1. இந்திய குடியரசின் தலைவர் மேதகு ராம்நாத் கோவிந்த் மற்றும் முதல் இந்தியப் பெண்மணியான திருமதி. சவிதா கோவிந்த், ஆகியோரின் அழைப்பின் பேரில் மியன்மர் ஐக்கிய குடியரசுத் தலைவர் மேதகு யு வின் மின்ட், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான திருமதி டாவ் சோ சோ ஆகிய இருவரும் 2020 பிப்ரவரி 26 முதல் 29 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கின்றனர். மியன்மர் குடியரசுத் தலைவர் யு வின் மைன்ட் மற்றும் அவரது குழுவினர் புத்த கயா, ஆக்ரா உள்ளிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும். இந்தப் பயணம் பாரம்பரியமான உயர்மட்ட தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு, இந்த இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் நிலவும் வலுவான நட்புறவு மிக்க உறவுகளை எடுத்துரைப்பதாகவும் அமையும்.
2. 2020 பிப்ரவரி 27 அன்று புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மியன்மர் குடியரசுத்தலைவர் மற்றும் மியன்மர் நாட்டின் முதல் பெண்மணி டா சோ சோ ஆகியோருக்கு மரபுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நம் நாட்டிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அரசு முறையிலான விருந்தொன்றை அளித்தார். மியன்மர் குடியரசுத் தலைவர் யு வின் மிண்ட் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்ததோடு மதிய உணவு விருந்தொன்றையும் அவருக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களும் மியன்மர் அதிபர் யு வின் மிண்ட் அவர்களை சந்தித்துப் பேசினார். இந்த வருகையின்போது பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன.
3. கலந்துரையாடல்களின்போது இரு நாட்டுத் தலைவர்களும் இரு நாடுகளுக்கும் பொதுவான இரு தரப்பு, பிரதேச அளவிலான, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர். உயர்மட்ட அளவிலான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இரு தரப்பு உறவுகளுக்கு மேலும் ஊக்கமளித்து உள்ளதையும் அவர்கள் வலியுறுத்தினர். மியன்மரின் சுயேச்சையான, செயல்துடிப்பு மிக்க, அணிசேரா வெளியுறவுக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படுவது’, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது’ ஆகிய இந்தியாவின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒத்திசைவையும் அவர்கள் வரவேற்றதோடு, இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர். மேலும் இந்த இரு நாடுகள், அவற்றின் குடிமக்கள் ஆகியோரின் பரஸ்பர நலன்களுக்காக இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வழிவகைகளை கண்டறியவும் அவர்கள் உறுதிபூண்டனர்.
4. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகளை பரஸ்பரம் மதித்து நடந்து கொள்வது குறித்தும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும் தற்போதுள்ள எல்லை குறித்த குழுக் கூட்டம் போன்ற இதர இருதரப்பு ஏற்பாடுகளின் மூலம் எஞ்சியுள்ள விஷயங்களுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
5. தங்கள் உறவுகளில் மையமாக விளங்கும் தொடர்புத் தன்மையை இருதரப்பினரும் வலியுறுத்தியதோடு, மியன்மரில் இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்த தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை மியன்மர் தொடர்ந்து மேற்கொள்ளும்.
6. தாமு-மோரே, ரிக்வதார்- சோகாவ்தார் ஆகிய நிலவழியாகச் செல்லும் சர்வதேச எல்லைப் பகுதிக்கான வாயில்களை திறப்பதை இரு தரப்பு வரவேற்றனர். இது தொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, கட்டமைப்புகளை விரைந்து வளர்த்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேலும் எளிதாக்குவதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மியன்மர் நாட்டில் உள்ள தாமுவில் முதல் கட்டமாக ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியை கட்டுவது குறித்த தமது உறுதிப்பாட்டை இந்தியத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. இத்திட்டம் விரைவில் தொடங்குவதற்கான வேலைகளை இணைந்து மேற்கொள்ளவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. வாகனங்கள், இரு நாடுகளின் எல்லைகளை கடந்து செல்வதை எளிதாக்கும் வகையில், தற்போது நிலுவையில் உள்ள இருதரப்பு வாகன ஒப்பந்தம் குறித்த விவாதங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவரவும் இருதரப்பும் உறுதி பூண்டன. இந்தப் பின்னணியில் 2020 ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் இம்ப்பால் நகரத்திற்கும் மண்டாலாய் நகரத்திற்கும் இடையே ஒருங்கிணைந்த பேருந்து சேவையை தொடங்க சம்பந்தப்பட்ட நாடுகளின் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
7. இந்த இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும் எல்லைப் பகுதி சந்தைகளை நிறுவும் பணியைத் தொடங்கவும் ஒப்புக் கொண்டனர். 2012ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டவகையில் ஒரு முன்மாதிரி திட்டத்தை மேற்கொள்வது தற்போது முன்னுரிமை மிக்கது என்றும் அவை குறிப்பிட்டன. இவற்றின் செயல்பாட்டு முறை குறித்து இருதரப்பும் ஒப்புக் கொண்ட பிறகு எல்லைப் பகுதிகளில் சந்தைகளை நிறுவுவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் இருதரப்பும் தெரிவித்தனர்.
