சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய செய்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் - 19 அவசர நிலை நிதியம் உருவாக்க யோசனை தெரிவித்தார். இது அனைத்து சார்க் நாடுகளின் தன்னார்வ பங்களிப்பின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடக்கமாக, இந்தியா தொடக்க நிதியாக 10 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த நிதியத்துக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.
உடனடி செயல்பாடுகளுக்கான தேவைகளுக்கு, எந்தவொரு சார்க் நாடும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட விரைந்து செயல்படும் குழு ஒன்று உருவாக்கப்படும். இதில் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும்.
மற்ற சார்க் நாடுகளின் அவசர நிலை செயல்பாட்டுக் குழுவினருக்கு ஆன்லைன் மூலம் விரைந்து பயிற்சி அளிப்பதற்கும் எங்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார். எங்களுடைய அவசர நிலை செயல்பாட்டு அலுவலர்களின் திறன்களை மேம்படுத்த, இந்தியாவுக்குள் பயன்படுத்திய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
இந்தியா உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு முனையம் பற்றி பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். வைரஸ் தொற்று உள்ளவர்களையும், அவர்கள் தொடர்பு கொண்டவர்களையும் பின்தொடர்ந்து கண்காணிப்பதில் சிறந்த நடைமுறையாக இது இருக்கும் என்றார் அவர். இந்த நோய்க் கண்காணிப்பு மென்பொருளை சார்க் பங்காளர்களுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளவும், இதைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.