நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மும்பையைச் சேர்ந்த பயனாளியான மேக்னா, முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ. 90,000 கடன் பெற்றது குறித்து பிரதமரிடம் தெரிவித்தார். முத்ரா திட்டம் மற்றும் ஸ்வநிதி திட்டத்தின் உதவியுடன் தமது உணவகத் தொழிலை விரிவுபடுத்தியதால், தற்போது பிரான்ஸில் தமது மகனைப் படிக்க வைக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடன் விண்ணப்பத்தின் எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை குறித்து பிரதமரிடம் அவர் கூறுகையில், விண்ணப்பித்த 8 நாட்களுக்குள் கடனைப் பெற்றதாகவும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதாகவும் திருமதி மேக்னா தெரிவித்தார்.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு கையால் தயாரிக்கப்பட்ட போர்வைகளை ஏற்றுமதி செய்வது குறித்தும் அவர் தெரிவித்தார். அரசின் அனைத்து திட்டங்களுக்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்த மேக்னா, அனைவரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேக்னாவின் வெற்றிகள் அவருக்கு மட்டுமல்லாமல், மற்ற பெண்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய உறுதி வாய்ந்த மக்களுக்கு சேவை செய்ய அரசு உறுதியுடன் உள்ளதாகக் கூறினார்.