India signs historic Nuclear Agreement that opens up market for cooperation in the field of nuclear energy between India & Japan
Nuclear agreement opens up new avenues of civil nuclear energy cooperation with international partners
Key MoU inked to promote skill development. Japan to set up skill development institutes in Gujarat, Rajasthan, Karnataka
Japan to establish skill development centres in 3 states. 30000 people to be trained in 10 years
Skill development programmes to begin with Suzuki in Gujarat, with Toyota in Karnataka and with Daikin in Rajasthan
Task force to be set up to develop a concrete roadmap for phased transfer of technology and #MakeInIndia
Mumbai-Ahmedabad High Speed Rail on fast track with PM Modi’s Japan visit
Tokyo 2020 Olympics and Paralympics –Japan to promote sharing of experiences, skills, techniques, information and knowledge
Strongest ever language on terrorism in a Joint Statement with Japan
  1. மாண்புமிகு இந்தியக் குடியரசின் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் மேதகு திரு ஷின்சோ ஆபேவின் அழைப்பின் பேரில், தற்போது அரசுமுறைப்பயணமாக ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார்.
  2. முன்னதாக டோக்கியோவில் இன்று (நவம்பர் 11) காலையில் இரு பிரதமர்களும் விரிவான விவாதங்களை நடத்தினர். அப்போது, 12, டிசம்பர் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி உருவாக்கிய “இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு 2025” என்ற தொலைநோக்குத் திட்டத்தில் கோடிட்டு காட்டப்பட்ட சிறப்பு மூலோபயம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொண்டனர். பிரதமர் திரு. மோடி 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் மேற்கொண்ட ஜப்பான் பயணத்தையடுத்து, கடந்த இரு ஆண்டுகளில் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

 

கூட்டுமேலாண்மையை ஒருங்கிணைத்தல்

 

  1. இந்திய ஜப்பான் நாட்டு மக்களிடையே பவுத்த சிந்தனைகள் உட்பட ஆழமாக வேரூன்றியுள்ள நாகரிக உறவுகளை இரு பிரதமர்களும் போற்றினர். அமைதியான சக வாழ்வை நோக்கிச் செல்வதற்கு ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, சட்ட விதிகளை இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
  2. நீண்டகாலம் நீடிக்கும் கூட்டாண்மையை அளிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, மூலோபாய நலன்கள் அதிகரிப்பதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
  3. உலக வளத்துக்கு அடிப்படையாக உள்ள இந்திய-பசிபிக் மண்டலத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இரு பிரதமர்களும் சுட்டிக் காட்டினர். ஜனநாயகம், அமைதி, சட்டம், சகிப்புத்தன்மை, மண்டலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி, பன்முகத் தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலையை மதித்தல் ஆகியவற்றை இரு பிரதமர்களும் வலியுறுத்தினர். ‘கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கை’யின் கீழ் பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் செயல்களை ஜப்பான் பிரதமர் திரு. ஆபே பாராட்டினார். அத்துடன், இந்தோ-பசிபிக் மண்டலத்தின் திறந்த, வெளிப்படையான மூலோபயத்தையும் பிரதமர் திரு. மோடியிடம் அவர் விவரித்தார். இதன் அடிப்படையில் ஜப்பான் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளைப் பிரதமர் திரு. மோடி பாராட்டினார். இது தொடர்பாக இரு தரப்பு ஆழமான ஒத்துழைப்பையும் மேற்சொன்ன கொள்கை, உத்தியின் இணைந்த நிலையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
  4. திறந்த மற்றும் வெளிப்படையான இந்திய பசிபிக் மண்டலம் அமைவதைத்தெளிவாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் ஆசிய –ஆப்பிரிக்க இணைப்பை மேம்படுத்துவது முக்கியம் என்பதை இருதரப்பினரும் வலியுறுத்துகின்றனர். இந்தியாவின் “கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கை”, ஜப்பான் நாட்டின் “தரமான கட்டுமானத்துக்கான விரிவடைந்த கூட்டாண்மை” ஆகிய இரண்டுக்கும் இடையில் ”ஒருங்கியக்கம்”  வேண்டும் என்று இரு நாடுகளும் முடிவுசெய்துள்ளன. இந்த ஒருங்கியக்கம் பரஸ்பர ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மண்டல ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தொடர்பு, மற்றும் தொழில்களின் இணைப்பு ஆகியவற்றுக்காக இந்தியாவும் ஜப்பானும் பரஸ்பரம் நெருக்கமாக ஒருங்கிணைந்தும், மற்றவர்களுடனும் இணைந்து அமையவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
  5. ஒருவரையொருவர் சார்ந்த நிலையை ஆழப்படுத்துவது குறித்தும், உலகளவில் உள்ள சிக்கல் குறித்தும் ஆய்வு செய்த இரு நாட்டுப் பிரதமர்களும் புவி எதிர்கொண்டுள்ள பருவமாற்றம், பயங்கரவாதத்தை ஒடுக்குதல், தீவிரவாதத்தைச் சமாளித்தல் ஆகிய சவால்களில் பொதுவான தளத்தை விரிவு செய்யவும், ஒத்துழைக்கவும் முடிவு செய்தனர். சர்வதேச அடிப்படையிலான ஒழுங்கைப் பராமரித்தபடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐ.நா. சபை சீர்திருத்தம் குறித்தும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளன.
  6. ஜப்பானின் முதலீடு, புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவையும் இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சியில் அமையப்பெற்ற வளமான மனித ஆற்றல், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றையும் இணைப்பதன் மூலம் கிடைக்கும் மகத்தான ஆற்றலை மனத்தில் கொண்டு, உயர் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், சுத்தமான எரிசக்தி, எரிசக்தித் துறை மேம்பாடு, கட்டுமானம் மற்றும் பொலிவுறு நகரங்கள், உயிர்தொழில்நுட்பம், மருந்தியல்துறை, தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம், மற்றும் கல்வி, திறன்மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதன் தேவையை இரு நாட்டுப் பிரதமர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

