நாம் விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. சர்தார் பட்டேல் பல மாகாணங்களை இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். அரசியல் ஒருங்கிணைப்பு சாத்தியப்பட்டாலும், இந்தியா ஒன்றிணைந்த சந்தையாக உருப்பெறவில்லை. தே.ஜ.கூ அரசு இந்தியாவின் சந்தைகளை இணைத்து நம் உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் பலப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை மனதில் வைத்து ஒரே நாடு ஒரே சந்தை என்ற நிலையை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் தே.ஜ.கூ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இ-நாம்
விவசாய சந்தை விதிகளின்படி விவசாயம் சார்ந்த சந்தையை நிர்வகிப்பது மாநில அரசு. இவ்விதிகளின் கீழ் மாநில சந்தை, பல சந்தைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி விவசாய உற்பத்தி சந்தை குழுவினால் (APMC) நிர்வாகிக்கப்படுகிறது. இந்த APMCக்கள் கட்டணம் உட்பட எல்லா சந்தை விதிகளையும் தாங்களே அமைத்துக் கொள்ளலாம். இந்த முறையினால் மாநிலத்திற்கு உள்ளேயே கூட விவசாய பொருட்கள் பல இடங்களுக்கு மாற்றப்பட்டு, சுமைகூலி அதிகமாகி, மண்டி கட்டணங்களும் சேர்ந்து இறுதியில் நுகர்வோரை அடையும்போது, விவசாயிக்கு பெரிய லாபம் இல்லை என்றாலும் பொருளின் விலை பல மடங்காகி விடுகிறது.
இ-நாம் இந்த பிரச்சினையை ஒருங்கிணைந்த இணைய சந்தையை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்படுத்தி சமமான தளத்தையும், இணைக்கப்பட்ட சந்தைகள் அத்தனையிலும் ஒரே மாதிரியான வழிமுறைகளையும் ஏற்படுத்துவதன் மூலமாக எதிர்கொள்கிறது. இதனால் வாங்குபவருக்கும் விற்பருக்குமான இடைவெளி குறைந்து, தேவை மற்றும் உற்பத்திக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது, ஏல முறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுகிறது, விவசாயிக்கு தன் உற்பத்தியை நாடு முழுதும் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. அதோடு தரத்திற்கு ஏற்ப விலை ஏறுவதுடன், இணையவழியாக பணப்பறிமாற்றம் செய்துகொள்ளவும் வசதி கிடைக்கிறது. அதே நேரம் நுகர்வோருக்கும் தரமான உற்பத்திகள் நியாயமான விலையில் கிடைக்கிறது.
ஜி.எஸ்.டி.
நாடு முழுதும் பலவகையான வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. ஒரே நாடுதான் என்றாலும் பலவகை வரிகள், பலவகை விதிகள். பெரும்பாலும் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் மிக அதிக அளவில் வரி செலுத்த தேவை ஏற்பட்டது. ஜி.எஸ்.டி.யின் மூலம் இது எல்லாமே மாறிவிடும். ஜி.எஸ்.டி. மூலம் நாடு முழுதும் ஒரே போன்ற வரிதான் இருக்கும்.
ஜி.எஸ்.டி. என்பது உற்பத்தியாளரிடம் இருந்து நுகர்வோரை அடையும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படும் ஒரே வரி. ஒவ்வொரு நிலையிலும் கட்டப்படும் உள்ளீட்டு வரிகள், பொருட்களின், சேவைகளின் மதிப்பு கூட்டப்படும்போது மட்டுமே இனி தேவைப்படும். மறைமுக வரிகளின் விகிதம் மற்றும் கட்டமைப்புகள் நாடு முழுதும் ஒரேபோல இருக்கும். இதன்மூலம் வணிகம் செய்வது சுலபமாக்கப்படும். எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியான வரி என்பதும், மதிப்பு கூட்டப்படும்போது மட்டுமே கூடுதல் வரி என்பதும் தேவையில்லாத வரி விதிப்புகளை குறைக்கும். மத்திய மற்றும் மாநில வரிகளை ஜி.எஸ்.டி.யில் இணைப்பதும், CST எனும் மத்திய விற்பனை வரியை நீக்குவதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைக் குறைக்கும். இதன்மூலம் இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகள் சர்வதேச சந்தையில் போட்டியிடும் திறன் கூடி, இந்திய ஏற்றுமதி பெருகும். நிர்வாகம் எளிமையாவதாலும், கசிவுகள் குறைவதாலும் பல பொருட்களின் மீதான வரிச்சுமை குறைவதால், நுகர்வோருக்கும் பெரிதும் பலனளிக்கும்.
