1. பிரேசில் கூட்டாட்சி குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, இந்தியக் குடியரசு, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க குடியரசு நாடுகள் மற்றும் அரசின் தலைவர்களாகிய நாம், ஜி-20 மாநாட்டின் இடையே, ஜப்பானின் ஒசாகாவில் 28 ஜூன் 2019 அன்று கூடியுள்ளோம். ஜி-20 அமைப்புக்கு ஜப்பான் தலைமையேற்று நடத்திய விதத்திற்காகவும், அவர்கள் நமக்கு அளித்த உபசரிப்புக்காகவும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
2. ஜப்பான் தனது தலைமை பதவிக்காலத்தில் முன்னுரிமை அளித்து தேர்ந்தெடுத்த, வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் புகுத்துதல், அடிப்படைக் கட்டமைப்பு வசதி, பருவநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. உலகப் பொருளாதார வளர்ச்சி நிலைப்பெற்று வருவதுடன், பொதுவாக இந்த ஆண்டின் பிற்பகுதியிலும், 2020 ஆம் ஆண்டிலும் மிதமான வளர்ச்சியை எட்டக்கூடும். எனினும், வளர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்ந்து நிச்சயமற்றதாகவே உள்ளது. வர்த்தகம், புவியியல் ரீதியான அரசியல் பதற்றங்கள், பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், சமத்துவமின்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் காணப்படும் குறைவு மற்றும் கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் போன்றவை சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளன. உலகளவில் தொடர்ந்து சமச்சீரற்ற தன்மை பெருமளவு காணப்படுவதுடன், முழுமையான கண்காணிப்பு மற்றும் உரிய நேரத்தில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. சர்வதேச வர்த்தகம் நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு, உகந்த உலகளாவிய பொருளாதார சூழலின் முக்கியத்துவத்தையும் நாம் வலியுறுத்த வேண்டும்.
4. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக பிரிக்ஸ் நாடுகள் திகழ்கின்றன என்பதை அறிந்து மனநிறைவு பெறுவதுடன், தற்போதும் நம்நாடுகள் உலக அளவில் 3-வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட அளவு, பிரிக்ஸ் நாடுகளுடையதாகத் தொடரும் என கணிப்புகள் கூறுகின்றன. கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், நமது பொருளாதார வளம் அதிகரிக்கும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான சமச்சீரான வர்த்தக விரிவாக்கம், சர்வதேச வர்த்தகத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.
5. சவால்களை எதிர்கொள்ள உதவும் விதமாகவும், வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், நாம் மற்றவர்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும்: திறந்தவெளி சந்தைகள்; வலுவான பொருளாதார மறுமலர்ச்சி; நிதி நிலைத்தன்மை; திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த பேரியல் பொருளாதாரக் கொள்கைகள், கட்டமைப்பு சீர்திருத்தம், மக்கள் வளத்திற்கு தேவையான முதலீடு, வறுமை மற்றும் சமச்சீரின்மை ஒழிப்பு: முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க வலுவான போட்டி; வெளிப்படையான, நியாயமான, பாரபட்சமற்ற வர்த்தக சூழல்; அரசு- தனியார் பங்களிப்புக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிதியுதவி மற்றும் மேம்பாடு. இந்த துறைகளிலும், பிற துறைகளிலும் மேற்கொள்ளப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு முயற்சிகள், நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பாக அமையும். சர்வதேச மதிப்புச் சந்தையில், வளரும் நாடுகளின் அதிகபட்ச பங்களிப்பு அவசியமாகிறது. வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இடையேயான தொடர்புகளின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரித்தாக வேண்டும். வளர்ச்சிக்கான புள்ளிவிவர மதிப்பீட்டின் பங்கையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
6. ஒளிவுமறைவற்ற, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் உள்ளடக்கிய வர்த்தகத்தை மேற்கொள்ள நாம் உறுதிபூண்டுள்ளோம். பாதுகாப்புவாதமும், தன்னிச்சைவாதமும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளன. பன்முக மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்ட, விதிமுறை சார்ந்த பன்னாட்டு வர்த்தக நடைமுறைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுடனும் ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைத்து, சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் தற்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்பவும், வர்த்தக அமைப்பு மேலும் திறம்பட செயல்படும் விதத்திலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் அவசியமாகும். இந்த சீர்திருத்தம், உலக வர்த்தக அமைப்பில் மையத்தன்மை, அதன் நன்மதிப்பு மற்றும் அடிப்படைக் கொள்கைகள் போன்றவற்றுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். வளரும் நாடுகள் மற்றும் மிகவும் குறைவான வளரும் தன்மையுடைய நாடுகள் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் நலன் கருதியும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பு பற்றிய பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சிநிரல் சமச்சீரானதாகவும், விவாதங்கள் வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த தன்மையுடையவையாகவும் அமைவது அவசியமாகும்.