 

பாதுகாப்பான, ஸ்திரத்தன்மைக்கான வலுவான கூட்டு மேலாண்மையை உருவாக்குதல்

 

  1. இந்திய – பசிபிக் மண்டலத்தில் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு இந்திய ஜப்பான் நாடுகளின் பங்கு முக்கியமானது என்பதை வலியுறுத்திய இரு பிரதமர்களும் தங்களது பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பை திடமாக்குவது அவசியம் என்றனர். பாதுகாப்பு சாதனங்கள், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் குறிப்பிட்ட ராணுவத் தகவல்களைப் பாதுகாப்பது குறித்தும் அமைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வது தொடர்பான உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை இரு பிரதமர்களும் வரவேற்றனர். பெரிய அளவிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு சாதனத்தில் கூட்டுப் பணிக்குழு, தொழில்நுட்பக் கூட்டு ஆகியவை உட்பட குறிப்பிட்ட விஷயங்களை உறுதி இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை விரைவுபடுத்துவதன் மூலம் கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி பின் மூலம்  பாதுகாப்பு குறித்த விஷயங்களை   மேலும் விரிவுபடுத்துவதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினர்.

 

  1. புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையில் நடைபெற்ற வழக்கமான ஆண்டு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததையும் மலபார் ராணுவ ஒத்திகை, விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வில் ஜப்பான் பங்கேற்றதையும் இரு பிரதமர்களும் வரவேற்றனர். இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவம் குறித்து “2+2” பேச்சுவார்த்தை மூலம் பாதுகாப்பு, ராணுவம் குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு கொள்கை குறித்த பேச்சுவார்த்தை, ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சு, கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் ஆழமாக மேற்கொள்ளும் வகையில் இரு பிரதமர்களும் மீண்டும் உறுதி செய்தனர். (“2+2 பேச்சுவார்த்தை என்பது” தில்லியில் 2009ம் ஆண்டு உச்சி மாநாட்டில் இந்திய ஜப்பான் நாடுகளின் பிரதமர்கள் உருவாக்குவதற்கு இசைந்து, அதை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்ட  கட்டமைப்பு ஆகும்.) முன்னதாக, இந்த ஆண்டு விமானப் படையினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து, இருநாடுகளின் முப்படைகளுக்குமான படைத் துறையினருக்கு இடையில் பரந்துபட்ட பேச்சுவார்த்தை நுட்பம் நடைமுறைக்கு வந்துள்ளதை இரு நாட்டுப் பிரதமர்களும் வரவேற்றுள்ளனர்.  மனிதாபிமான உதவிகளிலும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் பார்வையாளர்களைப் பரிமாறிக் கொள்வது, இதர துறைகளில் பயிற்சிகளைப் பரிமாறிக் கொள்வது உட்பட பாதுகாப்புத் துறையில் பேச்சுவார்த்தையை விரிவுபடுத்தவும், ஒத்துழைக்கவும் தங்களது குறிக்கோள்களை இரு நாட்டுப் பிரதமர்களும் பகிர்ந்து கொண்டனர்.

 

  1. ஜப்பானின் நீரிலும் வானிலும் இயங்கக் கூடிய “யுஎஸ் 2” ரக போர் விமானம் உள்பட அதி நவீன பாதுகாப்பு படைகளை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருப்பதை பிரதமர் திரு.மோடி வரவேற்றார். இது இரு நாடுகளுக்கும் இடையில் கொண்டிருக்கும் நம்பிக்கையை இரு தரப்பு பாதுகாப்பு பரிமாற்றங்களில் இரு நாடுகளும் கண்டுள்ள முன்னேற்றத்தைத் தெரிவிக்கிறது.

 

வளத்துக்கான கூட்டுமேலாண்மை

 

  1. ‘இந்தியாவில் உற்பத்தி செய்’, ‘திறன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’. ‘பொலிவுறு நகரம்’. ‘இந்தியா தொடங்கு இந்தியா’. ‘தூய்மை இந்தியா இயக்கம்’ ஆகிய திட்டங்களைப் பற்றி, ஜப்பான் பிரதமர் ஆபேயிடம் இந்தியப் பிரதமர் திரு. மோடி விவரித்தார். இந்த முன்முயற்சிக்கு அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) ஜப்பானின் பொதுத் துறை தனியார்துறை முதலீடுகளைச் செய்வதன் வாயிலாக தனது மேம்பட்ட திறன்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள உறுதியான ஆதரவை அளிப்பதாக  ஜப்பான் பிரதமர் ஆபே தெரிவித்தார். இந்த முன் முயற்சிகள் இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள தனியார் நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்புக்கு கணிசமான வாய்ப்புகளைத் தரும் என்பதை இரு நாட்டுப்பிரதமர்களும் அடிக்கோடிட்டனர்.

