பழங்குடியினர் கௌரவ தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 15 அன்று பீகார் மாநிலம் ஜமுய் செல்கிறார். இது நிலத்தின் தந்தை பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலை 11 மணியளவில், பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் வெளியிடுவார். பழங்குடியின சமூகங்களை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட ரூ.6,640 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டத்தின் கீழ் (ஜன்மான்), கட்டப்பட்ட 11,000 வீடுகளுக்கான புதுமனை புகுவிழாவில் பிரதமர் பங்கேற்கிறார். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள 23 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும், பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்காக நிலத்தின் தந்தை பழங்குடியினர் கிராம செழுமைத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 நடமாடும் மருத்துவப் பிரிவுகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், வாழ்வாதார உருவாக்கத்தை ஆதரிப்பதற்கும் 300 வன வள வளர்ச்சி மையங்களையும் பழங்குடியின மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுமார் ரூ.450 கோடி மதிப்புள்ள 10 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் ஜபல்பூரில் உள்ள இரண்டு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் சிக்கிம் கேங்டாக் ஆகிய இடங்களில் பழங்குடியின ஆராய்ச்சி மையங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியினர் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் மற்றும் சமூக மையங்களாக செயல்பட 100 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வி என்ற உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.1,110 கோடி மதிப்பில் கூடுதலாக 25 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.500 கோடி மதிப்புள்ள பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ், 25,000 புதிய வீடுகளும், ரூ.1960 கோடி மதிப்புள்ள நிலத்தந்தை பழங்கு டியினர் கிராம செழுமைத் திட்டத்தின் கீழ், 1.16 லட்சம் வீடுகளும் இதில் அடங்கும். பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 66 விடுதிகள், நிலத்தந்தை பழங்குடியினர் கிராம செழுமைத் திட்டத்தின் கீழ், 304 விடுதிகள் ரூ.50 புதிய பல்நோக்கு மையங்கள், 55 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 65 அங்கன்வாடி மையங்கள், இரத்த சோகை ஒழிப்புக்கான 6 திறன் மையங்களும், ஆசிரம பள்ளிகள், விடுதிகள், அரசு உறைவிடப் பள்ளிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான 330 திட்டங்களும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.