நரேந்திர மோடியின் பிரபலத்துவம் இந்தியாவுக்கு அப்பாலும் பரவியுள்ளது ! அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் ஐரோப்பா வரை நரேந்திர மோடியின் தனித்தன்மை மற்றும் பணியாற்றும் முறையைப் பார்த்து அனைவரும் ஈர்க்கப்படுவர். துடிப்புமிக்க குஜராத் உச்சி மாநாடுகளின் வெற்றி, சர்வதேச அரங்கில் நரேந்திர மோடியை ஒரு நிர்வாகியாக வெளிக்காட்டியது; நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் உச்சி மாநாடுகளில் பங்கேற்றன. உச்சி மாநாடுகளால் கிடைத்த விளைவுகள் எல்லோரும் அறிந்தவை. அவை குஜராத்துக்கு முதலீட்டையும் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வந்தன. குஜராத்தில் நடந்துள்ள பணிகள் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள குஜராத்தியர்களையும் திரு. மோடி கவர்ந்துள்ளார். வெளிநாடுகளில் `பிரவஸி பாரதிய திவஸ்' நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பேச்சாளராக திரு. மோடி இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மொரிஷியஸ், தாய்லாந்து மற்றும் உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், விரிவான பயணம் மேற்கொண்டவராக இருக்கிறார்.
அக்டோபர் 2001-ல் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாக, அப்போதைய பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் ரஷியாவுக்குச் சென்ற குழுவில் நரேந்திர மோடி இடம் பெற்றார். அங்கு அஸ்ட்ரகன் மாகாண ஆளுநருடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் குஜராத்துக்கும் ரஷியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வந்தது. முதல்வர் என்ற முறையில் மோடி ரஷியாவுக்கு அதிக அளவில் அரசுமுறைப் பயணமாகச் சென்றார். எரிசக்தித் துறையிலும்கூட முக்கியமான ஒத்துழைப்புகளை அவர் பெற்றார்.
இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற உயர்நிலைக் குழுவில் இருந்த இந்தியத் தலைவர்களில் நரேந்திர மோடியும் இருந்தார். இப்போது இஸ்ரேலுடன், குறிப்பாக மனிதவளங்கள், வேளாண்மை, தண்ணீர், மின்சாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முக்கியமான பங்களிப்பை உருவாக்கும் நிலையில் குஜராத் உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான செயல்பாடுகள் நூற்றாண்டுகள் பழமையானது. இன்றைக்கும் அது வலுவாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு முதல்வர் மோடி பல முறைகள் சென்றுள்ளார். அவர் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், தைவான் மற்றும் தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். குஜராத்தில் நடைபெற்ற, வருடாந்திர சர்வதேச பட்டம் விடும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கலாச்சார நிகழ்ச்சிகளில் இந்த நாடுகள் தீவிரமாக பங்கேற்றுள்ளன.
சீனாவுக்கு 2011-ல் பயணம் மேற்கொண்டபோது செங்டுவில் உள்ள ஹுவாவெய் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திரு. நரேந்திர மோடி பார்வையிட்டபோது எடுத்த படம்.
சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை வளர்த்ததன் மூலம் குஜராத்திற்கு ஏராளமான வாய்ப்புகளுக்கான ஜன்னல்களை முதல்வர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சீனாவுக்கு 3 முறை அதிகாரப்பூர்வ பயணங்களை அவர் மேற்கொண்டார். கடைசியாக நவம்பர் 2011-ல் பயணம் மேற்கொண்டார். அப்போது பெய்ஜிங்கில் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் அரங்கில் சீனாவின் உயர்லைத் தலைவர்களால் நரேந்திர மோடி வரவேற்கப்பட்டார். சாதாரணமாக, நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். அவருடைய பயணங்கள் குஜராத்துக்கு நிறைய முதலீடுகளைக் கொண்டு வந்தன. சிச்சுவான் மாகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சீனாவின் ஹுவாவெய் நிறுவனத்தின் உதவியுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஜூலை 2012-ல் ஜப்பான் பயணத்தின் போது உயர்நிலைத் தலைவர்களுடன் பயனுள்ள சந்திப்புகளில் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.
