எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.
நண்பர்களே, மழையின் இந்த நேரம் தான் மரம் நடுதலுக்கும், நீர்ப்பாதுகாப்பிற்கும் மிக உகந்த, அவசியமான நேரம் ஆகும். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் போது உருவாக்கப்பட்ட 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் கூட மெருகேறியிருக்கிறது. இப்போது 50,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது நாட்டுமக்கள் முழுமையான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வோடு, நீர்ப்பாதுகாப்பிற்காக புதியபுதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சில காலம் முன்னதாக, நான் மத்திய பிரதேசத்தின் ஷஹடோலுக்குச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அங்கே பகரியா கிராமத்தின் பழங்குடியினச் சகோதர சகோதரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அங்கே இயற்கையைப் பராமரிப்பது தொடர்பாகவும், நீரைப் பராமரிப்பது தொடர்பாகவும் பேசினோம். பகரியா கிராமத்தின் பழங்குடியின சகோதர சகோதரிகள் இது தொடர்பான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. இங்கே, நிர்வாகத்தின் உதவியோடு, மக்கள் கிட்டத்தட்ட நூறு குளங்களை, நீர் மீள்நிரப்பு அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள். மழைநீர் இப்போது இந்தக் குளங்களுக்குச் செல்கிறது, மேலும் குளங்களின் நீரானது நிலத்தடி நீராக மாறுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் நிலத்தடி நீரின் மட்டம் மெல்ல மெல்ல மாற்றம் காணும். இப்போது அனைத்து கிராமவாசிகளும், அந்தப் பகுதி முழுவதிலும் சுமாராக 800 குளங்களை மீள்நிரப்பு அமைப்புக்களாக மாற்றும் இலக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதைப் போன்றே ஒரு உற்சாகமளிக்கும் செய்தி, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக, உ.பியில், ஒரு நாளில் மட்டும் 30 கோடி மரங்கள் நடும் சாதனை புரியப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் தொடக்கத்தை மாநில அரசு செய்தது, இதை முழுமையடையச் செய்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். இப்படிப்பட்ட ஒரு முயற்சி, மக்களின் பங்களிப்போடு கூடவே மக்கள் விழிப்புணர்வுக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. நாமனைவரும், மரம் நடுதல், நீரைப் பராமரித்தல் போன்ற இந்த முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, இது ச்ராவணம் என்று சொல்லப்படும் புனிதமான ஆடி மாதம். சதாசிவனான மகாதேவரை வணங்கிப் பூசிப்பதோடு கூடவே, இந்த மாதம் பசுமை மற்றும் சந்தோஷங்களோடு தொடர்புடையது. ஆகையால், இந்த சிரவண மாதம் ஆன்மீகத்தோடு கூடவே கலாச்சாரப் பார்வையும் மகத்துவமும் நிறைந்தது. சிராவண மாதத்தின் ஊஞ்சல்கள், சிராவணத்தின் மருதாணி, சிராவணத்தின் உற்சவங்கள், அதாவது சிராவணம் என்றாலே ஆனந்தம், உல்லாசம் தான்.
