ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.
உச்சிமாநாட்டின்போது நார்டிக் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உலகப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, புதுமைப்படைப்பு, பருவநிலை மாற்றம் போன்ற முக்கியப் பிரச்சனைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தவும் உறுதி பூண்டுள்ளதாக திரு. நரேந்திர மோடி கூறினார். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டவும், நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடையவும் வரியற்ற வர்த்தகம் வினை ஊக்கியாகச் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அனைத்துப் பிரதமர்களும் உறுதிப்படத் தெரிவித்தனர்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய உலகில் புதுமைப் படைப்பும், டிஜிட்டல் மாற்றங்களும் வளர்ச்சியைச் தூண்டுபவையாக உள்ளன என்றும், இவையே நார்டிக் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை வலியுறுத்துகின்றன என்றும் இந்தப் பிரதமர்கள் ஏற்றுக்கொண்டனர். உலகப் புதுமைப்படைப்பு தலைமையில் நார்டிக் நாடுகளின் பங்கு வலியுறுத்தப்பட்டது. புதுமை அமைப்புகளுக்கான நார்டிக் அணுகுமுறை, பொதுத்துறை, தனியார்த்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் வலுவான ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டது என்ற நிலை குறித்து உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுடனான வளமிக்க அறிவாற்றல் மற்றும் திறன்களுடன் தொடர்புக்கொள்ளும் வழிமுறைகளும் அடையாளம் காணப்பட்டன.
வளத்திற்கும் நிலைத்த மேம்பாட்டுக்கும் புதுமைப்படைப்பு டிஜிட்டல் திட்டங்கள் ஆகியன மிகவும் முக்கியமானவை என்ற இந்திய அரசின் வலுவான உறுதிப்பாடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “இந்தியாவில் தயாரிப்போம்”, “தொடங்கியது இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “தூய்மை இந்தியா” திட்டங்களில் காணக் கிடக்கிறது என்று இந்த உச்சிமாநாடு வலியுறுத்தியது. தூய்மைத் தொழில்நுட்பங்கள், கடல்சார் தீர்வுகள், துறைமுக நவீனமயமாக்கல், உணவுப் பதனீடு, சுகாதாரம், உயிரி அறிவியல், வேளாண்மை ஆகியவற்றில் நார்டிக் நாடுகளின் தீர்வுகள் மாநாட்டில் குறிப்பிடப்பட்டன. இந்திய அரசின் அதிநவீன நகரங்கள் திட்டத்திற்கு நார்டிக் நாடுகளின் நிலையான நகரங்கள் திட்டம் ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டது என்பதை உச்சிமாநாடு வரவேற்றது.
இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் உள்ள தனித்தன்மை வாய்ந்த பலம், வர்த்தகம், முதலீட்டு விரிவாக்கம், பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்புகள் ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. வளத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான விதிகள் சார்ந்த பலதரப்பு வர்த்தகமுறை, திறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகம் ஆகியன மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பவை பேச்சுகளின்போது வலியுறுத்தப்பட்டன. நார்டிக் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் வர்த்தகம் புரிதலில் எளிமை, நடைமுறைகள் முன்னுரிமை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது வலியுறுத்தப்பட்டது.
சர்வதேசச் சமூதாயத்திற்குப் பயங்கரவாதமும் வன்முறைத் தீவிரவாதமும் பெரிய சவால்கள் என்பதை அனைத்துப் பிரதமர்களும் ஏற்றுக்கொண்டனர். கணினி பாதுகாப்பு உள்ளிட்ட மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பை நிலைநிறுத்துவதில் உறுதிப்பாடு அடிப்படையிலான உலகப் பாதுகாப்பு குறித்து உச்சிமாநாடு விவாதித்தது. ஏற்றுமதிக் கட்டுப்பாடு, அணுஆயுதப் பரவல் தடை, ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அணுசக்திப் பொருட்கள் வழங்குவோர் குழுவில் உறுப்பினராகச் சேருவதற்கு இந்தியா மனு செய்திருப்பதை நார்டிக் நாடுகள் வரவேற்றன இது தொடர்பான முடிவுகள் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்கும் நோக்கத்துடன் இந்தக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றப்போவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன.
2030 அலுவல்பட்டியலை நிறைவேற்ற உறுப்புநாடுகளுக்கு உறுதியளிக்கும் தகுதியுள்ள ஐ.நா. –வை உருவாக்கும் ஐ.நா. தலைமைச் செயலாளர் சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்குத் தங்களது ஆதரவைப் பிரதம மந்திரிகள் மீண்டும் உறுதி செய்தனர். மேம்பாடு, அமைதி நடவடிக்கைகள் பிணக்குத் தடுப்பு உள்ளிட்டத் துறைகளில் ஐ.நா. –வை வலுப்படுத்தும் அவரது திட்டங்களைக் கவனித்துவருவதாகவும் பிரதமர்கள் தெரிவித்தார்கள். ஐ.நா பாதுகாப்புச் சபையைச் சீர்த்திருத்த அமைக்க வேண்டியதன் அவசியத்தை நார்டிக் நாடுகளும் இந்தியாவும் வலியுறுத்தின. நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவாக்குவது, அதன் மூலம் பாதுகாப்புச் சபையை மேலும் அதிகப் பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், பொறுப்பேற்கும் திறன், திறன்பட்ட செயல்பாடு, 21 ஆம் நூற்றாண்டின் உண்மை நிலைக்கு உகந்தச் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கொண்டதாக மாற்றுவதற்குப் பிரதமர்கள் ஆதரவு தெரிவித்தனர். சீர்த்திருத்தப்பட்ட பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா சரியான வலுவான நாடு என்று நார்டிக் நாடுகள் ஏற்றுக்கொண்டன.
நிலைத்த மேம்பாட்டுக்கான 2030 அலுவல்பட்டியல் அமலாக்கம், பாரிஸ் உடன்பாட்டை அமலாக்கும் மாபெரும் செயல் ஆகியவற்றில் முழு உறுதியுடன் இருப்பதாகவும் பிரதமர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள். தூய்மையான எரிசக்தி அமைப்புகள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் எரிபொருள், மேலும் உயர்ந்த எரிசக்திச் சிக்கனப்பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான முயற்சிகளைத் தொடரவும் பிரதமர்கள் ஒப்புக்கொண்டனர். அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் மகளிரின் முழு அளவிலான, அர்த்தமுள்ள பங்கேற்பு அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர்கள், மகளிர் அதிகாரம் அளித்தலுக்கு முக்கியத்துவம் தர ஒப்புக்கொண்டனர்.
புதுமைப் படைப்புகள், பொருளாதார வளர்ச்சி, நிலையான தீர்வுகள், பரஸ்பரம் பயனளிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றை விரிவுப்படுத்த வலுவான கூட்டாண்மை அவசியம் என்பதை அனைத்து நாட்டுப் பிரதமர்களும் ஏற்றுக்கொண்டனர். கல்வி, கலாச்சாரம், தொழிலாளர் இடப்பெயர்ச்சி, தொடர்புகள், சுற்றுலா ஆகியவற்றின் மூலமான வலுவான மக்களிடையேயான தொடர்புகளின் முக்கியத்துவத்தை இந்த உச்சி மாநாடு வலியுறுத்தியது.