போர்ச்சுகீஸ் குடியரசின் பிரதமர் மேன்மைமிகு ஆன்டானியோ லூயிஸ் சாந்தோஸ் டா கோஸ்டா உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.
இரு நாடுகளில் நிலவும் கொவிட்-19 நிலைமை குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர தடுப்பு மருந்துகளை விரைவாகவும், சம அளவிலும் வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கை குறித்தும், 70-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா இது வரை வழங்கியுள்ள ஆதரவு குறித்தும் பிரதமர் கோஸ்டாவிடம் பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார். தன்னால் முடிந்த அளவுக்கு இதர நாடுகளின் தடுப்பு மருந்து வழங்கல் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவர்களும், கடந்த சில வருடங்களில் இந்திய–போர்ச்சுகல் கூட்டில் ஏற்பட்டிருக்கும் நேர்மறை முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.
2021 மே மாதம் போர்டோவில் போர்ச்சுகலின் தலைமையில் நடைபெற இருக்கும் முதல் இந்திய–ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைவர்கள் ஆய்வு செய்தனர். இந்திய–ஐரோப்பிய யூனியனின் யுக்தி சார்ந்த கூட்டுக்கு வலுவூட்டுவதில் பிரதமர் கோஸ்டாவின் பங்கை பாராட்டிய பிரதமர் திரு மோடி, போர்டோவில் அவரை சந்திக்க தாம் ஆவலாக இருப்பதாக கூறினார்.