தற்போது வெளிநாட்டுப் பணிகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவரும் இந்திய வெளிநாட்டுப் பணி பயிற்சி அதிகாரிகள் 39 பேர் இன்று (14.05.2018) புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.
பயிற்சி அதிகாரிகளிடையே பேசிய பிரதமர், இந்தியாவின் வளமான வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியாவை வெளிநாடுகளில் சித்தரிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய வெளிநாட்டுப் பணி அதிகாரிகள் நடப்பு தேசிய முன்னுரிமைகளுக்கு மட்டுமன்றி தேச மேம்பாட்டின் எதிர்காலத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், சிறப்பான தொழில்நுட்ப முனைப்பை உருவாக்கி வெளிநாட்டு அரசுகளுடனும், வெளிநாடு வாழ் இந்திய மக்களிடமும் முழு ஈடுபாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். வெளிநாடு இந்தியர்கள் வெளியுறவு விஷயங்களில் முக்கியமான அக்கறை கொண்ட தரப்பினராக மாறி வருகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தற்போது வெளிநாட்டுப் பணி நிறுவனத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்குபெற்றுள்ள பூட்டானை சேர்ந்த இரண்டு தூதரக அதிகாரிகளும் இந்த குழுவில் இணைந்து பிரதமரை சந்தித்தனர்.