நண்பர்களே, நமது இந்த நம்பிக்கை மற்றும் இந்தப் பாரம்பரியங்களில் மேலும் ஒரு பக்கமும் உண்டு. நமது இந்தத் திருநாட்களும் பாரம்பரியமும் நமக்கு இயக்கத்தை அளிக்கின்றன. சிராவணத்திலே சிவத்தைப் பூசிக்கும் வகையிலே, எண்ணற்ற பக்தர்கள் காவட் யாத்திரையை மேற்கொள்கிறார்கள். சிராவண மாதம் காரணமாக இந்த நாட்களில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு நிறைய பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றார்கள். பனாரஸ் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் இருக்கிறது. இப்போது காசிக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அயோத்தி, மதுராபுரி, உஜ்ஜைன் போன்ற புனிதத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது, அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. இவையனைத்தும் நமது கலாச்சார விழிப்புணர்வின் விளைவு தான். இப்போது உலகத்தோர் அனைவரும் நமது புனிதத்தலங்களை நோக்கி வருகிறார்கள். அந்த வகையில் எனக்கு இரண்டு அமெரிக்க நண்பர்களைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது; இவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து இங்கே அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள வந்திருந்தார்கள். இந்த அயல்நாட்டு விருந்தினர்கள் அமர்நாத் யாத்திரையோடு தொடர்புடைய சுவாமி விவேகானந்தரின் அனுபவங்கள் குறித்தும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு அதிக கருத்தூக்கத்தை அளித்து, இவர்கள் தாங்களே அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதை இவர்கள் பகவான் போலேநாத்தின் ஆசிகளாகவே கருதுகிறார்கள். இது தான் பாரதத்தின் சிறப்பு; அதாவது அனைவரையும் அரவணைக்கிறது, அனைவருக்கும் ஏதோ ஒன்றை அளிக்கிறது. இதே போல, ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பெண்மணியான Charlotte Shopa - ஷார்லோட் ஷோபா அவர்களை, சில நாட்கள் முன்பாக நான் ஃப்ரான்ஸ் நாடு சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. இவர் யோகக்கலை பயில்பவர், பயிற்றுநரும் கூட. இவருடைய வயது 100க்கும் அதிகம். இவர் ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்டார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக யோகக்கலையைப் பயின்று வருகிறார். இவர் தனது உடல்நலம் மற்றும் 100 ஆண்டுகள் வாழ முடிந்தமைக்கும் முழுக்காரணம் யோகக்கலை என்று கூறுகிறார். உலகிலே, இவர் பாரதத்தின் யோக விஞ்ஞானம், இதன் சக்தியின் ஒரு முக்கியமான முகமாக ஆகியிருக்கிறார். இவரிடமிருந்து அனைவரும் கற்க வேண்டும். நாம் நமது பாரம்பரியத்தை அங்கீகரிப்பதோடு கூடவே, அதைப் பொறுப்புணர்வோடு உலகின் முன்பாக சமர்ப்பிக்கவும் வேண்டும். இதே போன்ற ஒரு முயற்சி சில நாட்களாக உஜ்ஜயினில் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நாடெங்கிலுமிருந்து 18 ஓவியர்கள், புராணங்களை ஆதாரமாகக் கொண்ட கவரக்கூடிய ஓவியக்கதைகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஓவியங்கள் பூந்தி பாணி, நாத்துவாரா பாணி, பஹாடி பாணி, அபப்ரம்ஷ் பாணி போன்ற பல சிறப்பான பாணிகளில் உருவாக்கப்படும். இவை உஜ்ஜைனின் திரிவேணி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். அதாவது சில காலம் கழித்து நீங்கள் உஜ்ஜைன் சென்றால், மஹாகால் மஹாலோகோடு கூடவே, மேலும் ஒரு தெய்வீகமான இடத்தை நீங்கள் தரிசிக்கலாம்.