7. உலக வர்த்தக அமைப்பின் வழக்குகள் தீர்வு நடைமுறை, பன்னாட்டு வர்த்தக நடைமுறையின் அசைக்க முடியாத தூணாக இருப்பதுடன், முறையான மற்றும் வலுவான செயல்பாட்டினை உறுதி செய்ய மேல்முறையீட்டு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பில் கொண்டு வரப்படும் வழக்குகளுக்குத் தீர்வு காண இரண்டு அடுக்கு நீதிமன்ற செயல்பாட்டை பாதுகாக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். உலக வர்த்தக அமைப்பின் மேல்முறையீட்டு நடுவர் மன்றத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் நிலவும் தேக்க நிலைக்கு உடனடி தீர்வு காண வேண்டியதும் அவசியமாகிறது. எனவே மேல் முறையீட்டு அமைப்புக்கான தேர்வுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
8. வலிமையான, இடஒதுக்கீடு அடிப்படையிலான மற்றும் போதிய நிதி வளத்துடன் கூடிய சர்வதேச நிதியத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம் என்பதை நினைவு கூர்கிறோம். சர்வதேச நிதியத்தின் இடஒதுக்கீடு அதன் செயலாக்க வாரியத்துடன் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்வதோடு, இந்த அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள், 2010 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். அந்த அமைப்பிற்கான இடஒதுக்கீட்டை 15-வது முறையாக மறு ஆய்வு செய்யும் பணிகளை, 2019 ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்திற்கு முன்பாக முடிக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.
9. கட்டமைப்பு வசதிக்கான நிதியுதவி, நீடித்த வளர்ச்சி மற்றும் வலுவான, சமச்சீரான மற்றும் உயர்தரத் திட்டங்களை உருவாக்குவதற்கான தொடர் முயற்சிகளை மேம்படுத்துவதில், புதிய வளர்ச்சி வங்கி
(NDB)-யின் பங்கினை பாராட்டுகிறோம். உறுப்பு நாடுகளில் முக்கியமான கட்டமைப்பு திட்டங்களுக்கான முதலீட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்குத் தீர்வு காண குறிக்கோளுடன் கூடிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறோம். புதிய வளர்ச்சி வங்கிக்கு, மண்டல அளவிலான அலுவலகங்களை அமைப்பதன் மூலம், அதனை வலுப்படுத்த வேண்டும். புதிய வளர்ச்சி வங்கி தனக்கான நிதி ஆதாரங்களை, உறுப்பு நாடுகளின் உள்நாட்டு பணமதிப்பு அடிப்படையிலேயே திரட்டுவதை வரவேற்பதோடு, இதற்கான முயற்சி சீனாவில் தொடங்குவதும் வரவேற்கத்தக்கது. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவின் பங்கு பத்திரத் திட்டங்களும் வரவேற்கக் கூடியவையாகும். புதிய வளர்ச்சி வங்கியின் திட்ட தயாரிப்பு நிதி திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதோடு, இந்த திட்டம் உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதற்கும், திட்ட அறிக்கை தயாரிப்புக்கும் வலுவான கருவியாக அமைய வேண்டும் என விரும்புகிறோம்.
10. பிரிக்ஸ் நாடுகளுக்கான எதிர்பாரா செலவின கையிருப்பு ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, இந்த எதிர்பாரா செலவின நிதி, உறுப்பு நாடுகள் பணம் செலுத்துவதற்கான குறுகியகால நெருக்கடிகளை தடுத்து நிறுத்துவதாகவும் இந்த நடைமுறை அமைய வேண்டும். 2018 ஆம் ஆண்டு சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, தேவைப்பட்டால் இந்த நடைமுறையின் செயல்பாட்டு ஆயத்த நிலையை உறுதி செய்ய மேலும் பல சிக்கலான சோதனைகளை மேற்கொள்ளவும் நாம் உறுதி ஏற்போம். பேரியல் பொருளாதார பரிமாற்றத்திற்கான எதிர்பாரா செலவின கையிருப்பு நடைமுறை செயல்பாட்டு விதத்தை நாம் வரவேற்கிறோம். பிரிக்ஸ் உள்நாட்டு நாணய பத்திர நிதி திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை வரவேற்பதோடு அதன் செயல்பாடு விரைவில் நடைமுறைக்கு வருவதையும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். சர்வதேச நிதியம் மற்றும் எதிர்பாரா செலவின கையிருப்பு நடைமுறைக்கு இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துவதற்கும் ஆதரவு அளிக்கிறோம்.