 

  1. இந்திய ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான முதன்மைக்குரிய மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் குறித்து, இரு நாடுகளின் கூட்டுக் குழு கூட்டங்கள் 2016ஆம் ஆண்டில் மூன்று முறை நடைபெற்று, அதில்  சீரான முன்னேற்றம் ஏற்படுவதை இரு நாட்டின் பிரதமர்களும் வரவேற்றுள்ளனர்.

 

  1. இந்த அதிவேக ரயில் திட்டம் குறித்து பொதுவான ஆலோசனை டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் கட்டுமானப் பணிகள் 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கி பணிகள் நிறைவுபெற்று ரயில்போக்குவரத்து சேவை 2013 ஆம் ஆண்டில் தொடங்கும் என்ற இலக்கை இரு நாட்டுப் பிரதமர்களும் மனத்தில் கொண்டுள்ளனர்.

 

  1. “உற்பத்தி, திறனாளிகளை மாற்றுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம்  இந்தியாவில் உற்பத்தித் துறையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை விஷயத்தில் இரு பிரதமர்களும் ஒத்துழைத்துச் செயல்படுவது என்று இரு பிரதமர்களும் முடிவு செய்துள்ளன. இத்திட்டம் இந்திய உற்பத்தி தளத்தை உயர்த்தும். அத்துடன்,  அடுத்த பத்தாண்டுகளில் ஜப்பான் நாட்டு உற்பத்தித் திறன் பாணியில்  30 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்து “இந்தியாவில் உற்பத்தி செய்”, “திறன் இந்தியா” திட்டங்களுக்கு பங்களிப்பைச் செலுத்தும். அதற்கு, பொதுத்துறை, தனியார் துறை கூட்டுடன் இந்தியாவில் உள்ள குறிப்பிடத் தக்க ஜப்பான் நிறுவனங்கள் வாயிலாக ஜப்பான்-இந்தியா உற்பத்திக்கான நிறுவனத்தை அமைப்பதன் மூலம் ஜப்பான் ஆதரவில் வடிவமைக்கப்பட்ட படிப்புகளைக் கொண்டு இவை நிறைவேற்றப்படும். உற்பத்தித் துறைக்கான இந்தப் பயிற்சித் திட்டம் 2017ம் ஆண்டு கோடையில் குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடங்கும்.

 

  1. “ஜப்பான்-இந்தியா முதலீட்டு மேம்பாட்டு கூட்டாண்மை”யின் கீழ் இந்தியாவில் ஐந்தாண்டுக்கு ரூ. 2.25 லட்சம் கோடி ஜப்பான் பொது, தனியார் துறைகளின் சீரான முதலீடு செய்யப்படுவதை இரு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர். மேலும், மேற்கத்திய சரக்குப் போக்குவரத்து வளாகம் (DFC), தில்லி – மும்பை தொழில் வளாகம் ((DMIC), அதைப் போல் சென்னை – பெங்களூரு தொழில் வளாகம் (CBIC) அமைப்பதற்கான திட்டத்தில் முன்னேற்றம் காணப்படுவதை இரு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர். அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவித் திட்டங்களைத் தகுந்த வகையில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுப் பிரதமர்களும் உறுதி செய்தனர்.

 

  1. இந்தியாவில் கட்டுமானத்தை மேம்படுத்துவது, நவீனமயமாக்குவது ஆகியவற்றில் ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றார். இது விஷயத்தில், சென்னை – அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், மும்பை ரயில்-துறைமுக இணைப்புப் போக்குவரத்துத்  திட்டம், தில்லியில் கிழக்குப் புறநகர் போக்குவரத்துத் திட்டத்துடன் கூடிய  திறன் போக்குவரத்து முறை  ஆகிய திட்டங்களை இரு நாட்டுப் பிரதமர்கள் வரவேற்றனர். குஜராத்தில் பவநகர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு அளிக்கும் எண்ணத்தை ஜப்பான் பிரதமர் ஆபே வெளியிட்டார்.

 

  1. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை மேம்படுத்த இணைந்து செயல்படுவது என்று இரு பிரதமர்களும் திடமாக உறுதிபூண்டுள்ளனர். வடகிழக்கு இந்தியாவில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த இரு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர். பொலிவுறு நகர்களை அமைப்பதில் ஓர் அம்சமாக உள்ள பொலிவுறு தீவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு பிரதமர்களும் முடிவு செய்தனர். அந்தப் பொலிவுறு தீவுகளை ஆற்றலுடனும், பயனுள்ள முறையிலும் மேம்படுத்த உதவும் வகையில் தொழில்நுட்பங்கள், கட்டுமானம், மேம்பாட்டு உத்திகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை அடையாளம் காண்பதற்காக ஆலோசனைகளை முன்னெடுத்துச் செல்லவும் முடிவு செய்தனர்.