கீழ்த்திசை நாடுகளுடனான செயல்பாடு அத்துடன் முடிந்துவிடவில்லை. குஜராத்தில் துடிப்புமிக்க குஜராத் உச்சி மாநாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது உள்பட, முன்னணி பொருளாதார பங்குதாரராக ஜப்பான் உள்ளது. குஜராத்தின் பொருளாதார வெளித் தோற்றத்தை மாற்றி அமைக்கக் கூடிய டெல்லி மும்பை தொழில் மண்டலத்தில் (DMIC) ஜப்பான் அளித்துள்ள உதவி, ஜப்பானுக்கும் குஜராத்துக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியுள்ளது. 2012-ல் நரேந்திர மோடி ஜப்பானுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டார். அங்கு ஜப்பானின் உயர்நிலை அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடினார். திரு. ஷின்சோ அபேவையும் (ஜப்பானின் இப்போதைய பிரதமராக இருப்பவர்; அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார்) அவர் சந்தித்தார். ஜப்பானுடன் சேர்த்து, தென்கொரியாவுக்கும் முதல்வர் மோடி மேற்கொண்ட பயணங்களால் குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில், பயனுள்ள பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் நடைபெற்றன.
திரு. ஷின்சோ அபேவுடன் திரு. நரேந்திர மோடி.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அரசியல் பொருளாதாரத்தில் குஜராத்தியர்கள் கணிசமான பங்களிப்பு செய்துள்ளனர். எனவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் குஜராத்துக்கு நெருக்கமான உறவை திரு. மோடி வளர்த்தது இயற்கையாக அமைந்தது. இப்போதும்கூட அங்கு குஜராத்தியர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். கென்யா மற்றும் உகாண்டாவுக்கும் அவர் மிக வெற்றிகரமான பயணங்கள் மேற்கொண்டார். அங்கு அவருக்கு மிக உற்சாகமான வரவேற்புகள் அளிக்கப்பட்டன. நரேந்திர மோடி தலைமையின் கீழ் குஜராத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் கென்யா மற்றும் உகாண்டா அரசுகள் மிகவும் ஈர்க்கப்பட்டன. ஜனவரி 2014-ல் தென்னாப்பிரிக்காவின் தூதர் திரு மோடியை சந்தித்துப் பேசினார். மகாத்மா காந்தி இந்தியாவுக்கு திரும்பியதன் 100வது ஆண்டை 2015ல் கொண்டாடும் திரு. மோடியின் திட்டத்தால் அவர் ஈர்க்கப்பட்டார் (தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்திஜி 1915-ல் இந்தியாவுக்குத் திரும்பினார்)
தென்னாப்பிரிக்க தூதர் எப்.கே. மோருலெ தலைமையிலான உயர்நிலைக் குழுவினருடன் ஜனவரி 2014ல் திரு. நரேந்திர மோடி.
பல்வேறு சமயங்களில், நரேந்திர மோடியின் சர்வதேசப் பயணங்கள் பல இந்தியர்களின் முகங்களில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜெனிவாவுக்கு தாமே நேரில் சென்றதன் மூலம் ஸ்விட்சர்லாந்தில் இருந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியை திரும்பக் கொண்டு வருவதை அவர் உறுதி செய்து, அஸ்தியைக் கொண்டு வந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியை ஸ்விட்சர்லாந்தில் 2013-ல் திரு. மோடி பெறுகிறார்.
சீனாவில் சிறைகளில் வாடும் இந்திய வைர வியாபாரிகள் மீதான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு சீன அதிகாரிகளுக்கு 2011ல் அவர் விடுத்த வேண்டுகோள், மதிப்பிட முடியாத உதவியாக அமைந்தது. அதனால் விசாரணைகள் விரைவுபடுத்தப் பட்டதுடன், சில வியாபாரிகள் தாயகத்துக்கும் திரும்பிடவும் முடிந்தது. இந்தியாவின் பிரதமரை கேள்வி கேட்பதிலும் திரு. மோடி வலிமையானவராக இருந்தார். இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில், சர் கிரீக் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது என பிரதமரை அவர் எச்சரித்தார். உலக அரங்கிலும் உலகின் முக்கிய தலைவர்களுடன் உரசல் ஏற்பட்ட போதும்கூட, திரு. நரேந்திர மோடிக்கு `இந்தியாவே முதன்மை' என்ற நிலைப்பாடுதான் இருந்தது.
