இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் ஒரு புதிய உத்திசார் வலிமையை பெற்றுள்ளது, இன்று நமது நாட்டின் எல்லைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பாக உள்ளன என்றும் நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய பாதுகாப்புச் சூழலில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மேலும், நமது பாதுகாப்பு படைகளை இளமையாகவும், எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க பல்வேறு பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
நாட்டில் இன்று தீவிரவாதத் தாக்குதல்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் இதனால் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவும் பொழுது வளர்ச்சியின் புதிய இலக்குகள் எட்டப்படும் என்றார்.
முன்னாள் படை வீரர்களின் நெடுங்கால கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நமது நாட்டின் படை வீரர்களின் மரியாதை என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியதாகவும், இன்று 70 ஆயிரம் கோடி ரூபாய் நமது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சென்றடைந்துள்ளது என்றும் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, நமது பாதுகாப்பையும் விருப்பங்களையும் உறுதிசெய்யும் நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.