1. அர்ஜெண்டினாவின் பியூனஸ் அய்ரஸில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் தலைவர்களின் சாதாரண முறையிலான வருடாந்தர கூட்டத்திற்காக நவம்பர் 30, 2018 அன்று பிரேசில் கூட்டுக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, இந்தியக் குடியரசு, சீனாவின் மக்கள் குடியரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு ஆகியவற்றின் அரசுத் தலைவர்களாகிய நாங்கள் சந்தித்துள்ளோம். 2018-ல் ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்படுவதற்காக அர்ஜெண்டினா அரசுக்கு எங்களது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. சர்வதேச அரசியல், பாதுகாப்பு, உலகப் பொருளாதார – நிதி பிரச்சனைகள், அதேபோல் நீடித்த வளர்ச்சி எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை பற்றி நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளோம். அமைதி மற்றும் ஸ்திரமான உலகம், ஐ.நா.வின் மத்தியப் பங்களிப்பு, ஐ.நா. சாசனத்தில் இடம்பெற்றுள்ள நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள், சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்தல், ஜனநாயகத்தை மேம்படுத்துதல், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு எங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறோம். பலவகையான தன்மைகளை வலுப்படுத்தவும், நியாயமான, நீதியான, சமமான, ஜனநாயக மற்றும் பிரதிநிதித்துவம் கொண்ட சர்வதேச ஒழுங்குமுறைக்கும் ஒன்றுபட்டு உழைப்பது என்ற உறுதிப்பாட்டையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
3. பிரிக்ஸ் நாடுகள் சிலவற்றுக்கு எதிராக நடத்தப்படுவது உட்பட தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். எங்கே நடத்தினாலும், யாரால் நடத்தப்பட்டாலும், அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதங்களுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் அடிப்படையில், ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கூட்டு முயற்சிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஜொகன்னஸ்பர்க் பிரகடனத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து சக்திகள் உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் அனைத்து நாடுகளும் விரிவான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
4. வெளிப்படையான, பாகுபாடற்ற, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்ய உலக வர்த்தக நிறுவனத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் அடிப்படையிலான பலவகை வர்த்தக முறைக்கு முழு ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். உலக வர்த்தக அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், உலக வர்த்தக நிறுவன உறுப்பினர்களுடன் வெளிப்படையான பயன்தரத்தக்க, விவாதங்களை நடத்துவதற்குப் பொதுவான தயார் நிலையை நாங்கள் தெரிவிக்கிறோம்.
5. உலக வர்த்தக நிறுவனத்தின் உணர்வும், விதிகளும் பாகுபாடான மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மாறானதாக இருக்க வேண்டும். உலக வர்த்தக நிறுவனத்தின் இத்தகைய சீரற்ற நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். உலக வர்த்தக நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளை அவர்கள் பற்றி நிற்கவேண்டும். பாகுபடுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள இதுபோன்ற நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
6. தற்போதைய மற்றும் எதிர்காலச் சவால்களைச் சந்திப்பதற்கு உலக வர்த்தக நிறுவனத்தின் பொருத்தப்பாட்டையும், தீவிரத்தையும், விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் அதனை மேம்படுத்துவதற்கான பணிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்தப் பணியில் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒட்டு மொத்த மாண்பும், அடிப்படைக் கோட்பாடுகளும் காக்கப்படவேண்டும். மேலும், உலக வர்த்தக நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் குறிப்பாக வளர்ந்து வரும் உறுப்பினர்களின் நலன்கள் பிரதிபலிக்க வேண்டும்.
7. உலக வர்த்தக நிறுவனம் முறையாக செயல்படுவதற்குக் குறைதீர்ப்பு முறை மிகவும் அவசியமானதாகும். உலக வர்த்தக நிறுவனத்தின் தீவிரமான செயல்பாடுதான் அதனுடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்துவதற்கான நம்பிக்கையை உறுப்பினர்களுக்கு வழங்கும். உலக வர்த்தக நிறுவனத்தின் குறைதீர்ப்பு முறை நிலையாகவும், சரியாகவும் செயல்பட முக்கியமான முன்தேவையாக மேல் முறையீட்டு அமைப்பின் தேர்வு முறைக்கு உடனடியான முயற்சி தேவை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
8. மாறிவரும் காலத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதையும், சர்வதேச வர்த்தகத்தில் அனைத்து நாடுகளும் பங்கேற்கதையும், உலகப் பொருளாதார நிர்வாகத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்வதையும் கருத்தில் கொண்டு, உலக வர்த்தக நிறுவனம் செயல்படுவதற்கு மற்ற உறுப்பினர்களுடன் கூட்டாகவும், ஒருங்கிணைந்தும் பணியாற்றவும், தகவல் தொடர்பையும், ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தவும் எங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் நாங்கள் உறுதி செய்கிறோம்.
