புதிய விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு எவ்வாறு கிடைக்கச் செய்வது மற்றும் பொம்மை தயாரிப்பின் பெரிய மையமாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்பது குறித்து காந்தி நகரில் உள்ள குழந்தைகள் பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் அமைச்சகம், கல்வி அமைச்சகம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றோடு நடந்த தனது உரையாடல்களைக் குறித்து மனதின் குரலின் புதிய உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். விளையாட்டுப் பொருள்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் அதே வேளையில் நமது ஆசைகளுக்கும் சிறகு கட்டி விடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுப் பொருள்கள் மனதுக்கு மட்டும் மகிழ்ச்சியை அளிப்பதில்லை, மாறாக அவை மனதை செம்மைப்படுத்துவதிலும், நோக்கத்தை ஆழப்படுத்துவதிலும் துணை புரிகின்றன என்று அவர் கூறினார்.
விளையாட்டுப் பொருள்கள் தொடர்பாக குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்
கூறியிருப்பதைப் பற்றி பிரதமர் நினைவு கூர்ந்தார். எந்த விளையாட்டுப் பொருள் முழுமையடையாமல் இருக்கிறதோ, தங்கள் விளையாட்டுகளின் போது குழந்தைகளால் இணைந்து எந்த விளையாட்டு பொருள் நிறைவு செய்யப் படுகிறதோ அதுவே சிறந்தது என்று குருதேவ் கூறியிருக்கிறார் என்று அவர் கூறினார். விளையாட்டுப் பொருள்கள் சிறார்களின் குழந்தைத்தனத்தை வெளிக் கொண்டு வர வேண்டும், அவர்களின் படைப்புத் திறனை மலரச் செய்ய வேண்டும் என்று குருதேவ் கூறினார் என்று அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் வாழ்க்கையில் பலவகையான கட்டங்களில் விளையாட்டுப் பொருள்கள் ஏற்படுத்தும் தாக்கம் மீது தேசிய கல்விக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது என்று பிரதமர் கூறினார். சிறப்பான விளையாட்டுப் பொருள்களை வடிவமைப்பதில் திறன் படைத்த, திறமைசாலிக் கைவினைஞர்கள் உண்டு என்றும் கர்நாடகத்தின் ராமநகரத்தில் உள்ள சன்னபட்னா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணாவில் இருக்கும் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர், அசாமின் துப்ரி, உத்திரப்பிரதேசத்தின் வாராணசி போன்ற இந்தியாவின் சில இடங்கள் விளையாட்டுப் பொருள்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். உலக அளவிலான விளையாட்டுப் பொருள் தயாரிப்புத் தொழில், ஏழு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான
பெறுமானமுடையது என்றும் ஆனால் இத்தனை பெரிய வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவானது என்றும் அவர் மேலும் கூறினார்.
மிகவும் தரமான ஏட்டி கொப்பாக்கா பொம்மைகளைச் செய்து உள்ளூர் பொம்மைகளின் இழந்த பெருமையை மீட்டெடுத்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சி.வி. ராஜுவின் செயலைப் பிரதமர் பாராட்டினார். உள்ளூர்ப் பொருள்களுக்காகக் குரல் கொடுக்கும் நேரம் இது என்று குறிப்பிட்ட பிரதமர், இணைந்து பொம்மைகளைத் தயாரிக்குமாறு தொழில்முனைவோரைக் கேட்டுக் கொண்டார்.
கணினி விளையாட்டுகள் பிரபலமாக இருப்பதைப் பற்றி பேசிய பிரதமர், நமது வரலாறு சார்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பற்றிய விளையாட்டுகளை உருவாக்குமாறு ஆலோசனை தெரிவித்தார்.