நண்பர்களே, உஜ்ஜைனில் உருவாக்கம் பெற்று வரும் இந்த ஓவியங்களைப் பற்றிப் பேசுகையில், மேலும் ஒரு விசித்திரமான ஓவியம் என் நினைவிற்கு வருகிறது. இந்தச் சித்திரத்தை ராஜ்கோட்டின் ஒரு ஓவியரான प्रभात सिंग मोडभाई बरहाट, பிரபாத் சிங் மோட்பாய் பர்ஹாட் அவர்கள் உருவாக்கினார். இந்த ஓவியம், சத்ரபதி வீர சிவாஜி மஹாராஜின் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. சத்ரபதி சிவாஜி மஹராஜாவின் ராஜ்யாபிஷேகத்திற்குப் பிறகு தனது குலதேவியான துல்ஜா மாதாவை தரிசனம் செய்யச் சென்றதை ஓவியரான பிரபாத் பாய் வரைந்திருந்தார். நமது பாரம்பரியங்கள், நமது மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் அவற்றைப் பராமரிக்க வேண்டும், அவையாகவே நாம் வாழ வேண்டும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று இந்தத் திசையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என் இனிய நாட்டுமக்களே, பல முறை நாம் சூழலியல், தாவரங்கள், விலங்குகள், உயிரிப் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும் போது, இது ஏதோ தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் என்று சிலருக்குப்படுகிறது, ஆனால் அப்படி கிடையாது. நாம் உண்மையிலேயே இயற்கையின் பால் நேசம் கொண்டவர்கள் என்றால், நாம் சின்னச்சின்ன முயற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் வடவள்ளியைச் சேர்ந்த ஒரு நண்பரான சுரேஷ் ராகவனுக்கு ஓவியம் வரைதல் என்றால் கொள்ளைப் பிரியம். ஓவியம் என்பது தூரிகை மற்றும் கலையோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், தனது ஓவியங்கள் வாயிலாக மரம் செடிகளையும், உயிரினங்களையும் பற்றிய தகவல்களைப் பராமரிக்க வேண்டும் என்று ராகவன் அவர்கள் தீர்மானித்தார். பல்வேறு தாவரங்கள்-விலங்குகளின் ஓவியங்களைத் தீட்டி அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்போது இவர் வழக்கொழிந்து போகும் கட்டத்தில் இருக்கும் பல டஜன் பறவைகள், விலங்குகள், பகட்டு வண்ணமலர்ச் செடியான ஆர்கிட் தாவரங்களை ஓவியங்களாக வரைந்திருக்கிறார். கலையின் வாயிலாக இயற்கைக்குச் சேவை புரியும் இந்த எடுத்துக்காட்டு உண்மையிலேயே அற்புதமானது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று உங்களுடன் மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக சமூக ஊடகத்தில் ஒரு அற்புதமான பேரார்வத்தை ஏற்படுத்தும் விஷயம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மிகவும் துர்லபமான, பண்டைய கலைப்படைப்புக்களை அமெரிக்கா நமக்குத் திருப்பி அளித்தது. இந்தச் செய்தி வெளியான பிறகு சமூக ஊடகங்களில் இந்தக் கலைப்பொருட்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டது. இளைஞர்கள் தங்கள் மரபின் மீது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்கள். பாரதத்திற்கு மீண்டு வந்த இந்த கலைப்பொருட்கள் 2500 ஆண்டுகள் முதல் 250 ஆண்டுகள் வரை பழமையானவை. இந்த அரிய பொருட்கள், தேசத்தின் பல்வேறு பகுதிகளோடு தொடர்புடையன என்பது உங்களுக்கு மேலும் சந்தோஷத்தை அளிக்கலாம். இவை Terracotta – சுடுமண், கல், உலோகம் மற்றும் மரத்தால் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் சில உங்களுக்கு பேராச்சரியத்தை அளிக்க வல்லவை. நீங்கள் இவற்றைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். இவற்றில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அழகான Sandstone Sculpture, மணற்பாறைச் சிற்பம் உண்டு. இது நடனமாடும் ஒரு அப்சரசின் கலைப்படைப்பு, இது மத்திய பிரதேசத்தோடு தொடர்புடையது. சோழர்கள் காலத்திய பல விக்ரகங்களும் இதிலே அடங்கும். தேவி, முருகப்பெருமானின் விக்ரகங்கள் எல்லாம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, இவை தமிழ்நாட்டின் மகோன்னதமான கலாச்சாரத்தோடு தொடர்புடையவை. பகவான் கணேசனின் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விக்கிரகமும் பாரதம் திரும்பியிருக்கிறது. லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரின் ஒரு விக்கிரகம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது, இதிலே இவர்கள் இருவரும் நந்தியின் மீதமர்ந்து கொண்டிருக்கிறார்கள். கற்களால் உருவாக்கப்பட்ட ஜைன தீர்த்தங்கரர்களின் இரு விக்கிரகங்களும் பாரதம் மீண்டிருக்கின்றன. பகவான் சூரிய தேவனின் இரு திருவுருவங்களும் உங்கள் மனதைக் கொள்ளை கொண்டு விடும். இவற்றில் ஒன்று மணல்பாறையால் உருவானது. மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் மரத்தாலான ஒரு பலகை உள்ளது, இது பாற்கடலைக் கடைதல் நிகழ்வை முன்னிறுத்துவது. 16ஆம்-17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பலகை தென்னாட்டைச் சேர்ந்தது.