8. இந்திய மானிய உதவித் திட்டங்கள் மூலம் மியன்மரின் சின் மாநிலம் மற்றும் நாகா சுயாட்சிப் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை வழங்குவதில் மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் வெற்றி குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இதன் கீழ், மேற்கூறிய பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 43 பள்ளிகள், 18 சுகாதார நிலையங்கள் மற்றும் 51 பாலங்கள் மற்றும் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த நிதியுதவியின் நான்காவது ஆண்டுத் தவணையில் 29 கூடுதல் திட்டங்கள் 2020-21 நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்பதையும் இருதரப்பினரும் திருப்தியுடன் ஒப்புக் கொண்டனர்.
9. இரு தலைவர்களும் சிட்வே துறைமுகம் மற்றும் கலாடன் பன்னோக்கு போக்குவரத்து திட்டம் தொடர்பான சாதகமான முன்னேற்றங்களை கவனத்தில் கொண்டனர். சிட்வே துறைமுகம் மற்றும் பலேத்வா உள்நாட்டு நீர் போக்குவரத்து முனையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 2020 பிப்ரவரி 1 முதல் ஒரு துறைமுக ஆபரேட்டரின் நியமனத்தையும் அவர்கள் வரவேற்றனர். இந்த துறைமுகம் செயல்படத் தொடங்கியதும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும். கலாடன் திட்டத்தின் இறுதிப் பகுதியான பலேட்வா- ஜொரின்புய் சாலைத் திட்டம் விரைவில் நிறைவு பெறுவது குறித்த தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த பாதை முடிந்ததும், இது சிட்வே துறைமுகத்தை வடகிழக்கு இந்தியாவுடன் இணைக்கும். இதனால் துறைமுகத்திற்கு செல்லும் போக்குவரத்து அதிகமாகும். மேலும் திட்ட பணியாளர்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை நகர்த்துவதற்கான முயற்சிகளில் மியான்மரின் ஒத்துழைப்பையும் இந்தியா பாராட்டியது. கலடான் பன்னோக்கு போக்குவரத்துக்கான சாலைத் திட்ட்த்தின் ஒரு பகுதி மிசோரம் எல்லை தாண்டி ஜோரின்பூய் வழியாக தெற்கே பலேத்வா நோக்கி சென்றது.
10. 2021-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் மும்முனை நெடுஞ்சாலையின் கலேவா – யார்க்யி சாலைப் பிரிவு வேலைகளின் முன்னேற்றம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்த மும்முனை நெடுஞ்சாலையில் உள்ள 69 பாலங்களை வெகுவிரைவில் மேம்படுத்தித் தருவது என்ற தனது உறுதிமொழியை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது. இதற்கான உதவிகளைச் செய்வதாக மியன்மர் ஒப்புக் கொண்டது.
11. திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் இந்தியாவின் உதவியை மியன்மர் பாராட்டியது. நீண்ட கால அடிப்படையில் நீடித்திருக்கும் வகையில் மியன்மர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான முன்னேறிய மையம் போன்ற முன்னோடி திட்டங்களை மேற்கொள்வது எனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. யாமேதின் நகரில் அமைந்துள்ள பெண் காவலர்களுக்கான பயிற்சி மையத்தை மேம்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்ட பிறகு விரைவில் முடிவடையும் என்றும் இரு நாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவின் நிதியுதவியுடன் பக்கோக்கு மற்றும் மிங்யான் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட மியன்மர்-இந்திய தொழில் பயிற்சி மையங்கள் மியன்மர் நாட்டு இளைஞர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் வகையில் தனித்திறன்களை வழங்குவதில் முன்னணி வகிப்பதையும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். மொனிவா, தடோன் ஆகிய இடங்களில் புதிதாக இரண்டு மையங்களை உருவாக்குவதில் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
12. மியன்மர் நாட்டில் உள்ள ராகேன் மாநிலத்தில் ராகேன் மாநில வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அமைதி, நிலைத்தன்மை, சமூக-பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கொண்டுவர மியன்மர் நாடு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டில் வடக்கு ராகேன் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தயார் செய்து நேரடியாகப் பொருத்தும் நிலையில் உள்ள 250 வீடுகள், இதர நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியதையும் மியன்மார் பாராட்டியது. ராகேன் மாநில வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் 12 திட்டங்களை நிறைவேற்றுவதை விரைவுபடுத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். மேகாங் – கங்கா ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள், உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகிய கட்டமைப்பிற்குள் வளர்ச்சி குறித்த தங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர். அவ்வகையில் இந்த அரசுப் பயணத்தின்போது உடனடி தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான இந்தியாவின் நிதியுதவி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாவதையும் அவர்கள் வரவேற்றனர்.
13. வடக்கு ராகேன் பகுதியில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள மியன்மர் அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. ராகேன் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து மியன்மருக்கும் வங்கதேசத்திற்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்தும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்தது. இந்த இருதரப்பு ஒப்பந்தங்களின்படி தற்போது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் மியன்மருக்கு திரும்பச் செல்லும் பணி விரைவில் முடிவடைய இந்த இருநாடுகளும் முன்வந்து இணைந்து செயல்படும் என்றும் இந்தியா நம்பிக்கை தெரிவித்தது. இந்த சிக்கலான பிரச்சனையை புரிந்து கொண்டமைக்காகவும் மியன்மர் நாட்டிற்கு அனைத்து உதவிகளை செய்தமைக்காகவும் மியன்மர் இந்தியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
14. இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதார உறவுகள் அதன் முழுத் திறனுக்கு மேம்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் சுட்டிக் காட்டின. தொடர்புகளை மேம்படுத்துவது, சந்தையை அணுகுவது, நிதி பரிமாற்றங்களை எளிமைப்படுத்துவது, வர்த்தகர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவி செய்வது, இருதரப்பு மற்றும் பகுதி வாரியான வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவது ஆகிய நடவடிக்கைகள் இருதரப்பினரின் சமூக – பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதையும் இருதரப்பினரும் சுட்டிக் காட்டினர்.
15. வெகுவிரைவில் இந்தியாவின் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தும் வகையில் இணைந்து செயல்படவும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் நேஷனர் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் மியன்மரின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இயைந்த வகையில் செயல்பட வேண்டும் என்பதை குறிப்பிட்ட அவர்கள் மியன்மரில் ரூபே அட்டையின் அறிமுகமானது மியன்மரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்பதோடு இந்தியாவில் இருந்து சுற்றுலா, வர்த்தகம் ஆகியவற்றும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
16. இந்திய-மியன்மர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான மின்னணுவழிப் பாதையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இது இரு நாடுகளுக்கும் இடையே பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எல்லை கடந்த வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இருநாடுகளுமே உள்ளூர் பணத்தில் செலுத்தும் ஏற்பாடு குறித்தும் இருதரப்பும் ஆர்வம் காட்டின. இந்த வகையில் தற்போது உள்ள இந்திய-மியன்மர் கூட்டு வர்த்தகக் குழு கூட்டங்களை முறையாக கூட்டவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
