மனதின் குரல் (20ஆவது பகுதி)

Published By : Admin | January 31, 2021 | 10:39 IST
The country was saddened by the insult to the Tricolour on the 26th of January in Delhi: PM Modi
India is undertaking the world’s biggest Covid Vaccine Programme: PM Modi
India has vaccinated over 30 lakh Corona Warriors: PM Modi
Made in India vaccine is, of course, a symbol of India’s self-reliance: PM Modi
India 75: I appeal to all countrymen, especially the young friends, to write about freedom fighters, incidents associated with freedom, says PM Modi
The best thing that I like in #MannKiBaat is that I get to learn and read a lot. In a way, indirectly, I get an opportunity to connect with you all: PM
Today, in India, many efforts are being made for road safety at the individual and collective level along with the Government: PM

     எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது.  நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான அனுபவங்கள், நிறைவான வாழ்க்கை வாழும் உத்வேகத்தை அளிப்பது என்பதன் பெயர் தான் மனதின் குரல்.   இன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி நாள்.  இப்போது, சில நாட்கள் முன்பாகத் தானே 2021ஆம் ஆண்டு தொடங்கியது என்று என்னைப் போலவே நீங்களும் சிந்திக்கிறீர்கள் தானே!!   ஜனவரி முழுவதும் கடந்து போய் விட்டது என்ற உணர்வே ஏற்படவில்லை; இதைத் தான் காலத்தின் ஓட்டம் என்கிறார்கள்.  சில நாட்கள் முன்பு தான் நாம் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம், லோஹ்டி, மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ந்தோம், ஆனால் இவை அனைத்தும் கடந்து போனதே தெரியாமல் கடந்து விட்டன.  நாட்டின் பல பாகங்களிலும் பண்டிகைகளின் கோலாகலம் நிறைந்திருந்தது.  ஜனவரி 23ஆம் தேதியன்று நாம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை, பராக்ரம் திவஸ், அதாவது பராக்கிரம தினம் என்ற பெயரில் கொண்டாடினோம், ஜனவரி 26ஆம் தேதியான நமது குடியரசுத் தினத்தன்று கண்கொள்ளாக் காட்சியான அணிவகுப்பைக் கண்டு களித்தோம்.  இரு அவைகளின் கூட்டுத் தொடரின் துவக்கமாக குடியரசுத் தலைவரின் உரைக்குப் பின்னர்  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  இவை அனைத்தின் இடையேயும், நாம் வெகுகாலமாகக் காத்திருந்த ஒரு விஷயம் நடந்தேறியது.  அது தான் பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு.  அசாதாரணமான செயல்கள் புரிந்துவருவோரின் சாதனைகள், மனித சமூகத்தின் பொருட்டு அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு கௌரவம் அளித்தது.  பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாகச் செயலாற்றியவர்கள், தங்களின் செயல்களால் மற்றவர்களின் வாழ்க்கையில் நல்மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், நாட்டை முன்னேற்றியவர்கள் போன்றோருக்கு  இந்த ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  அதாவது, கள அளவில் பணியாற்றும் பாராட்டுப்பெறாத நாயகர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் தொடங்கப்பட்ட, பத்ம விருதுகள் வாயிலாக கௌரவம் அளிக்கும் பாரம்பரியம், இந்த முறையும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.   இந்த நபர்களைப் பற்றியும், இவர்களின் பங்களிப்பு பற்றியும் நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்வதோடு, உங்கள் குடும்பங்களிலும் இவர்களைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுங்கள் என்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன்.  இவற்றால் அனைவருக்கும் எத்தனை உத்வேகம் ஏற்படும் என்பதை அப்போது நீங்களே உணர்வீர்கள்.  

 

     இந்த மாதம், கிரிக்கெட் மைதானத்திலிருந்தும் மிக அருமையான செய்தி கிடைத்திருக்கிறது.  நம்முடைய கிரிக்கெட் அணியானது, தொடக்ககட்ட சிரமங்களுக்குப் பிறகு, அற்புதமான மீட்சி கண்டு, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றெடுத்திருக்கிறது.  நமது விளையாட்டு வீரர்களின் கடும் உழைப்பும், குழுப்பணியும் கருத்தூக்கம் அளிக்க வல்லன.  இவற்றுக்கு இடையே, தில்லியில், ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவண்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.   நாம் இனிவரும் காலங்களை நம்பிக்கை-புதுமை ஆகியவற்றால் இட்டுநிரப்ப வேண்டும்.  நாம் கடந்த ஆண்டு, அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மனவுறுதியை வெளிப்படுத்தினோம்.  இந்த ஆண்டும் நாம் நமது கடும் உழைப்பு வாயிலாக, நமது உறுதிப்பாடுகளை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.  நம்முடைய தேசத்தை, மேலும் விரைவுகதியில் நாம் முன்னேற்றிச் செல்ல வேண்டும். 

