- இந்திய பிரதமர் மேதகு திரு.நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில், மாலத்தீவு குடியரசின் அதிபர் மேதகு திரு.இப்ராகிம் முகம்மது சோலி, இந்தியாவுக்கு டிசம்பர் 16-18, 2018-ல் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
- இது மாலத்தீவு குடியரசின் அதிபராக நவம்பர் 17, 2018-ல் பதவியேற்றதைத் தொடர்ந்து, சோலி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும். மாலத்தீவு அதிபருடன் அவரது மனைவியும், நாட்டின் முதல் பெண்மணியுமான ஃபஸ்னா அகமது-வும் வந்தார். இதேபோல, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித், நிதித்துறை அமைச்சர் இப்ராகிம் அமீர், தேசிய திட்டமிடல் மற்றும் கட்டமைப்புத் துறை அமைச்சர் முகம்மது அஸ்லாம், போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அய்சாத் நகுலா, பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் உஸ் ஃபயாஸ் இஸ்மாயில், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் இந்தியாவுக்கு வந்தது.
- சிறப்பு அம்சமாக, குடியரசுத் தலைவரின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிபர் சோலி தங்கியுள்ளார். இது இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையேயான நெருங்கிய நல்லுறவையும், இரண்டு அரசுகளுக்கும் இடையேயான சிறப்பான மற்றும் பரஸ்பரம் மதிப்பளிக்கும் செயலையும் வெளிப்படுத்துகிறது.
- மாலத்தீவு அதிபரை, டிசம்பர் 17, 2018-ல் இந்திய குடியரசுத் தலைவர் சந்தித்துப் பேசினார். அன்றைய தினம் மாலை, அதிபர் சோலிஹை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் விருந்து அளித்தார். மாலத்தீவு அதிபரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
- இந்திய பிரதமரும், மாலத்தீவு அதிபரும் டிசம்பர் 17, 2018-ல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பேச்சுவார்த்தை சிறப்பு மற்றும் நட்புரீதியான சூழலில் நடைபெற்றது. அதிபர் இப்ராகிம் முகம்மது சோலி மற்றும் அவருடன் வந்திருந்த குழுவினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசு சார்பில் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.
- இந்தப் பயணத்தின்போது, இருதரப்புக்கும் இடையே கீழ்க்காணும் உடன்பாடுகள்/புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த கூட்டு பிரகடனங்கள் கையெழுத்திடப்பட்டன:
• விசா வழங்குவதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கான உடன்பாடு
- கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
- வேளாண்வர்த்தகத்துக்கான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை;
- தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வகையிலான கூட்டு பிரகடனம்.
கீழ்க்காணும் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்கவும், அமைப்புரீதியான இணைப்புகளை ஏற்படுத்தவும் இணைந்து பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டனர்:
- சுகாதார ஒத்துழைப்பு விவகாரங்கள், குறிப்பாக புற்றுநோய் சிகிச்சை.
- குற்ற விவகாரங்களுக்கான பரஸ்பர சட்ட உதவி
- முதலீட்டு ஊக்குவிப்பு
- மனிதவள மேம்பாடு
- சுற்றுலா
- அதிபர் சோலியின் பதவியேற்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக மாலத்தீவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டதை பிரதமர் திரு.நரேந்திர மோடி, நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். மாலத்தீவுடன் நல்லுறவு வைத்திருக்க இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்துவருவதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
- இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே புவி அடிப்படையில் அருகருகே இருத்தல், இன, வரலாறு, சமூக-பொருளாதார மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான கலாச்சார நல்லுறவு ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு, இருதரப்புக்கும் இடையே நிலவும் பாரம்பரியமான வலுவான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், ஊக்குவிக்கவும் செயல்படுவது என்ற தங்களது வலுவான உறுதியை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். நம்பிக்கைக்கு மதிப்பளித்து, ஜனநாயகம், வளர்ச்சி மற்றும் அமைதியான வழியில் அவரவர் செயல்படுவது என்ற வாக்குறுதியையும் அவர்கள் வலியுறுத்தினர்.
- வெற்றிகரமான மற்றும் அமைதியான முறையில் ஜனநாயகப் பாதைக்கு மாலத்தீவு மாறியதற்காக, அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். உள்ளடக்குதல், அதிகாரப்பகிர்வு, மக்களை மையமாகக் கொண்ட ஆளுமை மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகிய இலக்குடன் செயல்படும் மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற தனது அரசின் கொள்கையை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மேலும், சமூக-பொருளாதார மேம்பாடு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் சுதந்திரமான அமைப்புகளை ஏற்படுத்துதல் என்ற மாலத்தீவின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
- மாலத்தீவின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி, நாணய மாற்றம் மற்றும் சலுகை அடிப்படையில் கடன் வழங்குதல் ஆகிய வடிவங்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று பிரதமர் அறிவித்தார்.
- இந்தியா-வே முதல் என்ற கொள்கையை தனது அரசு பின்பற்றிவருவதை அதிபர் சோலி உறுதிபடத் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் மிகவும் நெருங்கி பணியாற்றுவோம் என்ற உறுதியை கொண்டிருப்பதையும் தெரிவித்தார். வளர்ச்சி ஒத்துழைப்புக்காக வீட்டுவசதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையை ஈடுபடுத்துவது, வெளிப்புற தீவுகளில் நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள், சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளை கண்டறிந்ததற்காகவும், நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவுக்கு இந்திய அரசு உதவி வழங்கியதற்காகவும் அவர் நன்றி தெரிவித்தார்.