11. பிரிக்ஸ் நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் எதிராக தீவிரவாதத் தாக்குதல் எந்த வடிவில் நடத்தப்பட்டாலும் அதனை வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத எதிர்ப்புக்கு ஐ.நா. சபையின் ஆதரவுடன் உறுதியான சர்வதேச சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் கருத்தொருமித்த முயற்சிகளும், விரிவான அணுகுமுறையும் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். தங்களது மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத கட்டமைப்புகள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்க வேண்டியது அனைத்து நாடுகளின் பொறுப்பு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இணையதள சேவை, தீவிரவாத நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாதுகாப்பான முறையிலும், பத்திரமாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் அரசுகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட நெறிமுறைகளின்படி அந்தந்த நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு அல்லது தாக்குதல் சம்பவங்களை நடத்த, சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
12. ஊழலை எதிர்த்துப் போராட உறுதிபூண்டிருப்பதோடு அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை தொடரவும் உறுதி ஏற்றுள்ளோம். எனவே ஊழலுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பதோடு சட்ட நடைமுறைகளை வலுப்படுத்தி, ஊழல் வழக்குகளை, குறிப்பாக சொத்துக்கள் பறிமுதல் தொடர்பான வழக்குகளை திறம்பட கையாள ஏதுவாக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் வழக்குகளில் தேடப்படுவோரை தண்டிப்பதில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் ஊழலைத் தடுக்கவும், அதனை எதிர்த்துப் போராடவும், ரகசிய தகவல் தருவோரின் பங்கினை அங்கீகரிப்பதோடு, அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
13. சட்ட விரோத பணம் மற்றும் பணப்புழக்கம் உள்ளிட்ட ஊழல் மற்றும் முறைகேடான வகையில் வெளிநாடுகளில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் போன்றவை உலகளவில் பெரும் சவாலாக இருப்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்த விவகாரத்தில் நமக்கிடையேயான அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதுடன் வலுவான சர்வதேச உறுதிப்பாட்டை ஊக்குவிக்க பாடுபடுவதும் அவசியம். அத்துடன் ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, தலைமறைவு, பொருளாதார மற்றும் ஊழல் குற்றவாளிகளை நாடு கடத்துவது மற்றும் திருட்டுப் பொருட்களை மீட்பதில், அந்தந்த உள்நாட்டு சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தாக வேண்டும். சட்ட விரோத பணப்புழக்கத்தை தடுப்பதில், நிதிச் செயல்பாடுகளுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழு, உலக சுங்க அமைப்பு மற்றும் பிற பன்னாட்டு நடைமுறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
14. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வேளையில், குறைந்த கட்டணத்தில், எளிதில் எரிசக்தி, கிடைக்க செய்யவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், நெகிழும் தன்மையுடைய, தூய்மையான எரிசக்தி சிக்கன முறைகளை ஒருங்கிணைப்பதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பல்வேறு வகையான எரிசக்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதோடு, எதிர்காலத்தில் நச்சு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றியாக வேண்டும். இதற்கு, சூரிய சக்தி மின் உற்பத்தி, உயிரி எரிசக்தி போன்றவற்றோடு, இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்குவதையும் ஊக்குவிக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த, பிரிக்ஸ் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியை அங்கீகரிப்பதோடு, பிரிக்ஸ் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நீடித்த எரிசக்தி குறித்து கூட்டாக பயில்வதற்கான வாய்ப்புகள் மற்றும் நவீன எரிசக்தி தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் வழிவகை ஏற்படும்.
15. பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தை, பல்வேறு நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழுமையாக அமல்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். எனவே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்ற செயல்திட்ட மாநாட்டில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம்.
16. நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டத்தை நினைவுகூறும் வேளையில், நீடித்த வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். வளர்ச்சிக்காக உதவ அளித்த உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்ற, வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, அடிஸ்“ அபாபா செயல் திட்டத்திற்கேற்ப வளர்ச்சிக்கான வளங்களையும் வழங்க வேண்டும். 2030 செயல் திட்டத்திற்கான ஜி-20 நாடுகளின் செயல் திட்டத்திற்கு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கப்படும். ஆப்பிரிக்கா மற்றும் குறைவான வளர்ச்சியுடைய நாடுகளை தொழில்மயமாக்க ஆதரவளிப்பது என்ற ஜி-20 நாடுகளின் முன்முயற்சிகளை ஏற்பதுடன் ஜி-20 – ஆப்பிரிக்கா இடையிலான ஒத்துழைப்பையும் அங்கீகரிக்க வேண்டும்.
17. 2019 ஆம் ஆண்டில் தலைமை பொறுப்பை ஏற்கும் நாட்டின் மையக் கருத்தாக, புதுமையான எதிர்காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி என்பதை தேர்ந்தெடுத்த பிரேசில் நாட்டிற்கு நமது பாராட்டுகள். வளர்ச்சிக்கு புதுமை மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை ஏற்றுக் கொள்வதோடு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதி மக்களுக்கான புதிய தொழில்நுட்பங்களின் பலன், அதிக மக்களை சென்றடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும். வறுமை ஒழிப்புக்காக இணையதளத்தை பயன்படுத்தி, ஒரு நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை, மற்ற உறுப்பு நாடு பகிர்ந்து கொள்வதை ஊக்குவிப்பதோடு, தொழில் துறையை டிஜிட்டல்மயமாக்குவதும் அவசியமாகும். பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல், தொழில்நுட்ப, முதுமை மற்றும் தொழில்முனைவு ஒத்துழைப்புகளை தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு புதிய தொழில் புரட்சி, ஐ-பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளும் அவசியமாகிறது.
18. 2019 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரேசில் நாட்டிற்கு நமது ஒத்துழைப்பை வழங்குவதோடு, வருகிற நவம்பர் மாதம் பிரேசிலியா நகரில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் 11-வது உச்சி மாநாட்டையும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.