 

  1. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாசனத் திட்டங்கள், ஒடிசாவில் வன வள மேலாண்மையின் கீழ் ஆயத்த தகவல் திரட்டுவது, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாசனத் திட்டத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியின் (ODA) கீழ் கடனுதவி பெறுவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார்.

 

  1. பிரதமர் திரு. மோடி, வாராணசியில் மாநாட்டுக் கூடம் கட்டுவது ஜப்பான் முயற்சிகளை வரவேற்றார். இத்தகையவை இரு தரப்பு  உறவுகளை வலுப்படுத்துவதற்கான அடையாளம் என்பதை அவர் அங்கீகரித்தார்.

 

  1. இந்தியாவில் வர்த்தக சூழலை மேம்படுத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி வலிமையான உறுதி கொண்டுள்ளதை பிரதமர் ஆபே பாராட்டினார். மேலும், முதலீட்டுக் கொள்கைகளை எளிமையமாக்குவதற்காக மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றி எளிமையான மற்றும் சீரான வரிவிதிப்பு முறையை கொண்டுவருவது, தொழில் நொடிந்துபோவது மற்றும் திவாலாவதற்கான விதிமுறைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை பிரதமர் ஆபே வரவேற்றார்.

 

  1. இந்தியாவில் வர்த்தக சூழலை மேம்படுத்தவும், ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் ஆபே பாராட்டு தெரிவித்தார். ஜப்பான் தொழில் நகரியங்கள் ((JITs) அமைப்பதற்கு பிரதமர் ஆபே மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார். இந்த நகரியங்களை அமைப்பதன் மூலம், இந்தியாவில் உற்பத்தித் துறையில் தொழில்நுட்பங்களை புகுத்துவது, புத்தாக்கம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஜப்பான் தொழில் நகரியங்களை அமைப்பதற்காக தேர்வுசெய்யப்பட்ட 12 இடங்களில், சோதனை முயற்சியாக செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில இடங்களை தேர்வுசெய்து சிறப்பான திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதையும், சிறப்பு முதலீட்டு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் இரு பிரதமர்களும் வரவேற்றனர். ஜப்பான் தொழில் நகரியங்களை அமைப்பதற்காக ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பை தொடர்வது என இருவரும் ஒப்புக் கொண்டனர்.

 

  1. இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்துவரும் “ஜப்பான் பிளஸ்” என்ற குழுவுக்கும், ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு ஒத்துழைப்புக்கான வசதிகளை செய்துவரும் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் ஒருங்கிணைப்புக்கும் பிரதமர் ஆபே நன்றி தெரிவித்தார். இருதரப்பு பொருளாதார பேச்சுவார்த்தை, நிதி பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு ஆகியவை இந்த ஆண்டில் வெற்றிகரமாக நிறைவேறியதற்கு இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதன் துணைக் குழுக்களுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.  தொழில் செய்வதற்கான செலவைக் குறைக்கவும், இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மனிதவளம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்துக்கு வழிவகுக்கவும் உதவும் சமூக பாதுகாப்புக்கான ஒப்பந்தம் அக்டோபர் 2016-ல் அமலுக்கு வந்ததை அவர்கள் வரவேற்றனர்.

 

  1. ஜப்பான் நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், நிப்பான் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு காப்பீட்டு (NEXI) நிறுவனம், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JBIC) ஆகியவை இணைந்து 1.5 லட்சம் கோடி யென் அளவுக்கு “ஜப்பான்-இந்தியா இந்தியாவில் தயாரிப்போம் சிறப்பு நிதி வசதி”யை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர். இந்தியாவில் கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பது குறித்து ஆராய தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதி (NIIF), போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான ஜப்பான் வெளிநாடு கட்டமைப்பு முதலீட்டு கழகம் (JOIN) ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அவர்கள் வரவேற்றனர்.

 

தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்துக்கு இணைந்து பணியாற்றுவது

 

  1. இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகமான, தூய்மையான மற்றும் ஏற்கத்தக்க எரிசக்தி தேவை என்பதை இரண்டு பிரதமர்களும் அங்கீகரித்துள்ளனர். இதற்காக, 2016-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜப்பான்-இந்தியா 8-வது எரிசக்தி பேச்சுவார்த்தையில் வகுக்கப்பட்ட ஜப்பான்-இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இதன்மூலம், இரு நாடுகளிலும் எரிசக்தி உருவாக்கப்படுவதோடு, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை உறுதிசெய்வதோடு, வானிலை மாற்ற விவகாரங்களையும் எதிர்கொள்ள முடியும். மேலும், டெஸ்டினேஷன் பிரிவை ஒழிப்பதுடன், வெளிப்படையான மற்றும் பிரிவுபட்ட திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு சந்தையை ஊக்குவிப்பது என்று இருவரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

  1. வானிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர். இந்த உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்க ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்ற தங்களது வாக்குறுதியை உறுதிப்படுத்தினர். குறைந்த கார்பனைக் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான கூட்டு கிரெட்டிங் வழிமுறைகள்  (Joint Crediting Mechanism- JCM) குறித்த ஆலோசனைகளை முடிந்தவரை விரைவில் தொடங்குவது என்று இருவரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

  1. சர்வதேச சூரிய கூட்டமைப்பை உருவாக்கியது உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் முயற்சிகளை பிரதமர் ஆபே வரவேற்றார்.