 

     எனதருமை நாட்டுமக்களே, இந்த ஆண்டின் தொடக்கத்தோடு, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.  எப்படி கொரோனாவுக்கு எதிராக பாரதத்தின் போராட்டம் ஒரு எடுத்துக்காட்டாக ஆகியுள்ளதோ, அதே போல, இப்போது, நம்முடைய தடுப்பூசித் திட்டமும், உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக ஆகி வருகின்றது.  இன்று பாரதம் உலகின் மிகப்பெரிய கோவிட் பெருந்தொற்றுத் தடுப்பு இயக்கத்தைச் செயல்படுத்தி வருகின்றது.  மேலும் நமக்கு கௌரவம் சேர்க்கும் விஷயம் என்ன தெரியுமா?  நமது மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தோடு கூடவே, உலகிலேயே மிக விரைவுகதியில் நாம் நமது குடிமக்களுக்குத் தடுப்பூசிகளையும் போட்டு வருவது தான்.  வெறும் 15 நாட்களில், பாரதம் தனது 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்குத் தடுப்பூசி போட்டு விட்டது;  ஆனால் இந்தப் பணிக்கு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்களும், பிரிட்டன் போன்ற நாட்டிற்கு 36 நாட்களும் பிடித்தன. 

 

     நண்பர்களே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, இன்று பாரதநாட்டின் தற்சார்புக்கான எடுத்துக்காட்டு என்பது மட்டுமல்ல, நாட்டின் சுயகௌரவத்துக்கும் ஒரு பறைசாற்றல்.  நமோ செயலியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, மனதில் ஒரு புதிய தன்னம்பிக்கையை நிரப்பியுள்ளதாக, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஹிமான்ஷு யாதவ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.  அயல்நாடுகளில் வாழும் தன்னுடைய பல நண்பர்களும், இந்தியாவிற்குத் தங்கள் நன்றிகளை, தனக்கு செய்தி அனுப்பித் தெரிவிப்பதாக  மதுரையைச் சேர்ந்த கீர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பாரதம் உலகின் பிற நாடுகளுக்கு உதவியிருப்பது, பாரதம் பற்றி அவர்களின் மனங்களில் மரியாதையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது என்று செய்திகள் அனுப்பித் தன்னிடத்தில் தெரிவித்திருப்பதாக, கீர்த்தி அவர்கள் கூறியிருக்கிறார்.  கீர்த்தி அவர்களே, தேசம் பற்றி பெருமை பாராட்டப்படுவதைக் கேட்டு, மனதின் குரலின் நேயர்களும் பெருமைப்படுவார்கள்.  பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும், பிரதமர்களும் இப்போது பாரதம் குறித்த இதே போன்ற செய்திகளை எனக்கும் அனுப்பி வருகிறார்கள்.  ப்ராஸீல் நாட்டுக் குடியரசுத் தலைவர், தனது ட்வீட் வாயிலாக நாட்டிற்குத் தெரிவித்திருக்கும் நன்றிகள், அனைத்து இந்தியர்களுக்கும் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்பதை நீங்களே கூடப் பார்த்திருக்கலாம்.  ஆயிரமாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில், உலகின் மறுகோடியில் வசிப்போருக்கும், இராமாயணத்தின் இந்த நிகழ்வு பற்றி எத்தனை நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது, அவர்கள் மனதில் எத்தனை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள்!!  இது தான் நமது கலாச்சாரத்தின் சிறப்பு. 

 

     நண்பர்களே, இந்த தடுப்பூசித் திட்டம் தொடர்பாக உங்கள் கவனம் வேறு ஒரு விஷயம் குறித்தும் கண்டிப்பாகச் சென்றிருக்கும்.  இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், பாரதத்தால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது, தற்சார்பு அடைந்திருக்கிறது என்பதால் தான்.  தற்சார்பு பாரத இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கும் கருத்தியலும் இது தான்.  பாரதநாடு எந்த அளவுக்கு வல்லமை உடையதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக ஆதாயம் மனித சமூகத்துக்கான சேவையில் உலகிற்கு உண்டாகும்.

 

     எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையும் உங்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  நமோ செயலியிலும், Mygov தளத்திலும் வரும் உங்கள் செய்திகள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை வாயிலாக, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.  இந்தச் செய்திகளில் ஒரு செய்தி, என் கவனம்கவர்ந்த செய்தி சகோதரி ப்ரியங்கா பாண்டேயிடமிருந்து வந்திருக்கிறது.  23 வயது நிரம்பிய சகோதரி ப்ரியங்கா அவர்கள், ஹிந்தி இலக்கியப்படிப்பு படித்து வருகிறார், பிஹாரின் சீவானில் வசித்து வருகிறார்.   நாட்டின் 15 சுற்றுலாத் தலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் எனது ஆலோசனையால் அவர் உத்வேகம் அடைந்ததால், ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று, மிகச் சிறப்பானதொரு இடத்திற்குச் சென்றதாக, நமோ செயலியில் குறிப்பிட்டிருக்கிறார்.  அது என்ன இடம் தெரியுமா?  அவரது வீட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்களின் பூர்வீக இல்லம் தான் அது.  தேசத்தின் மகத்தான நாயகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் திசையில் தனது முதல் படி இது என்று பிரியங்கா அவர்கள் மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார்.  அங்கே பிரியங்கா அவர்களுக்கு, டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் காணக் கிடைத்தன, பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்களைப் பார்க்க முடிந்தது.  உண்மையிலேயே, பிரியங்கா அவர்களின் இந்த அனுபவம், மற்றவர்களுக்கும் கருத்தூக்கத்தை ஏற்படுத்தும்.

