ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சலாஹூதீன் ரப்பானி இந்தியப் பிரதமர் மோடியை இன்று மதியம் சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தானுடனான இந்திய உறவிற்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாக இந்தியப் பிரதமர் உறுதி கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான் மீதும் அதன் மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் போராட்டத்திற்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். மனித நேயம் சார்ந்த பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும், அமைதியான, ஒற்றுமையான, ஜனநாயகத் தன்மைவாய்ந்த, வளமான தேசத்தை கட்டியமைப்பதிலும் இந்தியாவின் முழு ஆதரவு ஆப்கானிஸ்தானுக்கும் அதன் மக்களுக்கும் என்றும் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வெளிநாட்டு அமைச்சர் ரப்பானி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவரித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்வகையில் பார்த்துக்கொள்வது அவசியம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான தளத்தகை கூட்டாண்மை மன்றத்தின் 2வது சந்திப்பை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இணைந்து தலைமை தாங்குவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ரப்பானி இந்தியா வந்துள்ளார்.