 

  1. அணுசக்தியை அமைதிவழியில் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்கு இந்திய அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர். இந்த ஒப்பந்தம், தூய்மையான எரிசக்தி, பொருளாதார வளர்ச்சி,  அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகத்தை ஏற்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய அளவிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.

 

  1. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், குறைவான எரிசக்தியில் செயல்படும் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கு இரு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதில், தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள், ஹைபிரிட் வாகனங்கள், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை பிரபலப்படுத்துவது போன்ற துறைகளில் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர்.

 

  1. பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்காக 2009-ம் ஆண்டில் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட சர்வதேச தீர்மானத்தை விரைவில் இறுதிசெய்ய வேண்டும் என்ற விருப்பத்தை இரண்டு பிரதமர்களும் வெளிப்படுத்தினர்.

 

எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு நட்புறவுக்கு அடித்தளம் அமைத்தல்

 

  1. சமூகங்களில் அடிப்படை மாற்றத்தை கொண்டுவருவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான சிறப்பான வாய்ப்புகள் இருப்பதை இரண்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.  விண்வெளி திட்டங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் வலியுறுத்தினர். இதன்படி, ஜாக்சா (JAXA) மற்றும் இஸ்ரோ (ISRO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். கடல் பகுதி, புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபட்டிருப்பதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதற்காக புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் ஜாம்ஸ்டெக் (JAMSTEC) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்துக்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸுக்கான இருதரப்பு கூட்டு பணிக் குழு, ஜெட்ரோவுடன் (JETRO) இணைந்து ஜப்பான்-இந்தியா ஐஓடி முதலீட்டு நடவடிக்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான கூட்டுக்குழு ஆகிய நடவடிக்கைகள் மூலம் இருதரப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐஓடி-யில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் குறிப்பிட்டனர்.

 

  1. பேரிடர் பாதிப்புகளை குறைப்பது குறித்து, டெல்லியில் 2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிய அமைச்சகங்கள் இடையேயான கருத்தரங்கம், அதனைத் தொடர்ந்து, பேரிடர் இழப்பை குறைப்பதற்கான மூன்றாவது ஐநா உலக கருத்தரங்கம் ஆகியவை வெற்றிகரமாக நடத்தப்பட்டதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர். பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் இழப்புகளைக் குறைப்பது ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சுனாமி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படட வேண்டியதன் அவசியம் குறித்தும், இடர்பாடுகள் குறித்து சிறப்பான முறையில் புரிந்துகொள்ளச் செய்வதுடன், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

 

  1. நுண்கிருமி தடுப்பு, ஸ்டெம்செல் ஆராய்ச்சி, மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் ஒருங்கிணைப்பு வலுப்பட்டிருப்பதற்கு இரண்டு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். ஜப்பானில் ஜெனரிக் மருந்துகள் அதிக அளவில் இருக்கும் நிலையில், இந்திய மற்றும் ஜப்பானிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் குறிப்பிட்டனர்.

 

உறுதியான நட்புறவை ஏற்படுத்த மக்கள் மீது முதலீடு

 

  1. சுற்றுலா, இளைஞர் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர். மேலும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே நட்புறவு பரிமாற்றத்துக்கான ஆண்டாக 2017-ம் ஆண்டை குறிப்பிட முடிவுசெய்யப்பட்டது. கலாச்சாரப் பரிமாற்றத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அவர்கள் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்தியா – ஜப்பான் சுற்றுலா கவுன்சிலின் முதல் கூட்டம் திருப்திகரமாக நடைபெற்றதை அவர்கள் குறிப்பிட்டனர். ஜப்பானில் 2017-ம் ஆண்டில் நடைபெற உள்ள இரண்டாவது கூட்டத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2016ம் நிதியாண்டில் ஜப்பான் தேசிய சுற்றுலா நிறுவன (JNTO) அலுவலகத்தை டெல்லியில் தொடங்க திட்டமிட்டுள்ளதை அவர்கள் வரவேற்றனர்.

 

  1. இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான விதிகளை தளர்த்த உள்ளதாக பிரதமர் ஆபே அறிவித்தார். இந்திய நாட்டவர்களுக்கு விசா விண்ணப்பங்களை வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்த விரும்புவதாக ஆபே தெரிவித்தார். ஜப்பானிய சுற்றுலாவாசிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நாட்டுக்கு வந்த பின் விசா பெறுவது மற்றும் நீண்டகாலம் அதாவது, 10 ஆண்டுகால விசா வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ஆபே நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

  1. ஆசியாவில் திறன்வாய்ந்த மனிதவளங்களை பரிமாறிக் கொள்வதை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் புதிதாக மேற்கொண்டுள்ள “புத்தாக்க ஆசியா” என்ற முயற்சிகளை பிரதமர் ஆபே விளக்கினார். இந்த முயற்சியின் மூலம், இந்திய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய இடங்கள் கிடைக்கும் என்று இரண்டு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்மூலம், புத்தாக்க முயற்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

  1. கல்வித்துறைக்கான முதலாவது இருதரப்பு உயர்மட்ட கொள்கை ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இரண்டு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான இணைப்பை விரிவாக்குவது உள்ளிட்ட கல்வி சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கல்வித் துறையில் பின்பற்றப்படும் சிறந்த மாதிரிகளையும், இளம் இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யும் சகுரா அறிவியல் திட்டம் (அறிவியல் துறையில் ஜப்பான்-ஆசிய இளைஞர் பரிமாற்றத் திட்டம்) போன்ற முயற்சிகளையும் பரிமாறிக் கொள்வதன் அவசியத்தை இரண்டு பிரதமர்களும் எடுத்துரைத்தனர்.