தெற்கு ஆசியாவிலும் நரேந்திர மோடி பிரபலமாக உள்ளார். 2011-ல் முதல்வர் மோடியை கராச்சி தொழில் வர்த்தக சபையினர் சந்தித்து, குஜராத்தின் வளர்ச்சி பற்றி தங்கள் தொழில் வர்த்தக சபையில் உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தனர். KCCI கட்டடத்தின் மாதிரி ஒன்றும் திரு. மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்துக்கு 1934ல் காந்திஜி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முன்னாள் பிரதமரும், இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே திரு. மோடியை சந்தித்து, குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிப் பேசுவதற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார்.
திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் குஜராத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வான நிலையில் இருந்தன. பிரிட்டன் தூதர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளின் தூதர்கள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் திரு. நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் ஆலோசனைகள் நடத்தியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர்.
பொருளாதாரம், சமூக அல்லது கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும், வாய்ப்புகள் நிறைந்த அமைவிடமாக குஜராத்தை ஐரோப்பிய நாடுகள் காண்கின்றன.
அட்லாண்டிக் பகுதியில் இருந்தும் நரேந்திர மோடியின் பணிகளுக்கு பாராட்டுகள் வந்துள்ளன. 2011-ல் அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை பிரிவின் அறிக்கை ஒன்றில், திரு. நரேந்திர மோடியை `நிர்வகிப்புத் திறன் ராஜா' என பாராட்டியுள்ளது. இந்தியாவில் சிறந்த நிர்வாகம் மற்றும் மாற்றம் ஏற்படுத்தும் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாக முதல்வர் மோடியின் தலைமையின் கீழான குஜராத் அமைந்துள்ளது என்றும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ``பொருளாதார செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தியது, சிவப்பு நாடா நடைமுறைகளை ஒழித்தது, ஊழலைக் கட்டுப்படுத்தியது'' ஆகியவற்றுக்காக அவர் பாராட்டப்பட்டார்.
உலகின் முன்னணி செய்தி சஞ்சிகைகளில் ஒன்றான TIME பத்திரிகையின் 26 மார்ச் 2012 தேதியிட்ட இதழில், `மோடி என்றால் செயல்பாடு' என்ற தலைப்பிட்ட செய்தியுடன் நரேந்திர மோடியின் படம் அட்டைப் பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டது. இந்திய தலைவர்கள் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், லால்பகதூர் சாஸ்திரி, ஆச்சார்ய வினோபா பாவே உள்ளிட்ட தலைவர்கள் TIME பத்திரிகையின் அட்டையில் இதற்கு முன்பு இடம் பெற்ற மற்ற தலைவர்கள் ஆவர். கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சியை TIME பாராட்டி இருந்தது. ``உறுதியான, முட்டாள்தனமற்ற தலைவர், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்று இறுதியில் சீனாவுக்கு இணையாக ஆக்கக் கூடியவர்'' என்று நரேந்திர மோடியை அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. TIME பத்திரிகையின் உலகெங்கும் மிகுந்த செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலில் 2014 ல் நரேந்திர மோடி இடம் பெற்றிருந்தார்.
அமெரிக்காவின் முன்னணி சிந்தனை அமைப்பாக உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனம் (Brookings Institution) குஜராத்தின் பத்தாண்டு கால வளர்ச்சியைப் பாராட்டியுள்ளது. நரேந்திர மோடி ``திறமையான மற்றும் செயல்திறன் மிக்க அரசியல் தலைவர்'' என்றும், ``சொல்வதை செயலில் காட்டுபவர்'' என்றும் அதன் நிர்வாக இயக்குநர் வில்லியம் அந்தோலிஸ் எழுதியுள்ளார். குஜராத் மாநிலம் ``சீனாவின் பல பகுதிகள் உள்பட உலகில் வேறெந்த பகுதியைவிடவும் அதிவேக வளர்ச்சி கண்ட'' மாநிலம் என குஜராத்தை அது அடையாளம் காட்டியது.