ஒரே நாடு, ஒரே கட்டமைப்பு, ஒரே விலை
மின் விநியோக திறன் இந்தியாவில் போதாமையாக இருந்தது. இதனால் மின் உற்பத்தி உபரியாக இருக்கும் மாநிலங்களில் இருந்து மின் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கும் மாநிலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் இருந்தது. குறிப்பாக தென் மாநிலங்களில் வெயில் காலத்தில் மின்சார பற்றாக்குறை இருப்பதால், இந்த மாநிலங்களில் இரட்டை இலக்கத்தில் மின் கட்டணங்கள் இருந்தன. தே.ஜ.கூ. அரசு 2013-2014ல் 3450MW ஆக இருந்த கையிருப்பு விநியோகக் கொள்ளளவை (ATC) 5900MW ஆக, அதாவது 71% உயர்த்தியது. இதன்மூலம் குறிப்பிடப்படும்படி கட்டணங்கள் குறைந்துள்ளது.
உபரி மின்சாரத்தின் விலைகள் மற்றும் கையிருப்பு குறித்த தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு “வித்யூத் பிரவாஹ்” என்ற செயலியில் கிடைக்கிறது. மேலும் மாநிலங்கள் எவ்வளவு மின்சாரத்தை வாங்கியுள்ளன என்பதும், பற்றாக்குறைகளை அறிவித்துள்ளனவா போன்ற தகவல்களும் அந்த செயலியில் கிடைக்கும். வித்யூத் பிரவா செயலியின் மூலம் மின் கட்டணங்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஒரேமாதிரியாக இருப்பதை அறிகிறோம். அரசு எடுத்து வரும் பலதரப்பட்ட நடவடிக்கைகளால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மின் விநியோகத் திறனை அதிகரித்ததும் பல மாநிலங்கள் தேசிய ஒதுக்கீட்டில் இருந்து மின்சாரம் பெற ஏதுவாக அமைந்தது. ”DEEP ( தகைத்திறமான மின்சார விலையை அறிதல்) இணைய-ஏலம் மற்றும் இ.ரிவர்ஸ் ஏல வலைவாசல்” என்ற திட்டத்தை, தற்காலிக மின் விநியோக நிறுவங்களில் (DISCOMS) இருந்து மின்சாரத்தை பெற வசதியாக அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அரசு மின்சாரம் கொள்ளளவு செய்யும்போது பெருமளவில் விலை குறையும். இதன்மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
பொது கணக்கு எண்
முன்பெல்லாம் ஒருவர் புதிதாக வேலையில் சேர்ந்தால், அவரை பணியில் அமர்த்துகின்றவர்களே ஒரு EPF கணக்கு தொடங்கி அவரது வருங்கால வைப்பு நிதியை வரவு வைப்பார்கள். அவரது பணம் அதில் சேமிக்கப்பட்டு பின்னர் வேலையில் இருந்து செல்லும்போது திருப்பித் தரப்படும். பின்னர் அடுத்த வேலையில் சேரும்போது மீண்டும் புதிதாக ஒரு EPF கணக்கு திறக்கப்படும். இந்த முறையினால் பணப்பறிமாற்ற செலவீனங்களும், நிறைய விண்ணப்பங்களை நிரப்ப வேண்டிய தேவையும் அதிகரித்ததோடு, மதிப்பீட்டிற்கு பழைய அமர்த்துனரையே நம்பி இருக்க வேண்டியதும் இருந்தது. UAN மூலம், பணியாளருடைய பணப்பரிவர்த்தனையில் பணி அமர்த்துனருக்கு எந்தப் பங்குமே கிடையாது. வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கும் பணியாளருக்கும் நேரடியான தொடர்பு ஏற்படும். UAN நிரந்தரமான கணக்காக, வாழ்க்கை முழுதும் செயல்பாட்டில் இருக்கும். பணியாளரின் வருங்கால வைப்பு நிதி அவரது UANயில் நேரடியாக செலுத்தப்படும். இதன்மூலம் பணியாளர் வெகுசுலபமாக தனது வைப்பு நிதியை பெற்றுக் கொள்ளலாம். ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதோடு, குடிமக்களின் வாழ்க்கையையும் இத்திட்டம் எளிதாக்குகிறது.