 

  1. இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும், ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் தொழில்நுடப அமைச்சகத்துக்கும் இடையே விளையாட்டுத் துறை சார்ந்த ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு இரண்டு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதன்படி, டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் நடைபெற ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் ஆகியவற்றை சிறப்பு கவனத்தில் கொண்டு, அனுபவங்கள், திறன், தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் புலமை பரிமாறிக் கொள்ளப்படும். 2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்காக ஜப்பானுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அளித்துள்ள ஆதரவுக்கு பிரதமர் ஆபே வரவேற்பு தெரிவித்தார்.

 

  1. அரசின் அனைத்து மட்டங்களுக்கு இடையேயும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் கருத்துப் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரண்டு  பிரதமர்களும் வலியுறுத்தினர். பரஸ்பர ஒத்துழைப்புக்காக குஜராத் மாநிலத்துக்கும், ஹியோகோ மாகாணத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். கியோட்டோ மற்றும் வாரணாசி நகரங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தியதற்கு அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இதன்படி, இரண்டு பாரம்பரிய நகரங்களும்  தங்களது கலாச்சார பாரம்பரியத்தை ஒருங்கிணைத்து செயல்படும். 

 

  1. சர்வதேச யோகா தினத்தை கொண்டாட ஜப்பானில் ஆர்வம் அதிகரித்து வருவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தார். ஜப்பானில் உள்ள யோகா ஆர்வலர்கள், இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான  யோகா கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்காக இந்திய ஸ்காலர்ஷிப்-களை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

 

  1. பெண்கள் மேம்பாடு அடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர். மகளிருக்கான உலக சபை (WAW!)  போன்ற கருத்தரங்குகளை மேற்கொள்வது உள்ளிட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

 

  1. எதிர்கால ஆசியாவானது அகிம்சை, சகிப்புத் தன்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இதனடிப்படையில், டோக்கியோவில் ஜனவரி 2016-ல்  “அடிப்படை கொள்கைகளை பகிர்ந்துகொள்தல் மற்றும் ஆசியாவில் ஜனநாயகம்” என்ற கருத்தரங்கம் நடைபெற்றதை இரு பிரதமர்களும் வரவேற்றனர். 2017-ம் ஆண்டில் நடைபெற உள்ள அடுத்த கருத்தரங்கை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

இந்தியா-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதனைத் தாண்டியும் விதிகளின் படி சர்வதேச நிலைத்தன்மையை ஏற்படுத்த இணைந்து பணியாற்றுவது

 

  1. இந்தியாவும், ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், 21-ம் நூற்றாண்டில் வளமான இந்தியா-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர். இதற்காக இந்தப் பிராந்தியத்தில் அடிப்படை கொள்கைகளை பகிர்தல், நலன்களை ஒருங்கிணைத்தல், திறன் மற்றும் வளங்களை வழங்குதல், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல், திறன் வளர்ப்பு, இணைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள இருவரும் முடிவுசெய்தனர். இதனடிப்படையில், இரு நாடுகளின் மனிதவளம், நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய முயற்சியை செயல்படுத்த பிரதமர் ஆபே ஆலோசனை தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்காக ஜப்பானிய அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி (ஓடிஏ)  திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார்.

 

  1. ஆப்பிரிக்காவில் ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்க இந்தியா-வும் ஜப்பானும் பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர். இதில், தங்களது முயற்சிகளை ஒருங்கிணைப்பதை இலக்காக கொண்டும், குறிப்பாக பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு, சுகாதாரம், கட்டமைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் கூட்டுத் திட்டங்களை கண்டறியவும் வலியுறுத்தப்பட்டது. இதற்காக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தொழில்துறை முனையங்கள் மற்றும் தொழில் துறை இணையங்களை உருவாக்குவதை ஊக்குவிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இருவரும் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தினர்.

 

  1. தெற்கு ஆசியா மற்றும் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை பிராந்தியங்களில் அமைதி மற்றும் வளத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர். இதன்படி, ஈரானின் சபஹார் நகருடன் இணைப்பை ஏற்படுத்தவும், கட்டமைப்பை மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ள வலியுறுத்தப்படடது. இந்த ஒத்துழைப்புக்கான வழிவகைகளை விரைந்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு இரண்டு பிரதமர்களும் உத்தரவிட்டனர்.

 

  1. இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதற்கு இரண்டு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், மனிதநேய உதவி/பேரிடர் மீட்பு (HA/DR), பிராந்திய இணைப்பு, கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வலுப்பட்டிருப்பதையும் அவர்கள் வரவேற்றனர். ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வலுப்பெற்றுள்ளதையும் இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர்.