 

     நண்பர்களே, இந்த ஆண்டு தொடங்கி பாரதம் தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் கொண்டாட்டமான, அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாட இருக்கிறது.  எவர்கள் காரணமாக நமக்கு சுதந்திரம் கிடைத்ததோ, அப்படிப்பட்ட மஹாநாயகர்களோடு தொடர்புடைய வட்டாரப் பகுதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இது ஒரு அற்புதமான, அருமையான சந்தர்ப்பம். 

 

     நண்பர்களே, நாம் சுதந்திரப் போராட்டம் மற்றும் பிஹார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நமோ செயலியில் குறிப்பிடப்படப்பட்டிருக்கும் வேறு ஒரு விஷயம் பற்றியும் பேச விரும்புகிறேன்.  முங்கேரில் வசிக்கும் ஜெய்ராம் விப்லவ் அவர்கள், தாராபுர் உயிர்த்தியாகிகள் தினம் பற்றி எழுதியிருக்கிறார்.   1932ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று, தேசபக்தர்களின் கூட்டம் ஒன்றின் பல வீரம் நிறைந்த இளைஞர்களை, ஆங்கிலேயர்கள் தயவு தாட்சணியமே இல்லாமல் கொன்று போட்டார்கள்.  அவர்கள் புரிந்த ஒரே குற்றம் – வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியது தான்.  நான் அந்த உயிர்த்தியாகிகளுக்குத் தலைவணங்குகிறேன், அவர்களின் தைரியத்திற்கு சிரத்தையுடன்கூடிய நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.  நான் ஜெய்ராம் விப்லவ் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  அதிகம் தெரியாத, ஆனால் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்தகைய ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். 

 

     என் இனிய நாட்டுமக்களே, பாரத நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், சுதந்திரப் போர் முழுவீச்சில் போரிடப்பட்டு வந்தது.  பாரதபூமியின் அனைத்து மூலைகளிலும் மகத்தான நல்மைந்தர்களும், வீராங்கனைகளும் தோன்றினார்கள்;  இவர்கள் தேசத்திற்காகத் தங்களின் வாழ்க்கையையே தியாகம் புரிந்தார்கள்.  நமக்காகப் புரியப்பட்ட இந்தப் போராட்டங்கள், இவை தொடர்பான நினைவுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, இவற்றை எழுத்துக்களில் வடித்து, நமது வருங்கால சந்ததிகளுக்கு இவற்றை உயிர்ப்போடு நாம் அளிக்க வேண்டும் என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயம்.  நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும், சுதந்திரப் போராட்டம் தொடர்பான சம்பவங்கள் பற்றியும் கண்டிப்பாக எழுதுங்கள் என்று நாட்டுமக்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீரக்காதைகள் பற்றி, புத்தகங்களில் எழுதுங்கள்.  சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை பாரதம் கொண்டாடும் வேளையில், உங்களின் எழுத்துக்கள், சுதந்திரப் போராட்ட நாயகர்களுக்கான உத்தமமான நினைவாஞ்சலிகளாகும்.  இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தை முன்னிட்டு, இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு முன்னெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது.  இதில் அனைத்து மாநிலங்கள்-மொழிகளைச் சேர்ந்த இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.  தேசத்தில் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இதனால் உருவாக்கம் பெறுவார்கள், அவர்கள் நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான அறிவு உடையவர்களாக இருப்பார்கள்.  இப்படிப்பட்ட மலரும் மொட்டுக்களுக்கு நாம் முழுமையாக உதவிகள் செய்ய வேண்டும்.  இதன் காரணமாக எதிர்காலப் போக்கைத் தீர்மானம் செய்யும் சிந்தனாசிற்பிகளின் ஒரு படை தயாராகும்.  இந்த முயல்வின் அங்கமாக ஆகவும், தங்களின் இலக்கியத் திறமைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் எனது இளைய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.  இது தொடர்பான தகவல்களை நீங்கள் கல்வியமைச்சகத்தின் இணையதளத்தில் பெறலாம்.

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரல் நேயர்களுக்கு விருப்பமானது எது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.  ஆனால் எனக்கு மனதின் குரலில் மிகவும் பிடித்தமானது எது என்றால், அது உங்களிடமிருந்து நான் பெறும் கற்றல் தான்.  உங்களோடு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், ஒருவகையில்,  உங்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கிறது.  ஒருவருடைய முயற்சி, ஒருவருடைய பேரார்வம், நாட்டிற்காக சாதித்தே தீருவேன் என்ற உணர்வுடைய ஒருவருடைய மனவுறுதி – இவை அனைத்தும் எனக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன, என்னுள் ஆற்றலை நிரப்புகின்றன. 