நண்பர்களே, இங்கே நான் குறைவான பெயர்களையே குறிப்பிட்டிருக்கிறேன்; ஆனால் பார்க்கப் போனால் இந்தப் பட்டியல் மிக நீண்டது. நமது இந்த விலைமதிப்பற்ற மரபுச்சொத்தை நமக்குத் திருப்பியளித்தமைக்கு நான் அமெரிக்க அரசுக்கு என் நன்றிகளை அளிக்கிறேன். 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் கூட நான் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட போது, அப்போதும் கூட பல கலைப்பொருட்கள் பாரதத்திற்குத் திருப்பியளிக்கப்பட்டன. இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது கலாச்சாரச் சின்னங்கள் களவாடப்படுவதைத் தடுக்கும் விஷயம் தொடர்பாக, நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலமாக வளமான நமது பாரம்பரியத்தின்பால் நாட்டுமக்களின் பிடிப்பு மேலும் ஆழமாகும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, தேவபூமியான உத்தராகண்டினைச் சேர்ந்த சில அன்னையர்-சகோதரியர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், இது என்னை உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய மகனுக்கு, தங்களுடைய சகோதரனுக்கு நெஞ்சு நிறையநிறைய ஆசிகளை நல்கி விட்டு எழுதியிருக்கிறார்கள், நமது கலாச்சார அடையாளமான போஜபத்ரம் – புரசு இலை எங்கள் வாழ்வாதாரத்திற்கான சாதனமாகும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். எதைப் பற்றிக் கூறுகிறார்கள் என்று தானே எண்ணமிடுகிறீர்கள்?
நண்பர்களே, இந்தக் கடிதத்தை எனக்கு எழுதியிருப்பவர்கள் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த நீதி-மாணா பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண்கள். இந்தப் பெண்கள் தாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புரசு இலை மீது ஒரு அருமையான கலைப்படைப்பை ஏற்படுத்தி எனக்கு அளித்தவர்கள். இந்தப் பரிசைப் பெற்று நான் உணர்ச்சிவயப்பட்டேன். பண்டைய காலம் தொட்டே நமது நாட்டிலே நமது சாஸ்திரங்கள், நமது புனித நூல்கள் ஆகியன புரசு இலைகளிலே எழுதப்பட்டு வந்தன. மகாபாரதமுமே கூட இதே போன்று புரசு இலைகளில் எழுதப்பட்டது. இன்று தேவபூமியைச் சேர்ந்த இந்தப் பெண்கள், இந்த புரச இலைகளிலே, மிகவும் அழகான கலைப்படைப்புக்களையும், நினைவுப்பரிசுகளையும் உருவாக்கி வருகிறார்கள். மாணா கிராமத்தின் யாத்திரையின் போது, நான் அவர்களின் இந்த தனித்தன்மையான முயற்சியைப் பாராட்டியிருந்தேன். நான் தேவபூமிக்கு வரும் பயணிகளிடமும் வேண்டிக் கொண்டேன், நீங்கள் அதிக அளவில் உள்ளூர்ப் பொருட்களை வாங்குங்கள் என்றேன். இது அங்கே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று புரச இலையில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள், நல்ல விலைக்கு வாங்குகிறார்கள். புரச இலையின் இந்த பண்டைய பாரம்பரியம், உத்தராகண்டின் பெண்களின் வாழ்க்கையிலே மகிழ்ச்சியின் புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்பியிருக்கிறது. புரச இலையால் புதியபுதிய பொருட்களை உருவாக்குவதற்காக மாநில அரசும், பெண்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருவதை அறிந்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மாநில அரசு புரச மரத்தின் மிக அரிய வகைகளைப் பாதுகாக்கவும் கூட ஒரு இயக்கத்தைத் தொடக்கி இருக்கிறது. எந்தப் பகுதிகள் தேசத்தின் கடைநிலைகள் என்று பார்க்கப்பட்டதோ, அவை இப்போது தேசத்தின் முதன்மை கிராமங்களாக வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறி வருகின்றன. இந்த முயற்சிகள் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதோடு, பொருளாதார முன்னேற்றத்தின் காரணிகளாகவும் ஆகி வருகின்றன.