 

  1. கிழக்கு ஆசிய மாநாட்டை (East Asia Summit – EAS) வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், இதற்காக பிராந்திய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக நாடுகளின் பிரதமர்களை தலைவர்களாகக் கொண்ட குழுக்கள் ஆலோசனை நடத்திவருவதையும் பிரதமர்கள் வரவேற்றனர். இந்த மாநாடு மேலும் வலுவான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், இணைந்து செயல்படுவது என இரண்டு பிரதமர்களும் முடிவுசெய்தனர். கிழக்கு ஆசிய அமைப்பின் தூதர்கள் கலந்துகொண்ட கூட்டத்தை ஜகார்த்தாவில் நடத்தியதையும், ஆசியான் தலைமைச் செயலகத்தில் கிழக்கு ஆசிய அமைப்பின் கிளையை அமைத்ததற்கும் இரு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். கிழக்கு ஆசிய அமைப்பின் வழிமுறைகளுக்குள் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

 

  1. பிராந்திய கட்டமைப்பை வடிவமைக்கவும், வலுப்படுத்தவும் தயாராக இருப்பதாக இரண்டு பிரதமர்களும் தங்களது விருப்பங்களை தெரிவித்தனர். இதன்படி, ஆசியான் தலைமையிலான ஆசியான் பிராந்திய கூட்டமைப்பு, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் பிளஸ், விரிவாக்கப்பட்ட ஆசியான் கடல்சார் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதம், வன்முறை பயங்கரவாதம், வானிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

  1. இந்த பிராந்திய மற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மேலும் வலுப்பெறும் என்று அவர்கள் வலிமையான நம்பிக்கையை தெரிவித்தனர். இது, இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் சரிசமமான, வெளிப்படையான, உள்ளடக்கிய, நிலையான, வெளிப்படையான மற்றும் விதிகளை   அடிப்படையாகக் கொண்ட பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்று பிரதமர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

  1. அனைத்து வகையான தீவிரவாதத்துக்கும் இரண்டு பிரதமர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தீவிரவாதத்தைப் பொறுத்தவரை, சகிப்புத்தன்மையே கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதையும், இது உலகம் முழுமைக்கும் பரவியிருப்பதையும் இருவரும் குறிப்பிட்டனர். டாக்கா, உரி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1267 மற்றும் தீவிரவாத அமைப்புகளை வரையறுக்கும் மற்ற தீர்மானங்களை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் இரு பிரதமர்களும் கோரிக்கை விடுத்தனர். தீவிரவாதிகளின் புகலிடங்கள், கட்டமைப்புகளை ஒழிக்க வேண்டும் என்றும், தீவிரவாத ஒருங்கிணைப்பையும், நிதியளிப்பதற்கான வாய்ப்புகளையும் முறியடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தீவிரவாதிகள் எல்லைதாண்டி செல்வதைத் தடுக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களது நாட்டு எல்லையிலிருந்து மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதத்தை சிறப்பான முறையில் அனைத்து நாடுகளும் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். தீவிரவாதத்தின் தன்மை மாறிவருவதை குறிப்பிட்ட பிரதமர்கள், தகவல் பரிமாற்றம் மற்றும் உளவுப்பணிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளுக்கு இடையே வலிமையான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினர். தீவிரவாத ஒழிப்பு குறித்து நடத்தப்பட்டுவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட இரு பிரதமர்களும், இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் மற்றும் உளவுத்தகவல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மும்பையில் நவம்பர் 2008-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல், பதான்கோட்டில் 2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

  1. கடல் பகுதி, விண்வெளி மற்றும் இணையதளம் போன்ற சர்வதேச நாடுகளுக்கு பொதுவான பகுதிகளை பாதுகாக்க நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர்.

 

  1. சர்வதேச சட்டங்களின் கொள்கைகள் அடிப்படையில், குறிப்பாக கடல் பகுதிகளுக்கான சட்டங்கள் குறித்த ஐநா தீர்மானத்தின் அடிப்படையில், சுதந்திரமாக கடல் பயணம் மேற்கொள்வது, விமானங்களை இயக்க அனுமதிப்பது, சட்டப்பூர்வ வணிகத்தை தடையில்லாமல் செய்வது ஆகியவற்றுக்கு உறுதிபூண்டுள்ளதாக இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், பிரச்சினைகள் எழும்போது, எந்தவொரு அச்சுறுத்தலையோ அல்லது படைகளையோ பயன்படுத்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும், நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் வலியுறுத்தினர். கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பகுதிகளில் சர்வதேச சட்ட ஒழுங்கமைப்பை வரையறுக்கும் கடல் பகுதிக்கான சட்டங்கள் குறித்த ஐநா தீர்மானத்துக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்று இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர். தெற்கு சீன கடல் பகுதி பிரச்சினையைப் பொருத்தவரை, கடல் பகுதி சட்டங்களுக்கான ஐநா தீர்மானம் உள்ளிட்ட உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டியது அவசியம் என்று இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர்.

