சென்னையில் நடைபெற்ற ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மகாகவி திருவள்ளுவரை மேற்கோள் காட்டிய பிரதமர், "தண்ணீரை மேலே ஈர்த்த மேகம் அதை மழை வடிவில் திருப்பித் தராவிட்டால், பெருங்கடல்கள் கூட சுருங்கிவிடும்" என்று கூறினார். இந்தியாவில் இயற்கை மற்றும் அது வழக்கமான கற்றல் ஆதாரமாக மாறும் வழிகள் குறித்து பேசிய பிரதமர், மற்றொரு சமஸ்கிருத ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி விளக்கினார், "நதிகள் தங்கள் சொந்த தண்ணீரைக் குடிப்பதில்லை அல்லது மரங்கள் அவற்றின் சொந்த பழங்களை சாப்பிடுவதில்லை. மேகங்கள் அவற்றின் நீரினால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களையும் உட்கொள்வதில்லை". இயற்கை நமக்கு வழங்குவது போல இயற்கைக்கு நாமும் வழங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பூமித் தாயைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படைப் பொறுப்பு என்றும், இந்தக் கடமை நீண்ட காலமாக பலராலும் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது 'பருவநிலை நடவடிக்கை' என்ற வடிவம் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் பாரம்பரிய அறிவின் அடிப்படையில், பருவநிலை நடவடிக்கை 'அந்தியோதயா'வைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார், அதாவது சமூகத்தில் கடைசி நபரின் எழுச்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதாகும். பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வளரும் நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், 'ஐ.நா பருவநிலை மாநாடு' மற்றும் 'பாரிஸ் ஒப்பந்தம்' ஆகியவற்றின் கீழ் உறுதிமொழிகள் மீதான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், ஏனெனில் இது, வளரும் நாடுகளின் விருப்பங்களை பருவநிலை நட்பு வழியில் நிறைவேற்ற உதவுவதில் முக்கியமானதாக இருக்கும்.
இந்தியா தனது லட்சியமான 'தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' மூலம் தன்னை வழிநடத்தி கொள்கிறது என்பதை தெரிவிப்பதில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து நிறுவப்பட்ட மின் திறனை 2030 ஆம் ஆண்டின் இலக்கை விட 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைவதாகவும், இப்போது புதுப்பிக்கப்பட்ட இலக்குகள் மூலம் நிர்ணய அளவை இன்னும் அதிகமாக அமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், 2070-ம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜியத்தை' அடைய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் சமாளிப்பு உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் 'தொழில் மாற்றத்திற்கான தலைமைத்துவ குழு' உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் இந்தியா தனது கூட்டாளிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லுயிர் பாதுகாப்பு, பேணுதல், மறுசீரமைப்பு, செறிவூட்டல் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், "இந்தியா மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு" என்று குறிப்பிட்டார். காட்டுத் தீ மற்றும் சுரங்கத் தொழிலால் பாதிக்கப்பட்ட முன்னுரிமை நிலப்பரப்புகளை மீட்டெடுப்பது 'காந்திநகர் செயலாக்க வரைபடம் மற்றும் தளம்' மூலம் அங்கீகரிக்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பூமியில் உள்ள ஏழு வகை புலிகளைப் பாதுகாப்பதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட 'சர்வதேச புலிகள் கூட்டணி' பற்றி அவர் குறிப்பிட்டார், மேலும் ஒரு முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புலிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கற்றல்களைப் பாராட்டினார். உலகின் 70 சதவீத புலிகள் இன்று இந்தியாவில் இருப்பது புலிகள் திட்டத்தின் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார். சிங்க பாதுகாப்பு இயக்கம் மற்றும் டால்பிஃன் பாதுகாப்பு இயக்கம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்களிப்பால் இயக்கப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர்,
'அம்ரித் சரோவர்' இயக்கத்தின் ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முன்முயற்சியாகும், இது ஒரு வருடத்தில் 63,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த இயக்கம் முற்றிலும் சமூக பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். தண்ணீரை சேமிக்க 280,000 க்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதற்கும், ஏறத்தாழ 250,000 மறுபயன்பாடு மற்றும் நீரை மீண்டும் நிரப்புவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுத்த இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். "இவை அனைத்தும் மக்களின் பங்கேற்பு மற்றும் உள்ளூர் மண் மற்றும் நீர் நிலைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் சாதிக்கப்பட்டன" என்று பிரதமர் மேலும் கூறினார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான 'நமாமி கங்கை இயக்கத்தில்' சமூகத்தின் பங்களிப்பை திறம்பட பயன்படுத்துவதை திரு. மோடி சுட்டிக்காட்டினார், இதன் விளைவாக கங்கை நதியின் பல பகுதிகளில் கங்கை டால்பிஃன் மீண்டும் தோன்றியது முக்கிய சாதனையாகும். சதுப்பு நிலப் பாதுகாப்பில் ராம்சர் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ள 75 சதுப்பு நிலங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஆசியாவிலேயே மிகப் பெரிய ராம்சார் தளங்களின் வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்றார்.
'சிறிய தீவு நாடுகளை' 'பெரிய பெருங்கடல் நாடுகள்' என்று குறிப்பிட்ட பிரதமர், பெருங்கடல்கள் அவர்களுக்கு ஒரு முக்கியமான பொருளாதார வளம் என்றும், உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவதாகவும் கூறினார். இது விரிவான பல்லுயிர் பெருக்கத்தின் தாயகம் என்று கூறிய அவர், கடல் வளங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 'நிலையான மற்றும் நெகிழ்வான நீலம் மற்றும் கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கான ஜி 20 உயர் மட்டக் கொள்கைகளை' ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பயனுள்ள சர்வதேச சட்டரீதியான பிணைப்பு கருவிக்காக ஆக்கப்பூர்வமாக பணியாற்றுமாறு ஜி 20-ஐ கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஐ.நா. தலைமைச் செயலாளருடன் இணைந்து - மிஷன் லைஃப் – சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை திட்டத்தைத் தொடங்கியதை நினைவுகூர்ந்த பிரதமர், உலகளாவிய வெகுஜன இயக்கமான மிஷன் லைஃப், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேணவும் தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் என்று கூறினார். இந்தியாவில், எந்தவொரு நபரும், நிறுவனமும் அல்லது உள்ளாட்சி அமைப்பும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை கவனிக்காமல் இருக்கமுடியாது என்று பிரதமர் கூறினார். அண்மையில் அறிவிக்கப்பட்ட 'பசுமை கடன் திட்டத்தின்' கீழ் இப்போது அவர்கள் பசுமைக் கடன்களைப் பெற இயலும் என்று அவர் தெரிவித்தார். மரம் நடுதல், நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் போன்ற நடவடிக்கைகள் மூலம் இப்போது தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிறர் வருவாயை ஈட்ட முடியும் என்று அவர் விளக்கினார்.
இயற்கை அன்னைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை நாம் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் மாநாடு ஆக்கப்பூர்வமானதாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். "இயற்கை அன்னை பிளவுபட்ட அணுகுமுறையை விரும்பவில்லை. "வசுதைவ குடும்பகம்" - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பதே இயற்கை அன்னையின் விருப்பம் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.