சரக்கு மற்றும் சேவைகள் வரியை (GST) அமல் செய்வதற்கான ஆயத்தநிலை குறித்து 2016 செப்டம்பர் 14 ஆம் தேதி பிரதமர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர், நிதித் துறையின் இரண்டு இணை அமைச்சர்கள், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2017 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி.யை அமல் செய்வது என்பதில் எந்த மாற்றம் இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்காக, பிரதமர் இந்தக் கூட்டத்தை நடத்தினார். ஜி.எஸ்.டி.யை அமல் செய்வதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள், மாதிரி ஜி.எஸ்.டி. சட்டங்கள் மற்றும் விதிகளை உருவாக்க வேண்டியது குறித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு உருவாக்குதல் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். அனைத்து நடவடிக்கைகளும் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். சட்டப்பிரிவு 279 A-வில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான பரிந்துரைகளை உரிய காலத்தில் செய்வதற்கு, தீவிரமாக கூட்டங்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் நடத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். மாதிரி ஜி.எஸ்.டி. சட்டங்கள், ஜி.எஸ்.டி. விகிதங்கள், ஜி.எஸ்.டி. அமல் செய்யப்படும் அல்லது விலக்கு அளிக்கப்படும் சரக்கு மற்றும் சேவைகளும் இதில் அடங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.