 

     ஹைதராபாதின் போயின்பல்லியில் உள்ள வட்டார காய்கறி சந்தையானது, எப்படி தனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறது என்பதைப் படிக்க நேர்ந்த போது, அது எனக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தியது.  பல காரணங்களால் கணிசமான அளவு காய்கறிகள் வீணாகிப் போவதை நாம் அனைவருமே கவனித்திருப்போம்.  இந்தக் காய்கறிகள் ஆங்காங்கே இரைக்கப்பட்டு, மாசினை ஏற்படுத்துகின்றன.  ஆனால், ஒவ்வொரு நாளும் மீந்து போகும் இந்தக் காய்கறிகளை நாம் ஆங்காங்கே வீசிச் செல்லக்கூடாது என்று போயின்பல்லியின் காய்கறிச் சந்தை தீர்மானம் மேற்கொண்டது, இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று முடிவெடுத்தது.  வீணாகிப் போன காய்கறிகளிடமிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.  இது தான் புதுமைகள் படைத்தலின் சக்தி.  போயின்பல்லியின் காய்கறிச் சந்தையில் ஏற்படும் கழிவுகள் இன்று செல்வமாக மாறியிருக்கின்றன – இது தான் மாசிலிருந்து மாணிக்கம், கழிவிலிருந்து செல்வம்.   அங்கே ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன்கள் அளவுக்குக் கழிவுப்பொருள் வெளியேற்றப்பட்டு, இவை ஒரு ஆலையில் குவிக்கப்படுகின்றன.  ஆலைக்குள்ளே இந்தக் கழிவுகளிலிருந்து நாளொன்றில் 500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, சுமார் 30 கிலோ உயிரி எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது.  இந்த மின்சாரத்திலிருந்து சந்தை ஒளியூட்டப்படுகிறது; உயிரி எரிபொருள், சந்தையில் இருக்கும் உணவகத்தில் உணவு தயார் செய்யப் பயன்படுகிறது.  அருமையான முயல்வு இல்லையா!! 

 

     இதே போன்ற ஒரு அருமையான செயல்பாட்டினை, ஹரியாணாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த படௌத் கிராமப் பஞ்சாயத்தும் செய்து காட்டியிருக்கிறது.  இந்தப் பஞ்சாயத்துப் பகுதியில் நீர் வெளியேற்றலில் பிரச்சனை இருந்தது.  இதன் காரணமாக கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது, நோய்கள் உண்டாயின;  ஆனால், கழிவுநீரை செல்வநீராக மாற்றுவோம் என்று படௌத்தின் மக்கள் தீர்மானம் செய்தார்கள்.  கிராமம் முழுவதிலிருந்தும் வெளியேறும் நீரை, ஓரிடத்தில் சேகரித்து, அதை வடிகட்டத் தொடங்கினார்கள்.  வடிகட்டப்பட்ட இந்த நீர், இப்போது கிராமத்து விவசாயிகளின் வயல்வெளிகளின் நீர்பாசனத் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.  அதாவது சூழல்மாசு, கழிவு, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை ஒருபுறம், வயல்களுக்கு நீர்பாசனம் இன்னொரு புறம்.

 

     நண்பர்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாயிலாக, வருவாய்க்கான பாதை எப்படி திறக்கின்றது என்பது தொடர்பான ஒரு எடுத்துக்காட்டு அருணாச்சல் பிரதேசத்தின் தவாங்கிலும் காணக்கிடைக்கிறது.  அருணாச்சல் பிரதேசத்தின் இந்த மலைப்பாங்கான பகுதியில் தான் பல நூற்றாண்டுகளாகவே, மோன் ஷுகு என்ற பெயர் கொண்ட ஒரு காகிதம் தயாரிக்கப்படுகிறது.  இந்தக் காகிதம், அந்தப் பகுதிகளில் காணப்படும் ஷுகு ஷேங் என்ற பெயரிலான ஒரு மரத்தின் பட்டைகளிலிருந்து தயார் செய்யப்படுகிறது.  ஆகையால் தான் இந்தக் காகிதத்தைத் தயார் செய்ய, இந்த மரங்களை வெட்டத் தேவையில்லாமல் இருக்கிறது.  இதைத் தவிர, இதைத் தயார் செய்ய எந்த ஒரு வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுவது கிடையாது.  அதாவது இந்தக் காகிதம் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது, உடல்நலத்துக்கும் கேடு விளைவிக்காதது.  ஒரு காலத்தில் இந்தக் காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.  ஆனால் நவீன தொழில்நுட்பம் பெரிய அளவில் காகிதம் தயாரிக்கத் தொடங்கிய போது, இந்த வட்டாரக் கலை அஸ்தமனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது.  இப்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகசேவகரான கோம்பூ அவர்கள், இந்தக் கலைக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  இதனால் இங்கே பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 

 

     மேலும் ஒரு செய்தியை நான் கேரளத்திலிருந்து பார்க்க நேர்ந்தது.  இது நம்மனைவருக்கும் பொறுப்புணர்வை ஊட்டக் கூடியது.  கேரளத்தின் கோட்டயம் பகுதியில் மூத்த மாற்றுத் திறனாளி ஒருவர் இருக்கிறார், இவர் பெயர் என்.எஸ். ராஜப்பன் அவர்கள்.  ராஜப்பன் அவர்கள் பக்கவாதம் காரணமாக, நடமாட முடியாமல் இருந்தாலும், தூய்மை மீது இவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பில் எந்தக் குறைவும் இல்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே இவர் வேம்பநாடு ஏரியில் தனது படகில் பயணித்து, ஏரியில் வீசி எறியப்பட்டிருக்கும் நெகிழிப் பொருட்களை  வெளியே எடுத்து வருகிறார்.  ராஜப்பன் அவர்களின் சிந்தனை எத்தனை உயரியது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!!  நாமும் ராஜப்பன் அவர்களிடமிருந்து கருத்தூக்கம் அடைந்து, தூய்மைக்காக நம்மால் இயன்ற பங்களிப்பை நல்குவோம்.