9. ஜி-20 அமைப்பின் அர்ஜெண்டினா தலைமை நியாயமான, நீடித்த வளர்ச்சிக்கு பொதுக்கருத்தைக் கட்டமைப்பது என்ற மையப்பொருளை வைத்திருப்பதையும், பணிக்கான எதிர்காலம் வளர்ச்சிக்கான கட்டமைப்பு, நீடிக்கவல்ல எதிர்காலத்திற்கு உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் நாங்கள் வரவேற்கிறோம்.
10. வளர்ச்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். உலகக் கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்குப் பங்களிப்பு செய்ய உறுதியேற்கிறோம். புதிய வளர்ச்சி வங்கி உட்பட தேசிய மற்றும் கூட்டு முன்முயற்சிகள் வழியாக நீடித்த மற்றும் பேரிடர் நிவாரணக் கட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டவும் உறுதியேற்கிறோம்.
11. போதிய நிதி ஆதாரங்கள் மற்றும் ஒதுக்கீடு அடிப்படையிலான சர்வதேச செலாவணி நிதியம் என்பதுடன் வலுவான உலக நிதிப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் யோசனை தெரிவிக்கிறோம். இதற்காக 2019 வசந்த கால கூட்டத்திற்கு அல்லது 2019 வருடாந்தர கூட்டத்திற்கு முன், மிகக் குறைந்த வளர்ச்சி கொண்டே நாடுகளின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு, உலகப்பொருளாதாரத்திற்குத் தங்களின் பங்களிப்புகளைப் பிரதிபலிக்கச் செய்யும் விதத்தில், செயலூக்கத்துடன் வளர்ந்து வரும் நாடுகளின் அதிகரிக்கும் தேவைகளை உறுதி செய்யும் விதத்தில், புதிய ஒதுக்கீட்டு விதிமுறை உள்ளிட்ட ஐ.எம்.எஃப்.-பின் 15-வது ஒதுக்கீட்டுப் பொது ஆய்வை நிறைவு செய்ய நாங்கள் உறுதிகூறுகிறோம்.
12. நீடித்த வளர்ச்சி மற்றும் அதற்கான இலக்குகளைக் கொண்ட 2030-க்கான செயல்திட்டத்தை அமலாக்குவதற்கான அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இது 2030-க்குள் வறுமையை ஒழிக்கும் இலக்கை நோக்கி சீராகவும், ஒருங்கிணைந்த முறையிலும், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் என்ற முப்பரிமாணங்களில், சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, வெளிப்படைத் தன்மை, புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சி, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும். வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஓ.டி.ஏ உத்தரவாதங்களை முழுமையாக உரிய காலத்தில் மதிப்பளித்து செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் அடிஸ் அபாபா செயல்திட்டத்தின்படி வளரும் நாடுகளுக்குக் கூடுதலாக, வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.
13. உலகப் பொருளாதார விரிவாக்கம் தொடர்கிறது. இருப்பினும், அது சீரற்றத் தன்மையையும், கீழ்நோக்கிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட பெரிய நாடுகளின் கொள்கைக் காரணமாக எதிர்மறையான செயல்பாடுகள் இருப்பதற்கும் வளர்ந்து வரும் சில சந்தைப் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கத்திற்கு இது முக்கியமான காரணமாக இருந்தது. அண்மையில் காணப்பட்டதற்கும் நாங்கள் கவலைக் கொள்கிறோம். இத்தகைய நிலை பரவாமல் தடுக்க ஜி-20 மற்றும் இதர அமைப்புகளில் இருப்போர் கூட்டாளி உணர்வுடன் கொள்கைக்கான பேச்சுவார்த்தையையும், ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
14. பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை யு.என்.எஃப்.சி.சி.சி. கோட்பாடுகளின் அடிப்படையில் பாரீஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் பொதுவாகவும், அதே சமயம் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகவும் உள்ள பொறுப்புகளையும், அந்தந்த நாட்டின் சக்திக்கு ஏற்ப செயல்படுத்துவது என்ற கொள்கையையும் வளர்ச்சி அடைந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற அம்சத்தையும், வளரும் நாடுகளின் திறனை வளர்க்க வளர்ச்சி அடைந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பாரீஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சமன்பட்ட முடிவுக்கு அனைத்து நாடுகளும் வரவேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான 24 ஆவது மாநாட்டின் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கென்று உள்ள பசுமை பருவநிலை நிதியை புதுப்பிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
2018 ஜூலை 25-27 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நடந்த 10 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டு வெற்றிக்காக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான உறவை இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். புதிய தொழில் புரட்சியில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு பிரிக்ஸ் அமைப்பின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பிரிக்ஸ் அமைப்பின் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு அரங்கு மற்றும் சாவ் பாலோவில் புதிய வளர்ச்சி வங்கிக்கான அமெரிக்க மண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரம், அமைதி, பாதுகாப்பு, தென்னாப்பிரிக்கா தலைமையின் கீழ் மக்களுக்கு இடையிலான பரிவர்த்தனை, ஆகியவற்றில் நாங்கள் திருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாடு மற்றும் அதற்கு முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை செயல்படுத்துவதற்கு எங்கள் உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
15. 2019-ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெறவிருக்கும் 11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்கவுள்ள பிரேசிலுக்கு எங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கிறோம்.