முன்னணி வணிக செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸ் (Financial Times), ``குஜராத் வளர்ச்சியை வேகமான பாதையில் செலுத்தியவர் மோடி'' என்ற தலைப்பிட்ட கட்டுரையில், குஜராத்தில் வளர்ச்சியின் வேகத்தைப் பாராட்டியுள்ளது. ``இந்தியாவில் முதலீட்டுக்கு மிகவும் உகந்த மாநிலம், ஆண்டு வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கமாக உள்ள மாநிலம்'' என்று குஜராத்தை அந்தப் பத்திரிகை வர்ணித்துள்ளது. குஜராத்தில் பத்தாண்டு காலம் நிலவிய அமைதி, குஜராத்திய சமூகத்தில் அனைத்து தரப்பிலும் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது என்றும், குறிப்பாக அதிக துடிப்பான எதிர்காலம் என்ற இளைஞர்களின் கனவை நனவாக்க முடிந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது!
ஜூன் 2013-ல் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்நாடுகளின் குழு ஒன்றுடன் திரு. நரேந்திர மோடி
மற்ற அமெரிக்க நாடுகளும் குஜராத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டன. ஜூலை 2012-ல் 7 லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளின் தூதர்கள் கொண்ட உயர்நிலைக் குழுவினரை நரேந்திர மோடி சந்தித்தார். அதில் பிரேசில், மெக்சிகோ, பெரு மற்றும் டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர். அந்தப் பிரதிநிதிகள் குஜராத்தின் வளர்ச்சியை பாராட்டியதோடு மட்டுமின்றி, தங்கள் நாடுகளுக்கும் குஜராத்துக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர். குஜராத்தில் மரங்கள், மரக் கட்டைகள் & மார்பிள் தொழில்களுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ), தொழில் மையம் அமைக்கும் யோசனையை அவர் முன்வைத்தார்.
20 மே 2012 அன்று காலையில், `குஜராத் தின' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் 12 நகரங்களைச் சேர்ந்த ஏராளமான NRI-கள் நிறைந்த கூட்டத்தில் விடியோ கான்பரன்ஸ் மூலம் நரேந்திர மோடி உரையாற்றினார். குஜராத்தில் நிகழ்ந்துள்ள பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் பற்றி விரிவான அந்த உரையில் திரு மோடி பட்டியலிட்டார். குஜராத்தில் பொருளாதாரத்தின் மூன்று துறைகளும் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்றும் அவர் பேசினார். NRI-களிடம் அந்த உரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. செயற்கைக்கோள், தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் மூலமாக உலகெங்கும் பல லட்சம் பேர் அதைக் கேட்டனர்.
அப்போதிருந்து மிக குறுகிய இடைவெளியில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் திரு. மோடி தொடர்பு கொண்டிருந்தார். மிக சமீபத்திய நிகழ்வாக புதுடெல்லியில் நடைபெற்ற பிரவஸி பாரதிய திவஸ் 2014 நிகழ்வு இருந்தது.
13 பிப்ரவரி 2014-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி போவல் காந்தி நகருக்கு வந்து திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். அவர்கள் இருவரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினர்.
வெளிநாட்டுத் தலைவர்களுடனான இந்தக் கலந்துரையாடல்களும், பாராட்டுதல்களும் முதல்வர் திரு. நரேந்திர மோடிக்கு இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் உள்ள பிரபலத்துவத்திற்கு உதாரணங்களாக உள்ளன. தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள், உலகத் தலைவர்கள் வரையில்,, குஜராத்தை ``இந்தியாவின் வளர்ச்சிக்கான என்ஜினாக'' உருவாக்கிய திரு. நரேந்திர மோடியின் முயற்சியில் பங்கேற்க விரும்புகின்றனர் !