 

     எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, அமெரிக்காவின் சேன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரூ வரை, விமானத்தை இடைவிடாது செலுத்தி, நான்கு இந்தியப் பெண்கள் சாதனை படைத்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  10,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து இந்த விமானம், 225ற்கும் மேற்பட்ட பயணிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.   இந்திய விமானப்படையைச் சேர்ந்த, இரண்டு பெண் அதிகாரிகள், புதிய வரலாற்றைப் படைத்திருப்பதை, இந்தமுறை நடைபெற்ற ஜனவரி 26ஆம் தேதி அணிவகுப்பில் நீங்கள் கவனித்திருக்கலாம்.  எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தேசத்தின் பெண்மணிகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஆனால், பல வேளைகளில், தேசத்தின் ஊரகப்பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பதை நாம் பார்க்கிறோம்.  ஆகையால் தான், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சார்ந்த ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்த போது, இது குறித்து கண்டிப்பாக மனதின் குரலில் கூறியே ஆக வேண்டும் என்று நான் தீர்மானம் செய்தேன்.  இந்தச் செய்தி மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.  ஜபல்பூரின் சிச்காவைச் சேர்ந்த பெண்கள் ஒரு அரிசி ஆலையில், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்கள்.  கொரோனா உலகம் தழுவிய பெருந்தொற்று, உலகின் அனைத்து மக்களையும் பாதித்ததைப் போல, இந்தப் பெண்களும் பாதிக்கப்பட்டார்கள்.  அவர்களுடைய அரிசி ஆலையிலும் பணி நிறுத்தப்பட்டது.  இதன் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டது.  ஆனால் இதனால் எல்லாம் நிலைகுலையாத இந்தப் பெண்கள், தாங்களே இணைந்து ஒரு அரிசி ஆலை தொடங்கத் தீர்மானம் செய்தார்கள்.  எந்த ஆலையில் அவர்கள் பணி புரிந்தார்களோ, அந்த ஆலைக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் இயந்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்தார்கள்.  இவர்களில் மீனா ராஹங்கடாலே என்பவர், பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுய உதவிக் குழு ஒன்றை ஏற்படுத்தினார், அனைவரும் தங்களின் சேமிப்பு அனைத்தையும் மூலதனமாகத் திரட்டினார்கள்.  பற்றாக்குறையாக இருந்த தொகையை இவர்கள் ஆஜீவிகா மிஷன், அதாவது வாழ்வாதார இயக்கம் என்பதற்கு உட்பட்டு, வங்கியில் கடனாகப் பெற்றார்கள்.  இந்த பழங்குடியினப் பெண்கள், தாங்கள் முன்பு வேலை செய்துவந்த ஆலையையே விலைக்கு வாங்கி விட்டார்கள்.  இன்று இவர்கள் சொந்தமாக ஒரு அரிசி ஆலையை நடத்தி வருகின்றார்கள்.  மிகக் குறைவான நாட்களில் இந்த ஆலையானது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் சம்பாதித்திருக்கிறது.  இந்த இலாபத்தால் மீனா அவர்களும், அவருடைய கூட்டாளிகளும், முதலில் வங்கிக் கடனை முழுமையாகத் திருப்பிக் கட்டவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் தேவையான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  கொரோனா உருவாக்கிய சூழ்நிலைகளுக்கு எதிராக, தேசத்தின் பல்வேறு மூலைகளிலும் அற்புதமான பணிகள் அரங்கேறியிருக்கின்றன. 

 

