இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூலை 8-9 தேதிகளில் 22 வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு. விளாடிமிர் புடின்  ரஷ்யாவின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை" பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக. இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பு, முன்னுரிமை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதையும், ஆழப்படுத்தப்படுவதையும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதுள்ள சிக்கலான, சவால்கள், நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவுகள் நெகிழ்திறன் கொண்டதாக இருப்பதை இருதரப்பும் அடிக்கோடிட்டுக் காட்டின. இந்திய-ரஷ்ய உறவுகளை அனைத்து ஒத்துழைப்புத் துறைகளிலும் மேம்படுத்துவது என்பது பகிரப்பட்ட வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமையாகும்.

தொடர்ந்து வளர்ந்து வரும், சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் இருதரப்பு கூட்டாண்மையை வளர்த்து, வழிநடத்தவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதை மாற்றியமைக்கவும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடிக்கடி நடைபெறும் சந்திப்புகள் மற்றும் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மட்டத்தில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

2023-ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பது குறித்தும் இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. இது 2025-ஆம் ஆண்டில் தலைவர்கள் நிர்ணயித்த 30 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை விட இரு மடங்காகும். நீண்ட கால அடிப்படையில் சமச்சீரான மற்றும் நீடித்த இருதரப்பு வர்த்தகத்தை எட்டுவதற்கு, தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், புதிய தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் மற்றும் வடிவங்களைக் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் ரஷ்யாவுக்கு இந்திய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரைவுபடுத்தவும், வளர்ச்சியை நிலைநிறுத்தவும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயிக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

2030-ஆம் ஆண்டு வரை ரஷ்ய-இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் நம்பிக்கைக்குரிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட முகமைகளுக்கு அறிவுறுத்தினர் (திட்டம்-2030). 2030 திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள், திட்டங்கள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை அமல்படுத்த பங்களிக்க தயார் என்பதை இருதரப்பும் மீண்டும் உறுதி செய்தன.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தொழில் ஒத்துழைப்பின் பெரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இருதரப்பும், போக்குவரத்துப் பொறியியல், உலோகவியல், ரசாயனத் தொழில், பரஸ்பர அக்கறை கொண்ட இதர துறைகளில் உற்பத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர விருப்பங்களை உறுதி செய்தன. முன்னுரிமைப் பகுதிகளில் நம்பிக்கைக்குரிய கூட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது என்ற தங்கள் எண்ணத்தை இருதரப்பும் வெளிப்படுத்தின.

ரஷ்ய அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே இடம்பெயர்தல் மற்றும் நகர்வு கூட்டு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து விவாதம் நடத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

உரங்களுக்கான இந்தியா-ரஷ்ய கூட்டுக் குழுவின் கட்டமைப்புக்கு உட்பட்டு, நிறுவனங்களுக்கு இடையேயான நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு நீடித்த உரங்களை வழங்குவதற்கான ஒத்துழைப்பைத் தொடரவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இந்திய அரசின் தொழில் வழித்தடத் திட்டத்தின்கீழ், பசுமை தொழில் நகரங்களில் உற்பத்தி வசதிகளை அமைக்குமாறு ரஷ்ய தொழிலதிபர்களுக்கு இந்திய தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள், செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், பொது நிர்வாகம் மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழலை டிஜிட்டல்மயமாக்குதல், செல்பேசி தகவல் தொடர்புகள், தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் தங்களின் ஆர்வத்தை இருதரப்பும் உறுதி செய்தன.

எரிசக்தி ஆதாரங்களில் இருதரப்பு வர்த்தகத்தின் சிறப்பு முக்கியத்துவத்தை இருதரப்பும் சுட்டிக் காட்டியதுடன், புதிய நீண்டகால ஒப்பந்தங்களைக் கண்டறியவும் ஒப்புக் கொண்டன. நிலக்கரித் துறையில் தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்புக்கு இருதரப்பும் பாராட்டு தெரிவித்ததுடன், இந்தியாவுக்கு கோக்கிங் நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு ஆந்த்ரசைட் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் ஒப்புக் கொண்டன.

அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இருதரப்பும் குறிப்பிட்டன. கூடங்குளத்தில் மீதமுள்ள அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதரப்பும் வரவேற்றதுடன், பொருட்களை வழங்குவதற்கான காலக்கெடு உட்பட கால அட்டவணையைப் பின்பற்றவும் ஒப்புக் கொண்டன. முன்னதாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, இந்தியாவில் இரண்டாவது தளம் குறித்து மேலும் விவாதம் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இருதரப்பும் குறிப்பிட்டன.

விண்வெளித் துறையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ரஷ்ய அரசு விண்வெளிக் கழகம் இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பை இருதரப்பும் வரவேற்றன. ராக்கெட் என்ஜின் உருவாக்கம், உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், ரஷ்ய தயாரிப்புக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களைப் பராமரிப்பதற்காக உதிரி பாகங்கள், மொத்தத் தொகைகள் மற்றும் இதர தயாரிப்புகளை இந்தியாவில் கூட்டாக உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், இந்திய ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டு முயற்சிகளை ஏற்படுத்தவும், பரஸ்பர நட்பு கொண்ட மூன்றாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இருதரப்பும் குறிப்பிட்டன.  ரஷ்ய கூட்டமைப்பின் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்திற்கும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும் இடையேயான 2021-ஆம் ஆண்டின் வெற்றிகரமான அமலாக்கத்தை இருதரப்பும் சுட்டிக் காட்டின. இரு நாடுகளின் அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் மூலம் ரஷ்யா – இந்தியா ஆராய்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது இதில் அடங்கும்.

வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல், நீலப் பொருளாதாரம், கடல்சார் தொழில் மற்றும் கடல் வளங்கள், ரசாயன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, நீர், பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம், உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், பயன்பாட்டு கணிதம், தரவு அறிவியல், தொழில்நுட்பம், பொருள் அறிவியல், இயற்பியல், வானியற்பியல், துருவ ஆராய்ச்சி, நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியமான  துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் கல்விப் பட்டங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது குறித்த ஆலோசனைகளைத் தொடரவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. கல்வித் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாரம்பரியமான வலுவான ஒத்துழைப்பை அங்கீகரித்த இருதரப்பும், பல்கலைக் கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான தங்களது முயற்சிகளைத் தொடரவும் ஒப்புக் கொண்டன.

 இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய தலைவர்கள், மார்ச் 2024-ல் சோச்சி உலக இளைஞர் விழாவிலும், 2024 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் கஸானில் நடைபெற்ற "எதிர்கால விளையாட்டுக்கள்" மற்றும் பிரிக்ஸ் விளையாட்டுக்களிலும் முறையே இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் குழுவினர் தீவிரமாக பங்கேற்றதன் மூலம் மேம்பட்ட இளைஞர் பரிமாற்றங்கள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.

இரு நாடுகளிலும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்தவும், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் சிவில் சமூகங்களை ஒன்றிணைக்கவும் இரு நாடுகளிலும் "பல்வேறு துறைகளுக்கு இடையேயான பரிவர்த்தனை ஆண்டுகளை" நடத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இந்தியாவில் ரஷ்ய மொழியையும், ரஷியாவில் இந்திய மொழிகளையும் விரிவாக ஊக்குவிப்பதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்துவது உட்பட தங்களது கூட்டு முயற்சிகளைத் தொடரவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

ரஷ்யா மற்றும் இந்தியா இடையே சுற்றுலா பரிமாற்றங்கள் சீராக அதிகரித்து வருவதை இருதரப்பும் பாராட்டின. சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் துறை மட்டத்தில் ஒத்துழைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

மின்னணு விசாவை அறிமுகப்படுத்துவது உட்பட விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவதை இருதரப்பும் வரவேற்றன. விசா நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும் பணிகளை எதிர்காலத்தில் தொடரவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் நடமாட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் இணைப்புகள், பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை, தலைவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். 2024 ஜூலை 8 அன்று ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியிலும், ஜூன் 23 அன்று தாகேஸ்தானிலும், மார்ச் 22 அன்று மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்திலும் ராணுவ வாகன அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான கடுமையான நினைவூட்டலாகும் என்று வலியுறுத்தினர். சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்த்து சமரசமற்ற முறையில் போராட இருதரப்பும் அறைகூவல் விடுத்தன. சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் உறுதியான அடிப்படையில் இரட்டை வேடம் போடாமல் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டின. மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா பொதுச் சபை மற்றும் ஐ.நாவின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை அமல்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அரசுகள் மற்றும் அவற்றின் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் முதன்மையான பொறுப்பை இருதரப்பும் வலியுறுத்தின. பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் உலகளாவிய முயற்சிகள், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இருதரப்பும் வலியுறுத்தின. பயங்கரவாதத்தை சிறிதும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றும், சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான தீர்மானத்தை ஐ.நா கட்டமைப்பில் விரைந்து இறுதி செய்து நிறைவேற்ற வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு உகந்த வகையில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தீவிரவாதம் எந்த ஒரு மதம், தேசியம், நாகரிகம் அல்லது இனக்குழுவுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தினர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் பொறுப்பேற்க வைக்கப்பட்டு, சர்வதேச சட்டத்தின்படி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய ஆராய்ச்சி மையத்தின் இந்தியத் தலைமையின் கீழ் 2022 அக்டோபரில் இந்தியாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை இருதரப்பும் வெகுவாகப் பாராட்டியதுடன், பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தில்லி பிரகடனத்தையும் வரவேற்றன.

நாடுகடந்த அமைப்பு சார்ந்த குற்றங்களை எதிர்கொள்வது, சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதி செய்தன.

 நாடுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் அவற்றின் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கொள்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை இருதரப்பும் வலியுறுத்தின. இந்த நோக்கத்திற்காக, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப குற்றங்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான விரிவான மாநாடு உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வரவேற்கவும், உலகளாவிய சர்வதேச சட்ட வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் இருதரப்பும் வலியுறுத்தின.

விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் உட்பட, விண்வெளியை அமைதிப் பயன்பாடுகளுக்கான ஐ.நா குழுவுக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பும் யோசனை தெரிவித்தன.

பேரழிவு ஆயுதங்கள் பரவாமல் இருப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதி செய்தன. அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு ரஷ்யா தனது வலுவான ஆதரவை தெரிவித்தது.

உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தின.

 

கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, பாதுகாப்புக்கான ஆசியான் பிராந்திய அமைப்பு , ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் உள்ளிட்ட பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பிராந்திய அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் அடிக்கோடிட்டுக் காட்டின.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும், பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவற்றின் இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தையும் இருதரப்பும் குறிப்பிட்டன.

இந்தியா-ரஷியா இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான கூட்டாண்மையின் மீள்திறன், தங்களது வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் ஒருமித்த மற்றும் பரஸ்பர அணுகுமுறைகள் ஆகியவற்றை இருதரப்பும் திருப்தியுடன் குறிப்பிட்டதுடன், அதை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

மாஸ்கோவில் தமக்கும், தமது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான உபசரிப்புக்காக அதிபர் திரு. விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2025-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi