அம்பேத்கர் பிறந்த தினமான நாளை (14.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி சத்திஷ்கர் மாநிலத்தில் உள்ள மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூருக்குச் செல்கிறார்.
மத்திய அரசின் மாபெரும் மருத்துவ உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கும்வகையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் ஒன்றைப் பிரதமர் திறந்துவைக்கிறார்.
பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாங்லா மேம்பாட்டு மையத்திற்கு அவர் சென்று பார்க்கிறார். அங்கு ஒரு மணி நேரம் இருந்து பல்வேறு நபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார். பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துப் பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்படும்.
சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ‘ஆஷா’ பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாதிரி அங்கன்வாடி மையத்திற்குச் செல்லும் அவர் அங்கன்வாடி பணியாளர்களுடனும், போஷான் அபியான் திட்டக் குழந்தைப் பயனாளிகளுடனும் உரையாடுகிறார். அடுத்து ஹாட் பஜார் மருத்துவ மையத்தைப் பார்வையிடும் பிரதமர் சுகாதாரப் பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். ஜாங்லா என்ற இடத்தில் வங்கிக் கிளை ஒன்றைத் திறந்துவைக்கும் பிரதமர், முத்ரா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கடன்அனுமதி கடிதங்களை வழங்குகிறார். கிராமப்புற பி.பி.ஓ. பணியாளர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
பிரதமர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து பழங்குடியினர் அதிகாரம் பெறுவதை நோக்கமாகக் கொண்ட வன தான் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்தத் திட்டம் சிறு வனஉற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டதின் மூலம் சந்தைப்படுத்தும் அமைப்பை உருவாக்க வகை செய்கிறது. இந்த உற்பத்திப்பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இது உதவும்.
பானுபிரதாப்பூர்-குடும் ரயில்பாதையைப் பிரதமர் காணொளிக்காட்சி மூலம் நாட்டிற்கு அர்பணித்துவைக்கிறார். டாலி ராஜ்ஹாரா மற்றும் பானுபிரதாப்பூர் இடையே புதிய ரயிலை அவர் கொடி அசைத்து இயக்கிவைக்கிறார். பீஜப்பூர் மருத்துவமனையில் டயாலிசிஸ் மையத்தையும் அவர் தொடங்கிவைக்கிறார்.
இடதுசாரித் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பிரதமரின் கிராம சாடக் திட்டத்தின்படி 1988 கி.மீ. நீளத்திற்குச் சாலை அமைக்கும் பணிக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் இதர சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பீஜப்பூர் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும், இரண்டு பாலங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கூடும் மக்களிடையே பிரதமர் உரையாற்றுவார்.