     எனதருமை நாட்டுமக்களே, நான் புந்தேல்கண்ட் பகுதியைப் பற்றிப் பேசினேன் என்றால், உங்கள் நினைவுகளுக்கு என்னவெல்லாம் தோன்றும்?  வரலாற்று அபிமானிகள், இந்தப் பகுதியை ஜான்சியின் இராணி லக்ஷ்மிபாயோடு தொடர்புபடுத்துவார்கள்.  வேறு சிலரோ, அழகும், அமைதியும் நிறைந்த ஓர்ச்சாவைப் பர்றி எண்ணமிடுவார்கள்.  இன்னும் சிலருக்கு, இந்தப் பகுதியின் தகிக்கும் வெப்பம் மீது நினைவு செல்லும்.  ஆனால், இப்போதெல்லாம் இங்கே, வித்தியாசமானவை அரங்கேறி வருகின்றன.  இது மிகவும் உற்சாகமூட்டுவது, இதைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  கடந்த சில நாட்களாக ஜான்சியில், ஒரு மாதம் வரை நடைபெறக்கூடிய ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம் தொடங்கியது.  புந்தேல்கண்டுக்கும் ஸ்ட்ராபெர்ரிக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.  ஆனால் இது உண்மை.  இப்போது புந்தேல்கண்டில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி தொடர்பாக உற்சாகம் அதிகரித்து வருகிறது.  இந்த விஷயத்தில் பெரும்பங்கினை ஒருவர் ஆற்றியிருக்கிறார் என்று சொன்னால், அவர் ஜான்சியின் ஒரு பெண்மணியான குர்லீன் சாவ்லா அவர்கள்.   சட்டப்படிப்பு படிக்கும் குர்லீன் அவர்கள், முதலில் தனது வீட்டிலும், பின்னர் தனது வயலிலும் ஸ்ட்ராபெர்ரியை பரீட்சார்த்தமாக வெற்றிகரமாக விளைவித்து, ஜான்சியிலும் இதைப் பயிரிட முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.  ஜான்சியின் ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம், வீட்டில் இருந்தபடியே என்ற கோட்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.  விவசாயிகளும், இளைஞர்களும் தங்களுடைய இல்லங்களின் பின்புறத்தில் இருக்கும் வெற்றிடங்களிலோ, மாடிகளில் மாடிக்கூரைத் தோட்டமாகவோ, ஸ்ட்ராபெர்ரிகளை விளைவிக்க, இந்தக் கொண்டாட்டம் வாயிலாக ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.  புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு, இத்தகைய முயல்வுகள் தேசத்தின் பிற பாகங்களிலும் நடந்தேறி வருகின்றன.  மலைகளின் அடையாளமாக விளங்கும் ஸ்ட்ராபெர்ரி இப்போது, கட்ச் பகுதியின் மணல்பாங்கான நிலத்திலும் விளைவிக்கப்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வருகிறது. 

 

     நண்பர்களே, ஸ்ட்ராபெர்ரி கொண்டாட்டம் போன்ற பரிசோதனைகள், எப்படி புதுமைகள் படைத்தல் உணர்வைப் பிரதிபலிக்கின்றனவோ, அதே நேரத்தில், நமது தேசத்தின் விவசாயத் துறை எந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தை அரவணைக்கிறது என்பதற்கும் ஒளி சேர்க்கிறது. 

 

     நண்பர்களே, விவசாயத்தை நவீனமயமாக்க அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கிறது, இதற்கான பல படிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.  இனிவரும் காலத்திலும் அரசின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். 

 

     எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, நான் ஒரு காணொளியைக் காண நேர்ந்தது.  அந்தக் காணொளி மேற்கு வங்கத்தின் மேற்கு மித்னாபூரில் இருக்கும் நயா பிங்கலா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஓவியரான சர்முத்தீன் பற்றியது.  இராமாயணம் தொடர்பாக அவர் வரைந்த ஓவியம், இரண்டு இலட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.  இதனால் அவரது கிராம மக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  இந்தக் காணொளியைக் கண்ட பின்னர், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டானது.  இது தொடர்பாக, மேற்கு வங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு மிக நல்ல முன்முயற்சி பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது, இதை உங்களோடு பகிர விரும்புகிறேன்.  சுற்றுலா அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம், மாதத் தொடக்கத்திலேயே வங்காளத்தின் கிராமங்களில் ஒரு, Incredible India Weekend Gateway, அதாவது அற்புதமான இந்தியா வார இறுதி நுழைவாயில் என்பதைத் தொடக்கியது.  இதில், மேற்கு மித்னாபுர், பாங்குரா, பீர்பூம், புரூலியா, கிழக்கு பர்தமான் ஆகிய இடங்களின் கைவினைஞர்களைக் கொண்டு, வருகையாளர்களுக்கென, கைவினைப் பொருட்களின் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.  இந்த அற்புதமான இந்தியா வார இறுதி நுழைவாயில்படி, கைவினைப் பொருட்களின் மொத்த விற்பனை, கைவினைஞர்களுக்கு அதிக ஊக்கமளிப்பதாக இருந்தது.  நாடெங்கிலும் உள்ளவர்களும் புதியபுதிய வழிமுறைகள் வாயிலாக, நம்முடைய கலைகளை வெகுஜனங்களுக்குப் பிரியமானவையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   ஒடிஷாவின் ரூர்கேலாவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ சாஹூவையே எடுத்துக் கொள்வோமே!!  இவர் பொறியியல் மாணவர் என்றாலும், கடந்த சில மாதங்களாக இவர் சீலைஓவியக்கலையைக் கற்கத் தொடங்கி, இதில் வல்லவரானார்.  சரி, இவர் எங்கே தனது ஓவியத்தை வரைந்தார் தெரியுமா?  மென்கற்களில் தான்.  கல்லூரி செல்லும் வழியில், பாக்யஸ்ரீ அவர்களுக்கு இந்த மென்கற்கள் தட்டுப்பட்டன, உடனே இவற்றை திரட்டி, சுத்தம் செய்தார்.  பின்னர், இவர் தினமும் 2 மணிநேரம் இந்தக் கற்களின் மீது, சீலை ஓவிய பாணியில் வரையத் தொடங்கினார்.  இந்தக் கற்களின் மீது பூச்சுப் பூசி, தனது நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கத் தொடங்கினார்.  பொதுமுடக்கத்தின் போது, இவர் பாட்டில்களின் மீது வரையத் தொடங்கினார்.  இப்போதோ இவர், இந்தக் கலை பற்றிய பட்டறைகளை நடத்தி வருகிறார்.  சில நாட்கள் முன்பாக, சுபாஷ் பாபுவின் பிறந்தநாளின் போது, பாக்யஸ்ரீ அவர்கள், கற்களின் ஓவியம் வாயிலாக வித்தியாசமான நினைவாஞ்சலிகளை செலுத்தினார்.  இனி வருங்காலத்தில், இவருடைய முயற்சிகள் வெற்றிபெற என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கலை மற்றும் வண்ணங்கள் வாயிலாக, மிகப்  புதுமையான கற்றல் ஏற்படக்கூடும், ஏற்படுத்த முடியும்.  ஜார்க்கண்டின் தும்காவில் புரியப்பட்ட ஒரு இணையற்ற முயற்சி பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  இங்கே, இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், பிள்ளைகளுக்குக் கற்பிக்க, கிராமத்தின் சுவர்களையே, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி எழுத்துக்களால் நிரப்பி விட்டார்.  மேலும், இதிலே பலவகையான ஓவியங்களையும் ஏற்படுத்தியதால், கிராமத்தின் பிள்ளைகளுக்கு மிக உதவிகரமாக இருக்கிறது.  இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரத நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், பல பெருங்கடல்கள், பெருந்தீவுகளைக் கடந்து உள்ள தேசம், சிலே.  இந்தியாவிலிருந்து சீலே சென்றடைய அதிககாலம் பிடித்தாலும், இந்தியக் கலாச்சாரத்தின் மணம், அங்கே நெடுங்காலம் முன்பாகவே பரவியிருக்கிறது.  மேலும் ஒரு விசேஷமான விஷயம் என்னவென்றால், அங்கே யோகக்கலை, அதிகம் பிரபலமானதாக இருக்கிறது.  சீலேயின் தலைநகரான சாண்டியாகோவில் 30க்கும் மேற்பட்ட யோகக்கலைப் பள்ளிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  House of Deputiesஇல் யோகக்கலை தினம் தொடர்பாக, அதிக வரவேற்பு நிறைந்த சூழல் நிலவுவதாக எனக்கு தெரிவிக்கப் பட்டிருக்கிறது.   கொரோனா காலகட்டமான இப்பொழுது, நோய் எதிர்ப்புத் திறன் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தத் திறனை அதிகரிப்பதில் யோகக்கலையிடம் இருக்கும் வல்லமையைப் பார்த்த மக்கள், முன்பை விட இப்பொழுது யோகக்கலைக்கு அதிக மகத்துவம் அளித்து வருகின்றார்கள்.  சீலேயின் காங்கிரஸ், அதாவது அந்நாட்டு நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தையே இயற்றியிருக்கிறது.  அங்கே, நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று தேசிய யோகக்கலை தினமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.  சரி, நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று என்ன பெரிய விசேஷம் என்று நீங்கள் எண்ணமிடலாம்.  1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று தான், முதலாவது யோக அமைப்பினை, ஹோஜே ராஃபால் எஸ்த்ரேதா நிறுவினார்.  இந்த நாளை தேசிய யோகக்கலை தினமாக அறிவித்து, எஸ்த்ராதா அவர்களுக்கு ச்ரத்தாஞ்சலிகளும் அளிக்கப்பட்டிருக்கிறது.  சீலேயின் நாடாளுமன்றம் வாயிலாக இது சிறப்பானதொரு கௌரவம், இந்தியர்களான நமக்கு இது பெருமிதம்.  மேலும், சீலேயின் நாடாளுமன்றத்தோடு தொடர்புடைய வேறு ஒரு விஷயமும் உங்களுக்கு சுவாரசியமானதாக இருக்கலாம்.  சீலேயின் senate, அதாவது மூதவையின் துணை குடியரசுத் தலைவரின் பெயர் ரபீந்திரநாத் க்விண்டேராஸ்.  உலகக்கவியான குருதேவ் டகோரால் உத்வேகம் பெற்று இடப்பட்டிருக்கும் பெயராகும் இது.

 

     எனதருமை நாட்டுமக்களே, MyGovதளத்தில், மஹாராஷ்ட்ரத்தின் ஜால்னாவைச் சேர்ந்த டாக்டர். ஸ்வப்னில் மந்த்ரி அவர்களும், கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த பிரஹலாத் ராஜகோபாலனும் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்கள்.  அதாவது சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும் மனதின் குரலில் நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை, நம்முடைய நாட்டில் சாலை பாதுகாப்பு மாதமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.   சாலை விபத்துக்கள் இன்று நமது தேசத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கவலை அளிப்பனவாக இருக்கின்றன.  இன்று பாரதநாட்டில் சாலைப் பாதுகாப்பிற்காக, அரசோடு, தனியார் மற்றும் சமூக அளவிலான பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  உயிர்காக்கும் இந்த முயற்சிகளில், நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும். 