17. இரு நாடுகளுக்கும் இடையே ஆற்றல் துறையில் மேலும் அதிகமான ஒருங்கிணைவு பரஸ்பரம் நன்மை தருவதாக இருக்கும் என்பதையும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். பெட்ரோலிய உற்பத்தி துறையில், அதாவது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கச்சா எண்ணையை தூய்மைப்படுத்துவது, சேமித்து வைப்பது, கலப்பது, சில்லறை விற்பனை மேற்கொள்வது ஆகிய துறைகளில் ஒத்துழைக்கவும் இந்தியாவும் மியன்மரும் ஒப்புக் கொண்டன. இத்துறையில் வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டு, பெட்ரோலிய பொருட்களை வளர்த்தெடுப்பதில் இந்திய – மியன்மர் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. மியன்மரின் எண்ணெய் துரப்பண துறையில் இந்தியாவை சேர்ந்த பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் இருதரப்பும் வரவேற்றன. இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள எண்ணெய் துரப்பண திட்டங்களின் மூலம் கிடைக்கும் எண்ணெய்/வாயுவில் ஒரு பகுதியினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
18. மியன்மர்-இந்திய இருதரப்பு உறவுகளின் முக்கிய தூண்களாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடித்து வருகின்றன என்றும் இருதரப்பினரும் உறுதிப்படுத்தினர். ராணுவ அதிகாரிகளின் பயணத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலையையும் அவர்கள் பாராட்டினர். 2019 ஜூலையில் கையெழுத்தான ராணுவ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு வழிவகுத்துள்ளதையும் இரு நாடுகளின் தலைவர்களும் அங்கீகரித்தனர். மியன்மர் ராணுவ சேவைகளின் திறன் மேம்பாட்டை வளர்த்தெடுப்பதில் உதவி செய்வது என்ற தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. பரஸ்பர ராணுவ விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதிபூண்டது. இருநாட்டு மக்கள், பகுதிகளில் அமைதியையும் வளத்தையும் மேம்படுத்த எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டும் தங்கள் உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். மற்ற பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மோசமான சக்திகள் தங்கள் நாட்டுப் பகுதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் இருப்பது என்ற தங்கள் உறுதியையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
19. இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதையும் இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர். கடல்வழி பாதுகாப்பில் உள்ள சவால்கள், கடல்வழி பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர். 2019 செப்டெம்பரில் நடைபெற்ற கூட்டு செயல்பாட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் கடல்வழி பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும் இரு நாட்டுத் தலைவர்களும் அங்கீகரித்தனர். இந்த வகையில் கப்பல் போக்குவரத்து குறித்த தரவுகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.
20. பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளின் பரஸ்பர கவலைகளை கையாளுவதற்கென முழுமையானதொரு சட்டபூர்வ கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும் பொது மற்றும் வர்த்தக விஷயங்களில் சட்டபூர்வமான உதவிகளை செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் ஒரு நாட்டில் சட்டபூர்வமான நடவடிக்கைக்காக கோரப்படும் நபர்களை அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் ஒப்பந்தம் ஆகிய தற்போது நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இவை தொடர்பாக விரைவில் முடிவெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர். மியன்மரில் வந்திறங்கும் இந்திய குடிமக்களுக்கு விசா வழங்கும் முறையை 2020 டிசம்பர் வரை நீட்டிப்பது என்ற மியன்மர் நாட்டின் முடிவை இந்தியா வரவேற்றது.
21. புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளின் சிகிச்சைக்கென ‘பாபாட்ரோன் –2’ என்ற ஒளியூட்டக் கருவியை வழங்குவது என்ற இந்தியாவின் முடிவை மியன்மர் பாராட்டியது. சுகாதாரத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
22. ஜனநாயகபூர்வமான ஒரு கூட்டாட்சி ஒன்றியத்தை நிறுவ தேசிய அளவிலான இணக்கம், அமைதிக்கான செயல்முறை, ஜனநாயக பூர்வமான மாற்றம் ஆகியவற்றை நோக்கிய மியன்மர் நாட்டின் முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. மியன்மர் நாட்டு அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தியா வழங்கி வரும் பல்வேறு பயிற்சிகள், திறன் வளர்ப்பு திட்டங்கள், அறிமுகப் பயணங்கள், தொடர் சொற்பொழிவுகள் போன்றவை குறித்து இரு தரப்பும் தங்கள் திருப்தியை தெரிவித்துக் கொண்டன. மியன்மர் நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு தனது தேசிய அறிவு வலைப்பின்னலை விரிவுபடுத்தும் என்றும் இந்தியா அறிவித்தது. மியன்மர் தூதரக அகாதெமியை உருவாக்குவதில் மியன்மருக்கு உதவ தயாராக இருப்பதாகவும் இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியாவின் ஆதார் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மியன்மர் நாட்டு தேசிய அடையாள அட்டைத் திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவி தர முன்வந்தமைக்காக மியன்மர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
23. ஒரு ஜனநாயக கூட்டாட்சி ஒன்றியத்தை உருவாக்குவதற்கான தேசிய நல்லிணக்கம், ஜனநாயக பூர்வமான மாற்றம் ஆகியவை நோக்கிய மியன்மர் நாட்டின் முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொண்டது. தேசிய அளவிலான மோதல் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அரசு, ராணுவம், இனக்குழுக்களின் ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் நடைபெற்று வரும் அமைதிக்கான மியன்மரின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தருவதாக இந்திய பிரதமர் தெரிவித்தார். இந்தப் பகுதியின் மேம்பாட்டிற்கான தேசிய அளவிலான கூட்டான இலக்கை நோக்கிச் செல்வதில் நிலைத்தன்மை, அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.
