நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜனவரி 30 அன்று உரை நிகழ்த்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், அவரது கனவுகளை நனவாக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறினார். அமெரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை இன்று காலை அவமதிக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்த அவர், இதுபோன்ற வெறுப்பு மிகுந்த சூழல் நமது கிரகத்தில் வரவேற்புக்குரியது அல்ல என்று தெரிவித்தார்.
வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினையை அரசு திறந்த மனதுடன் அணுகுவதாக பிரதமர் உறுதியளித்தார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது என்றும், வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய தலைவர்களுக்கு, சட்டம் தனது கடமையை செய்யும் என்று பிரதமர் பதிலளித்தார்.
கூட்டத்தில் தலைவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து, விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவதன் முக்கியத்துவத்தையும், அவையில் விரிவான விவாதத்தையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் சிறிய கட்சிகள் தங்களது கருத்துக்களை போதுமான அளவு வெளிப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர் மேலும் கூறினார். இடையூறுகள் இல்லாமல், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை பெரிய கட்சிகள் உறுதி செய்யவேண்டும் என்றும், அதன் வாயிலாக சிறிய கட்சிகள் தங்களது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு துறைகளில் உலக நன்மையை மேலும் நிலை நாட்டுவதில் இந்தியாவின் பங்கு குறித்து பிரதமர் எடுத்துக் கூறினார். நமது மக்களின் திறமைகளையும், ஆற்றலையும் குறிப்பிட்டதோடு, சர்வதேச நன்மையை அதிகரிக்கும் சக்தியாக இவை விளங்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.