 

  1. யுரேனியம் செறிவூட்டுதல் உள்ளிட்ட வடகொரியாவின் அணுஆயுத தயாரிப்பு மற்றும் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களுக்கு இரு பிரதமர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்தவொரு அத்துமீறலிலும் ஈடுபடக் கூடாது என்று வடகொரியாவுக்கு கடுமையாக வலியுறுத்தினர். ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் உள்ளிட்ட சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், கொரிய பிராந்தியத்தில் அணுஆயுதங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரு பிரதமர்களும் வலியுறுத்தினர். இந்தப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான அணுஆயுத பரவல் நடவடிக்கைகளைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவது என்று இரண்டு பிரதமர்களும் மீண்டும் உறுதியளித்தனர். கடத்தல் விவகாரங்களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று வடகொரியாவுக்கு அவர்கள் வலியுறுத்தினர்.

 

  1. பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்தை ஏற்படுத்த “அமைதிக்கான ஆக்கப்பூர்வ பங்களிப்பு” உள்ளிட்ட ஜப்பான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பிரதமர் திரு.நரேந்திர மோடியிடம் பிரதமர் ஆபே விளக்கினார். பிராந்திய மற்றும் சர்வதேச நிலைத்தன்மைக்கும், வளம்பெறவும் ஜப்பான் மேற்கொண்டுவரும் பயனுள்ள பங்களிப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தார்.

 

  1. 21-ம் நூற்றாண்டின் உண்மை நிலையை கணக்கில் கொண்டு, நியாயமான, உறுதியான மற்றும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், ஐநா பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐநா அமைப்புகளில் விரைந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர். இந்த இலக்கை எட்டுவதற்காக ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தத்தில் “நண்பர்கள் குழு”வை உருவாக்குவதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இது வரைவு அறிக்கை அடிப்படையிலான விவாதங்களைத் தொடங்குவது உள்ளிட்ட அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு உதவும். விரிவாக்கம் செய்யப்படும் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதற்கான தகுதியை இந்தியாவும், ஜப்பானும் பெற்றிருப்பதாக இரண்டு பிரதமர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்தனர்.

 

  1. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரும் ஜனநாயகமாகவும், வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் இந்தியா திகழ்வதை அங்கீகரித்துள்ள ஜப்பான், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC)  அமைப்பில் உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ஆதரவு தெரிவித்தது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வசதி செய்யவும், தாராளமயமாக்கவும் பணியாற்ற இரு பிரதமர்களும் முடிவுசெய்தனர். பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான (RCEP) உடன்பாட்டை நவீன, விரிவாக்கம் செய்யப்பட்ட, உயர் தரமான மற்றும் பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய வகையில் மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என இருவரும் உறுதியளித்தனர். உலக வர்த்தக மையத்தின் வர்த்தக வாய்ப்புகளுக்கான உடன்பாடு மூலமாகவும், சரக்கு மற்றும் சேவைகள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன் மூலமாகவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதலீடு செய்தும், வர்த்தகத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தாராளமயமாக்கவும் பணிகளை மேற்கொள்ள இரண்டு பிரதமர்களும் முடிவுசெய்தனர். ஜி20 நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டில் வலியுறுத்தியபடி, உருக்கு திறனை அதிகரிப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம், உருக்கு தொழில் துறையில் கூடுதல் திறனுக்கான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் வலியுறுத்தினர்.

 

  1. அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர். அணுஆயுத சோதனைக்கு தடைவிதிக்கும் விரிவான ஒப்பந்தத்தை (CTBT) விரைந்து ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஆபே வலியுறுத்தினார். ஷேனன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அணுப்பிளவு பொருட்கள் தடைக்கான ஒப்பந்தத்தை (FMCT) பாகுபாடு இல்லாத வகையில், பல அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளை உள்ளடக்கிய  உரிய வகையில் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அணுஆயுத பரவல் மற்றும் அணுஆயுத தீவிரவாதத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற உறுதியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

 

  1. திறமையான தேசிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு தேவை என்பதை இரண்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர். ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (MTCR), இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரவலுக்கு எதிரான ஹேக்யு நடத்தை விதிகள் (HCOC) ஆகியவற்றில் அண்மையில் இந்தியா இணைந்ததற்கும், ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்புகளில் தீவிரமாக இந்தியா செயல்பட்டு வருவதற்கும் ஜப்பான் வரவேற்பு தெரிவித்தது. சர்வதேச அணுஆயுத தடை முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், அணு எரிபொருள் விநியோகக் குழு, வாஸ்ஸெனார் அமைப்பு, ஆஸ்திரேலியா குழு ஆகிய மீதமுள்ள மூன்று சர்வதேச ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்புகளில் இந்தியாவுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பதற்காக இணைந்து பணியாற்றுவது என்று இரண்டு பிரதமர்களும் உறுதியளித்தனர்.

 

முடிவு

 

  1. சிறப்பான உபசரிப்பை அளித்த ஜப்பான் அரசுக்கும், மக்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இருதரப்புக்கும் ஏற்ற நாளில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் ஆபே-வுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை பிரதமர் ஆபே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s coffee exports zoom 45% to record $1.68 billion in 2024 on high global prices, demand

Media Coverage

India’s coffee exports zoom 45% to record $1.68 billion in 2024 on high global prices, demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 4, 2025
January 04, 2025

Empowering by Transforming Lives: PM Modi’s Commitment to Delivery on Promises