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை வந்திருக்கும் பல கடிதங்கள் மனதிற்கு மிகுந்த நிறைவையளிப்பவையாக இருக்கின்றன. இவை, தற்போது தான் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் இஸ்லாமியப் பெண்கள் எழுதியிருப்பவை. பல காரணங்களுக்காக அவர்களின் இந்தப் பயணம் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பெண்கள் தங்களுடைய புனித ஹஜ் யாத்திரையை, எந்த ஒரு ஆணின் துணையும் இல்லாமல் நிறைவு செய்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை 50-100 அல்ல, 4,000த்திற்கும் அதிகமாகும், இது ஒரு பெரிய மாற்றமாகும். முதலில், இஸ்லாமியப் பெண்கள் மெஹ்ரம் அதாவது ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது. மனதின் குரல் மூலமாக நான் சவூதி அரப் அரசுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை வெளிப்படுத்துகிறேன். ஆண் துணை இல்லாமல் ஹஜ் செல்லும் பெண்களுக்காக, விசேஷமாக பெண் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே ஹஜ் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றங்கள் முழுமையாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. நமது இஸ்லாமிய தாய்மார்-சகோதரிமார்கள் இது தொடர்பாக எனக்கு நிறைய எழுதியிருக்கிறார்கள். இப்போது அதிகம் பேர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியோர், குறிப்பாக நமது தாய்மார்-சகோதரிகள் கடிதங்கள் வாயிலாக எனக்கு நல்லாசிகள் வழங்கியிருக்கிறார்கள், இது மிகவும் உத்வேகமளிப்பதாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, ஜம்மு-கஷ்மீரத்திலே இரவு நேர இசை நிகழ்ச்சிகள் ஆகட்டும், உயரங்களில் பைக்குகளின் பயணங்களாகட்டும், சண்டீகட்டில் உள்ளூர் க்ளப்புகள் ஆகட்டும், பஞ்சாபின் ஏகப்பட்ட விளையாட்டுக் குழுக்களாகட்டும், இவை பற்றியெல்லாம் கேட்கும் போது கேளிக்கை பற்றிப் பேசப்படுகிறது, சாகஸங்கள் பற்றிப் பேசப்படுகிறது என்று தானே உங்களுக்குப் படுகிறது!! ஆனால் விஷயமே வேறு. இந்த ஏற்பாடுகள் அனைத்துமே ஒரு பொதுக் காரணத்தோடு இணைந்தவை. அது என்ன பொதுநோக்குக்காரணம்? போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தான் இந்த பொதுநோக்குக் காரணம். ஜம்மு-கஷ்மீரத்தின் இளைஞர்களை போதைப் பொருட்களிலிருந்து காக்க பல நூதனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கே இரவுநேர இசை நிகழ்ச்சிகள், பைக் தொடர்கள் பயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சண்டீகட்டிலே இந்தச் செய்தியைப் பரப்ப, உள்ளூர் கிளப்புகள் இதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் இவற்றை வாதா கிளப்புகள் என்று அழைக்கிறார்கள். VADA, வாதா என்று ஆங்கில