முனிச்சிலிருந்து திரும்புகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானை அவர் சந்தித்துப் பேசினார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் கடைசியாக அபுதாபி சென்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நேரடியாக நடைபெறும் முதல் சந்திப்பாக இது அமைந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் திரு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயானின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதே பிரதமர் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். திரு ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான கேந்திர கூட்டுமுயற்சியின் பல்வேறு அம்சங்கள் பற்றி இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்ற காணொலி உச்சிமாநாட்டில் இருவரும் சந்தித்தபோது விரிவான பொருளாதார கூட்டு உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை இந்த ஒப்பந்தம் மேலும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 72 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி தலமாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது. இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து, தற்போது 12 மில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்துள்ளது.
வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், ராணுவம், திறன்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வரும் ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கையை காணொலி உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் வெளியிட்டிருந்தனர். இந்தத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கு இருவரும் திருப்தி தெரிவித்தனர்.