24. பயங்கரவாதத்தின் மூலம் எதிர்கொள்ளும் அபாயத்தை அங்கீகரித்த இரு தரப்பினரும் பயங்கரவாதக் குழுக்கள், அவர்களது நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட கூட்டாகச் செயல்படவும் ஒப்புக் கொண்டனர். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் இரு தரப்பும் கண்டித்தன. பயங்கரவாதம், வன்முறை மிக்க தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் மேலும் வலிமையான சர்வதேச கூட்டணியின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். இதில் தகவல்களை, நுண்புலன் அறிவை அதிகமான அளவில் பகிர்ந்து கொள்வதும் அடங்கும். இவ்வகையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
25. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் போன்ற சர்வதேச அளவிலான மேடைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை தொடர்வது எனவும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஏசியன், பிம்ஸ்டெக், மேகாங்-கங்கா ஒத்துழைப்பு திட்டம் போன்ற பிரதேச அளவிலான கட்டமைப்புகளுக்கு உள்ளும் ஒத்துழைப்பது எனவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. விரிவாக்கப்பட்ட, திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு மியன்மர் ஆதரவு தெரிவித்தது. தம் நாட்டு எல்லைகளை அமைதியான வகையில் நிர்வகிப்பது, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் அரவணைப்பது, சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிப்பது, இந்திய-பசிஃபிக் பகுதியில் முன்னேற்றம் மற்றும் வளம் ஆகிய பொதுவான பாதையைப் பின்பற்றும் ஏசியன் அமைப்பை மையப்படுத்துவது ஆகிய குறிக்கோள்களை வளர்த்தெடுப்பது என்ற தங்கள் உறுதிப்பாட்டை இரு நாட்டுத் தலைவர்களும் வெளிப்படுத்தினர். தற்போதைய நட்புரீதியான உறவுகள், அண்டைநாடுகளுடனான சுமுகமான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் 200 கடல் மைல்களுக்கு அப்பால் கடல் பயணங்களை பதிவேற்ற வேண்டும் என்பது போன்ற இருதரப்பு தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தவும் இருதரப்பினரும் தயாராக உள்ளனர்.
26. சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்தித் துறையில் முன்னேறிய ஒத்துழைப்பை ஏற்படுத்த, ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் சூரிய ஒளிக்கான சர்வதேச கூட்டணியில் இணையும் வகையில் அதன் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க மியன்மர் உறுதி பூண்டுள்ளது. மேலும் பேரழிவுகளை எதிர்கொள்ளும் திறன் பெற்ற கட்டமைப்புக்கான கூட்டமைப்பின் பொருத்தப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. இந்தக் கூட்டமைப்பில் இணைவது குறித்து யோசிக்குமாறும் அது மியன்மரை கேட்டுக் கொண்டது.
27. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் பாகன் –ஐயும் சேர்த்திருப்பதை இந்தியா வரவேற்றது. பாகன் பகுதியில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட 92 கோபுரங்களில் முதல் கட்டமாக 12 கோபுரங்களை மீட்டுருவாக்கம் செய்ய இந்திய தொல்லியல் துறையின் முதல் கட்டம் தொடங்கியிருப்பதை இருதரப்பினரும் வரவேற்றனர். இந்த மீட்டுருவாக்க வேலைகளில் இந்திய தொல்லியல் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் மியன்மர் ஒப்புக் கொண்டது.
28. இருநாடுகளுக்கும் இடையே நட்புறவு மிக்க, சுமுகமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தங்களின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் வெளிப்படுத்தியதோடு, அனைத்து மட்டங்களிலும் தொடர்புகளை மேலும் தீவிரப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.
29. இந்தியாவில் தாங்கள் தங்கியிருந்த காலப்பகுதியில் தங்களுக்கு வழங்கப்பட்ட கனிவான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக மியன்மர் குடியரசுத் தலைவர் யு வின் மிண்ட் மற்றும் மியன்மர் நாட்டின் முதல் பெண்மணியான டாவ் சோ சோ ஆகிய இருவரும் இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மற்றும் இந்தியாவின் முதல் பெண்மணி திருமதி சவீதா கோவிந்த் ஆகியோருக்கு தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.