஒலி, ஒளி காட்சியும் இந்த நிகழ்வில் திரையிடப்பட்டது.