முதலெழுத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல். Victory Against Drugs Abuse, அதாவது போதைப் பொருட்களுக்கு எதிரான வெற்றி என்பது பொருள். பஞ்சாபின் பல விளையாட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உடலுறுதியின் மீது கவனம் செலுத்தும் அதே வேளையில், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடும் விழிப்புணர்வு இயக்கத்தையும் நடத்துகின்றன. போதைப் பழக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கெடுத்து வருவது அதிக உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த முயற்சி, பாரதத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கத்திற்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது. தேசத்தின் வருங்காலத் தலைமுறையினரை நாம் காத்தளிக்க வேண்டும், அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்தாக வேண்டும். இந்த எண்ணத்தை அடியொற்றி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று போதைப் பொருளிலிருந்து விடுபட்ட பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தோடு 11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டார்கள். இரண்டு வாரங்கள் முன்பாக பாரதம் போதைப் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய செயல்பாட்டைப் புரிந்திருக்கிறது. போதைப் பொருட்களின் கிட்டத்தட்ட ஒண்ணரை இலட்சம் கிலோ தொகுப்பைக் கைப்பற்றிய பிறகு அதை அழித்திருக்கிறது. நாம் பத்து இலட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்த அலாதியான சாதனையையும் படைத்திருக்கிறோம். இந்த போதைப் பொருட்களின் விலை 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். போதைப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட, இந்த சீரிய இயக்கத்தில் தங்கள் பங்களிப்பை அளித்துவரும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். போதையின் தீமை, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பெரிய தீங்காக மாறுகிறது. அந்த வகையில் இந்த அபாயத்துக்கு நிரந்தரமாக முடிவுகட்ட வேண்டும் என்றால், நாம் ஒன்றாக இணைந்து இந்தத் திசையில் முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியம்.
என் பாசமிகு நாட்டுமக்களே, போதைப் பொருட்கள், இளைய தலைமுறையினர் என்று வரும் போது, மத்திய பிரதேசத்தின் உத்வேகமளிக்கும் பயணம் பற்றிப் பேசியே ஆக வேண்டும். இந்த உத்வேகமளிக்கும் பயணம் ஒரு மினி ப்ரேசில் பற்றியது. என்னது, மத்திய பிரதேசத்திலே மினி ப்ரேசிலா என்று தானே நினைக்கிறீர்கள்!! இங்கே தான் ஒரு சின்ன திருப்பம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலில் இருக்கும் ஒரு கிராமம் பிசார்புர். இந்த பிசார்புரைத் தான் மினி ப்ரேசில் என்று அழைக்கிறார்கள். ஏன் மினி ப்ரேசில் என்றால், இந்தக் கிராமம், இந்தியக் கால்பந்தாட்டத்தின் இளம் நட்சத்திரங்களின் கூடாரமாக ஆகி விட்டது. சில வாரங்கள் முன்பாக, ஷஹ்டோலுக்கு சென்றிருந்த போது, அங்கே பல கால்பந்தாட்ட வீரர்களை நான் சந்திக்க முடிந்தது. இது பற்றி நான் நாட்டுமக்களுக்கு, அதுவும் குறிப்பாக என் இளைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் அப்போதே முடிவு செய்தேன்.
