ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவரான திரு சார்லஸ் மிக்கேலின் அழைப்பை ஏற்று, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அனைத்து 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் பங்கேற்ற இக்கூட்டம் ஹைப்ரிட் முறையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம்+27 வடிவத்தில் இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் நடத்தும் முதல் கூட்டம் இதுவாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் போர்ச்சுகீசிய தலைமையின் முயற்சியின் காரணமாக இக்கூட்டம் நடைபெற்றது.
ஜனநாயகம், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய-ஐரோப்பிய யூனியனின் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்பு; கொவிட்-19, பருவ நிலை மற்றும் சுற்றுச்சூழல், வர்த்தகம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் அகிய மூன்று முக்கிய துறைகள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துதல், பொருளாதார மீட்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல் ஆகியவற்றில் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். கொவிட் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொள்வதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சரியான நேரத்தில் அளித்த உதவிக்காக இந்தியா பாராட்டு தெரிவித்தது.
நடுநிலையான மற்றும் விரிவான சுதந்திர வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் மீதான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை விரைந்து நிறைவேற்றுவதற்காக இவை இரண்டின் மீது ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும். இருதரப்பையும் அவற்றின் முழு திறனை அடைய வைப்பதே இதன் மிகப்பெரிய பலனாகும். உலக வர்த்தக நிறுவன விஷயங்கள், ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, சந்தை அணுகல் மற்றும் விநியோக சங்கிலியின் உறுதித்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, விரிவுப்படுத்துவது ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகளையும் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தன.
டிஜிட்டல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் லட்சியமிக்க மற்றும் விரிவான ‘தொடர்பு கூட்டை’ இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கின.
சமூக, பொருளாதார, நிதித்துறை சார்ந்த, பருவ நிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் உறுதிகளுக்கான பகிர்ந்துகொள்ளப்படும் கொள்கைகளின் மீது இந்த கூட்டு நிறுவப்படும். தொடர்பு திட்டங்களுக்கு தனியார் மற்றும் அரசு நிதியை பெறுவதற்கு இந்த கூட்டு பங்காற்றும். இந்தோ-பசிபிக் உள்ளிட்ட மூன்றாம் நாடுகளில் தொடர்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான புதிய கூட்டணிகளை இது உருவாக்கும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின் லட்சியங்களை அடைவதற்கான தங்களது உறுதியை இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் வெளிப்படுத்தினர். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் மீது உறுதியை வெளிப்படுத்துதல், மற்றும் காப்26-ஐ கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகளை (நிதி உள்ளிட்ட) ஆராய்தல் ஆகியவற்றின் மீது தலைவர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.
சிடிஆர்ஐ-யில் இணைவதற்கான ஐரோப்பிய யூனியனின் முடிவை இந்தியா வரவேற்றது.
5ஜி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட கணினியல் போன்ற டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டது. செயற்கை நுண்ணறிவுக்கான கூட்டு பணிக்குழு மற்றும் டிஜிட்டல் முதலீட்டு அமைப்பு ஆகியவற்றை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சைபர் பாதுகாப்பு, கடல்சார் செயல்பாடுகள் போன்ற பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்களில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் மீது தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
சுதந்திரமான, திறந்தவெளி, அனைத்தையும் உள்ளடக்கிய, விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக்கின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த தலைவர்கள், இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக்குக்கான ஐரோப்பிய யூனியனின் புதிய யுக்தி ஆகியவற்றில் நெருங்கி பணியாற்ற ஒத்துக்கொண்டனர்.
தலைவர்களின் கூட்டத்தை ஒட்டி, இந்திய-ஐரோப்பிய யூனியன் வட்டமேசை ஏற்பாடு செய்யப்பட்டது. பருவநிலை, டிஜிட்டல் மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்காக இது நடத்தப்பட்டது. இந்திய நிதி அமைச்சகம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவற்றுக்கிடையே புனே மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 150 மில்லியன் யூரோ மதிப்பிலான நிதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்திய-ஐரோப்பிய யூனியன் கூட்டிற்கு புதிய திசையை காட்டும் வகையிலும், ஜூலை 2020-ல் 15-வது இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட லட்சியமிக்க இந்திய-ஐரோப்பிய ஒன்றிய செயல்திட்டம் 2025-ஐ செயல்படுத்துவதற்கான புதிய உந்துசக்தியை அளிக்கும் வகையிலும் இந்திய-ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கிடையேயான கூட்டம் அமைந்தது.