- சரக்குகள் மற்றும் சேவைகள், தகவல், யோசனைகள், கலாச்சாரம் மற்றும் மக்கள் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், இணைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
- நீதித்துறை, காவல் துறை மற்றும் சட்ட-அமலாக்கத் துறை, தணிக்கை மற்றும் நிதி மேலாண்மை, உள்ளாட்சி நிர்வாகம், சமூக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், மின்-ஆளுமை, விளையாட்டு, ஊடகங்கள், இளைஞர் மற்றும் மகளிர் மேம்பாட்டு, தலைமைப் பண்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர், கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளில் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்புக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக 1,000 இடங்களை வழங்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்.
- மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்த தலைவர்கள், விசா வசதிக்காக இன்று கையெழுத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்த புதிய ஒப்பந்தம், பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை அதிகரிக்கச் செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார். விசா இல்லாமல் வருவதற்கான வசதியை இந்தியா அளித்துள்ள ஒரு சில நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு உள்ளது.
- இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் சோலி தெரிவித்தார். இதன்மூலம், தங்களது குழந்தைகளை கல்வி கற்பதற்காக இந்தியாவுக்கு அனுப்பிவைத்த மாலத்தீவைச் சேர்ந்த பல்வேறு பெற்றோரும், தங்களது குழந்தைகளுடன் இருக்க முடியும். மாலத்தீவு குடிமக்களும், அவர்களது குடும்பத்தினரும், இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவதற்கு விரைந்து விசா கிடைக்கும். இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் நடமாட்டம் தடையில்லாமல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நீடித்து இருக்க வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள், இந்தப் பிராந்தியத்துடன் இணைந்திருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்காக ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் பிரச்சினைகளையும், விருப்பங்களையும் கவனத்தில் கொள்வது என உறுதியளித்தனர். மேலும், மற்ற நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளுக்கு தங்களது எல்லைப் பகுதியை அனுமதிப்பதில்லை என்றும் உறுதியளித்தனர். ஒருங்கிணைந்து ரோந்துப் பணி, வான்வழி கண்காணிப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை தீவிரப்படுத்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
- இந்தப் பிராந்தியத்துக்குள்ளும், வேறு எந்தப் பகுதியிலும் தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் அழிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஆதரவு மற்றும் உறுதியை அளிப்பது என்று இரு தலைவர்களும் தீர்மானமாக தெரிவித்தனர். கொள்ளை, தீவிரவாதம், திட்டமிட்ட குற்றங்கள், மருந்துகள் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மாலத்தீவு காவல் பிரிவு மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் திறனை வளர்க்கவும், பயிற்சி அளிக்கவும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
- இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை இரு தலைவர்களும் ஆய்வுசெய்தனர். இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில், மாலத்தீவில் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் விரிவடைந்திருப்பதற்கு இந்திய பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். வெளிப்படையான, நம்பகத்தன்மையான மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான நிர்வாகம் என்ற மாலத்தீவு அரசின் தொலைநோக்கு திட்டம், இந்திய வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநிறுத்தியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மீன்வள மேம்பாடு, சுற்றுலா, போக்குவரத்து, இணைப்பு, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தொடர்பு போன்ற துறைகளில் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
- உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வலுவான பல்துறை அமைப்பு அவசியம் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு சபைக்கு புத்துயிரூட்டுவது, ஐநா பாதுகாப்பு குழு-வை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய ஐநா அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் அங்கீகரித்தனர்.
- மாற்றியமைக்கப்படும் மற்றும் விரிவாக்கப்படும் ஐநா பாதுகாப்பு குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க தங்களது நாட்டின் ஆதரவை மாலத்தீவு அதிபர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 2020-21-ம் ஆண்டில் இந்தியாவுக்கு தற்காலிக உறுப்பினர் வாய்ப்பு வழங்குவதற்கும் மாலத்தீவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
- காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் இணைவது என்ற மாலத்தீவின் முடிவுக்கு இந்திய பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள மாலத்தீவுக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார்.
- வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், குறிப்பாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் சிறு தீவுகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச நடவடிக்கைகளை யூஎன்எஃப்சிசிசி மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் மூலம் வலுப்படுத்த வேண்டியதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
- பல நாடுகளை உள்ளடக்கிய நிதி அமைப்புகளில் சீர்திருத்தங்களை செய்வதுடன், அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், சர்வதேச அளவிலான பொருளாதார முடிவுகளை எடுப்பதில் வளரும் நாடுகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- இந்தப் பயணத்தின்போது தனக்கும், தனது குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகளுக்கும் அன்பான, நட்புரீதியான மற்றும் சிறப்பான உபசரிப்பை வழங்கியதற்காக இந்தியப் பிரதமருக்கு மாலத்தீவு அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
- மாலத்தீவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய குடியரசுத் தலைவருக்கு மாலத்தீவு அதிபர் அழைப்பு விடுத்தார். இதேபோல, மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமருக்கும் மாலத்தீவு அதிபர் அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.