நண்பர்களே, பிசார்புர் கிராமம், ஒரு மினி ப்ரேசிலாக ஆனதன் பின்னணியில் இருந்த பயணம் 20-25 ஆண்டுகள் முன்பாகத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில், பிசார்புர் கிராமம் கள்ளச்சாராயத்துக்குப் பேர் போனதாக இருந்தது, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது. இந்தச் சூழலில் மிகப்பெரிய பாதிப்பு இங்கிருந்த இளைஞர்களுக்குத் தான் ஏற்பட்டது. முன்னாள் தேசிய ஆட்டக்காரரும், ஒரு பயிற்றுநருமான ரயீஸ் அஹ்மத் தான் இந்த இளைஞர்களின் திறமைகளை அடையாளமறிந்தவர். ரயீஸ் அவர்களிடத்திலே அதிக ஆதாரங்கள்-வசதிகள் இருக்கவில்லை; ஆனால் அவர் முழு முனைப்போடு, இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இங்கே கால்பந்தாட்டம் எந்த அளவுக்குப் பிரபலமாகி விட்டது என்றால், பிசார்புர் கிராமத்தின் அடையாளம் என்றால் அது கால்பந்தாட்டம் என்றாகி விட்டது என்றால் பாருங்களேன்!! இப்போது இங்கே கால்பந்தாட்டப் புரட்சியின் பெயரில் ஒரு செயல்திட்டம் நடத்தப்படுகிறது. இந்தச் செயல்திட்டத்தின் படி இளைஞர்கள் இந்த விளையாட்டோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தச் செயல்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், பிசார்புரிலிருந்து தேசிய மற்றும் மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வந்திருக்கிறார்கள். இந்த கால்பந்தாட்டப் புரட்சி இப்போது மெல்லமெல்ல, அந்தப் பகுதி முழுவதிலும் பரவி வருகிறது. ஷஹ்டோலும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் பரவலான பல பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இங்கே அதிகமான எண்ணிக்கையில் வெளிப்படும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். கால்பந்தாட்டத்தின் பல பெரிய முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் இன்று இங்கே இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்கள். நீங்களே எண்ணிப் பாருங்கள், ஒரு பழங்குடிப்பகுதி, கள்ளச்சாராயத்திற்காகப் பெயர் போனது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற அவப்பெயர் பெற்றது, இப்போது தேசத்தின் கால்பந்தாட்ட நாற்றங்கால் ஆகியிருக்கிறது. ஆகையினால் தானே சொல்கிறார்கள் – மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று. நமது தேசத்திலே திறன்கள்-திறமைகளுக்குக் குறைவே இல்லை. தேவை என்று வரும் போது, அதை நாம் நாடுகிறோம், தேடுகிறோம், அடைகிறோம். இதன் பிறகு இதே இளைஞர்கள் தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்க்கிறார்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு வழி கோலுகிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் உற்சாகத்தோடு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அமுதப் பெருவிழாவின் போது, தேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன, பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கின்றன. இந்த ஏற்பாடுகளின் மேலும் ஒரு அழகு என்னவென்றால், இதோடு சாதனை படைக்கும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலே நமது இளைஞர்களுக்கு தேசத்தின் மாபெரும் ஆளுமைகளைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. முதல் சில மாதங்களைப் பற்றி மட்டுமே பேசினால், மக்களின் பங்களிப்போடு தொடர்புடைய பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் எழுத்தாளர் சந்திப்புக்கான ஏற்பாடு. இதிலே சாதனை எண்ணிக்கையில் மக்களின் பங்கெடுப்பினைக் காண முடிந்தது. அதே போல, ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியிலே தேசிய சம்ஸ்கிருத சம்மேளனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது வரலாற்றிலே கோட்டைகளின் மகத்துவம் என்ன என்பதை நாமனைவருமே நன்கறிவோம். இதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு இயக்கமான கோட்டைகளும், கதைகளும், அதாவது கோட்டைகளோடு தொடர்புடைய கதைகளுமே கூட மக்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
நண்பர்களே, இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானிகளின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் இலட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுக்களும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும். தேசத்தின் கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான தில்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப்பூங்காவனம் நிர்மாணிக்கப்படும். இந்த அமுதப்பூங்காவனம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மிக உன்னதமான அடையாளமாக ஆகும். கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளின் அமுதக்காலத்தை ஒட்டிய 5 