மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் சமீபத்திய உரையில், ஓணம் பண்டிகை குறித்துப் பேசினார். அப்போது ” சிங்கம் (Chingam) மாதத்தில் இந்த பண்டிகை வரும் என தெரிவித்தார். இந்த காலகட்டத்தில், மக்கள் புதிதாக எதாவது ஒன்றை வாங்குகிறார்கள், வீடுகளை அலங்கரிக்கிறார்கள், பூக்கோலம் தயார் செய்து ஓணம்-சத்யாவைக் கொண்டாடுகின்றனர் என்றார்.
மேலும் பிரதம மந்திரி தனது உரையில், ஓணம் பண்டிகை தற்போது சர்வதேசத் திருவிழாவாக மாறி வருவதாகவும், தற்போது தொலைதூர வெளிநாடுகளையும் இந்தப் பண்டிகை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓணம் என்பது விவசாயத்துடன் இணைந்த ஒரு திருவிழா என்றும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தின் நேரம் இது என்றும் கூறினார். விவசாயிகளின் வலிமையிலிருந்து சமூகம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். நமக்கு உணவு வழங்குபவரான புகழ்பெற்ற அன்னதாதாவிற்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள பாராட்டுக்களை நினைவு கூர்ந்த பிரதமர், கொரோனாவின் இந்தக் கடினமான காலங்களில் கூட, நமது விவசாயிகள் பயிர்களை விதைப்பதில் தங்கள் திறனை அதிகரித்து நிரூபித்துள்ளனர் என்றும் அவர்களின் விடாமுயற்சிக்கு வணக்கம் தெரிவிப்பதாகவும் கூறினார்.