குடிமைப் பணிகள் நாளை முன்னிட்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி 21 ஏப்ரல் 2022 அன்று காலை 11 மணிக்கு புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குடிமைப் பணி அலுவலர்களிடம் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகள், சாதாரண குடிமக்களின் நலனுக்காக மாவட்டங்கள்/திட்டங்கள் செயல்படுத்தும் பிரிவுகள் மற்றும் மத்திய/மாநில அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட முன்னோடி திட்டங்கள் மற்றும் புதுமையான வழிமுறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காகவும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பின்வரும் ஐந்து முன்னோடி திட்டங்களில் முகவும் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு இந்த விருதுகள் 2022 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தினத்தில் வழங்கப்படும்; (i) " போஷன் அபியானில் மக்கள் பங்கேற்பை (“ஜன் பகிதாரி") ஊக்குவித்தல், (ii) விளையாடு இந்தியா திட்டத்தின் மூலம் விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல், iii) தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல், (iv) ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் முழுமையான வளர்ச்சி, (v) மனித தலையீடு இல்லாமல், தடையற்ற முழுமையான சேவைகளை வழங்குதல்.
அடையாளம் காணப்பட்ட 5 முன்னோடி திட்டங்கள் மற்றும் பொது நிர்வாகம்/சேவைகளை வழங்குதல் துறைகளில் புதுமையான வழிமுறைகளை பயன்படுத்துதல் ஆகியவைகளுக்கு மொத்தம் 16 விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்படும்.