 

     நண்பர்களே, எல்லையோர சாலைகள் நிறுவனம் உருவாக்கும் சாலைகளில் பயணிக்கும் போது, பல நூதனமான slogans, அதாவது கோஷங்களை நீங்கள் பார்க்கலாம்.  This is highway, not runway, அதாவது இது நெடுஞ்சாலை, விமானஓடுபாதை அல்ல.  Be Mr. Late than Late Mr., அதாவது கால தாமதமானாலும் பரவாயில்லை, காலமானவர் என்று ஆகி விடாதீர்கள் போன்ற கருத்தைக்கவரும் கோஷங்கள், மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவல்லவையாக இருக்கின்றன.  இவை போன்ற கருத்தைக்கவரும் நூதனமான கோஷங்களையோ, சிந்தையை ஈர்க்கும் வாசகங்களையோ நீங்கள் MyGovக்கு அனுப்புங்கள்.  உங்களுடைய நல்ல கோஷங்களும், இந்த இயக்கத்திற்குப் பயனாகும்.

 

     நண்பர்களே, சாலை பாதுகாப்பு பற்றிப் பேசும் வேளையில், கோல்காத்தாவின் அபர்ணா தாஸ் அவர்கள் நமோ செயலியில் அளித்திருக்கும் ஒரு தகவல் பற்றிப் பேச விரும்புகிறேன்.  அபர்ணா அவர்கள் நான் Fast Tag திட்டம் பற்றிப் பேச வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.  Fast Tag வாயிலாக, பயணத்தின் அனுபவமே மாறி விட்டது என்று இவர் கூறுகிறார்.   இதனால் நேரம் சேமிக்கப்படுவதோடு, சுங்கச் சாவடியில் தடைப்பட்டு, பணமாகச் செலுத்த வேண்டிய தேவையற்ற கவலைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.  அபர்ணா அவர்கள் கூறுவது சரிதான்.  முன்பெல்லாம் சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வாகனமும் 7 முதல் 8 நிமிடங்கள் வரை சராசரியாக தாமதிக்க வேண்டியிருந்தது.   ஆனால் Fast Tag வந்த பிறகு, இந்த நேரம் ஒண்ணரை முதல் 2 நிமிடங்கள் சராசரி காத்திருப்பு என்று ஆகி விட்டது.  சுங்கச் சாவடியில் காத்திருப்பு நேரம் குறைந்து போனதால், வாகனத்தின் எரிபொருள் சேமிப்பு ஏற்படுகிறது.  இதனால் நாட்டுமக்களின், கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய்கள் சேமிக்கப்படுகின்றன என்று அனுமானிக்கப் படுகிறது.  அதாவது பணமும் மிச்சம், நேரமும் மிச்சம்.  அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுங்கள், உங்களின் மீதும் அக்கறை செலுத்துங்கள், மற்றவர்கள் உயிர் மீதும் கரிசனம் காட்டுங்கள், இதுவே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள். 

 

     எனதருமை நாட்டுமக்களே, நம் நாட்டிலே ஒரு வழக்குச் சொற்றொடர் உண்டு.       जलबिंदु निपातेन क्रमशः पूर्यते घटः” | – ஜலபிந்து நிபாதேன க்ரமஷ: பூர்யதே கட:, ஜ்ஜ்அதாவது, ஒவ்வொரு சொட்டு நீரால் தான் குடம் நிரம்புகிறது.   நம்முடைய ஒவ்வொரு முயற்சியும், நம்முடைய மனவுறுதியை மெய்ப்பிக்கும்.  ஆகையால் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தை, எந்த இலக்குகளோடு நாம் மேற்கொண்டோமோ, அவற்றை நாமனைவருமாக இணைந்து நிறைவேற்ற வேண்டும்.  நாம் அனைவரும் இணைந்து இந்த ஆண்டினை பொருள்சார்ந்த ஒன்றாக ஆக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம், வாருங்கள்.  நீங்கள் உங்களுடைய செய்திகளை, உங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம்.  

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg

Media Coverage

5 Days, 31 World Leaders & 31 Bilaterals: Decoding PM Modi's Diplomatic Blitzkrieg
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister urges the Indian Diaspora to participate in Bharat Ko Janiye Quiz
November 23, 2024

The Prime Minister Shri Narendra Modi today urged the Indian Diaspora and friends from other countries to participate in Bharat Ko Janiye (Know India) Quiz. He remarked that the quiz deepens the connect between India and its diaspora worldwide and was also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

He posted a message on X:

“Strengthening the bond with our diaspora!

Urge Indian community abroad and friends from other countries  to take part in the #BharatKoJaniye Quiz!

bkjquiz.com

This quiz deepens the connect between India and its diaspora worldwide. It’s also a wonderful way to rediscover our rich heritage and vibrant culture.

The winners will get an opportunity to experience the wonders of #IncredibleIndia.”