சிங்கப்பூர், வங்கதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 9 செப்டம்பர் 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) என்பது இந்தியாவின் ஜி20 தலைமையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை எளிதாக்குவதன் மூலமும், நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், வலுவான தர அமைப்பை வடிவமைப்பதன் மூலமும், பரந்த அளவிலான பங்குதாரர்களின் பங்கேற்பின் வாயிலாக சான்றிதழ் அளிப்பதன் மூலமும் உயிரி எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டை விரைவுபடுத்த கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி, அறிவுக் களஞ்சியமாகவும், வல்லுநர் மையமாகவும் செயல்படும். உயிரி எரிபொருட்களின் முன்னேற்றம் மற்றும் பரவலான ஏற்புக்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஜி.பி.ஏ ஒரு வினையூக்கி தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.