உறுதிமொழிகள் குறித்துப் பேசியிருந்தேன். என் மண் என் தேசம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு நாம் இந்த 5 உறுதிமொழிகளை நிறைவேற்றும் சபதமும் ஏற்போம். நீங்கள் அனைவரும், தேசத்தின் புனிதமான மண்ணை கைகளிலே ஏந்தி சபதம் எடுக்கும் வகையிலே உங்களை நீங்களே சுயமாகப்படம் பிடித்து, அதாவது செல்ஃபி எடுத்து, yuva.gov.in இலே கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள். கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும். இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த முயற்சிகளில் நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், தேசத்தின் சுதந்திரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற உயிர்த்தியாகங்கள் பற்றிய தெரிதல் உதிக்கும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். ஆகையால், நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், இந்த முயற்சிகளோடு கண்டிப்பாக இணைய வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இன்று இம்மட்டே. இன்னும் சில நாட்களில் நாம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்ற மிகப்பெரிய திருநாளின் அங்கமாக ஆவோம். தேசத்தின் சுதந்திரத்தின் பொருட்டு வாழ்ந்து கொண்டிருப்போரையும்-உயிர்த்தியாகம் செய்தோரையும் என்றென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் கனவுகளை மெய்யாக்கும் வகையிலே இரவுபகல் பாராது நாம் உழைக்க வேண்டும், மேலும், நாட்டுமக்களின் இந்த உழைப்பினை, அவர்களின் சமூக மட்டத்திலான முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு சாதனமாக மனதின் குரல் விளங்கும். அடுத்த முறை, மேலும் சில புதிய விஷயங்களோடு, உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
In the midst of calamities, all of us countrymen have once again brought to the fore the power of collective effort: PM @narendramodi during #MannKiBaat pic.twitter.com/JH7L2T2UPM
— PMO India (@PMOIndia) July 30, 2023
Gladdening to see people make novel efforts for water conservation. #MannKiBaat pic.twitter.com/NdA8jazgGg
— PMO India (@PMOIndia) July 30, 2023
At present the holy month of 'Sawan' is going on.
— PMO India (@PMOIndia) July 30, 2023
Along with worshiping Lord Shiva, it associated with greenery and joy.
That's why, 'Sawan' has been very important from the spiritual as well as cultural point of view. #MannKiBaat pic.twitter.com/cYcTUeBEaD
During #MannKiBaat PM @narendramodi mentions about American tourists who visited the Amarnath shrine. pic.twitter.com/lVbqYcb6zk
— PMO India (@PMOIndia) July 30, 2023
100-year-old Charlotte Chopin is an inspiration for all of us. She has been practicing yoga for the last 40 years. #MannKiBaat pic.twitter.com/eUY8MdfFrQ
— PMO India (@PMOIndia) July 30, 2023
Let us not only embrace our heritage, but also present it responsibly to the world. #MannKiBaat pic.twitter.com/yMs1HU9lzt
— PMO India (@PMOIndia) July 30, 2023
Tamil Nadu's Raghavan Ji decided that he would preserve the information about plants and animals through his paintings. Know more about his work here...#MannKiBaat pic.twitter.com/DXZel5CmYA
— PMO India (@PMOIndia) July 30, 2023
Several artefacts have been brought back to India. #MannKiBaat pic.twitter.com/M2FjdmbeTK
— PMO India (@PMOIndia) July 30, 2023
Uttarakhand's cultural heritage of 'Bhojpatra' is becoming immensely popular. #MannKiBaat pic.twitter.com/Zg2qAbtqeU
— PMO India (@PMOIndia) July 30, 2023
The changes that have been made in the Haj Policy in the last few years are being highly appreciated. #MannKiBaat pic.twitter.com/Xqy214PUlP
— PMO India (@PMOIndia) July 30, 2023
The increasing participation of youth in the campaign against drug abuse is very encouraging. #MannKiBaat pic.twitter.com/SJ5YwTUaOT
— PMO India (@PMOIndia) July 30, 2023
The inspiring story of Madhya Pradesh's Mini Brazil... #MannKiBaat pic.twitter.com/IXYt1dcTtx
— PMO India (@PMOIndia) July 30, 2023
Unique initiatives across the country to mark 'Amrit Mahotsav.' #MannKiBaat pic.twitter.com/u7liG0MO6G
— PMO India (@PMOIndia) July 30, 2023
'Meri Mati Mera Desh' - A campaign to honour our bravehearts. #MannKiBaat pic.twitter.com/yMfX4OiyhF
— PMO India (@PMOIndia) July 30, 2023