இந்தியாவும், ஃபிரான்சும் இந்தோ- பசிபிக் பகுதியின் முக்கிய கூட்டாளிகளாகத் திகழ்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இந்தோ- ஃபிரெஞ்சு கூட்டுமுயற்சி நமது இருதரப்பு உறவின் முக்கிய அங்கமாக உள்ளது. ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய- ஃபிரான்ஸ் ஒத்துழைப்பின் கூட்டு கேந்திர திட்டத்திற்கு' கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவும் ஃபிரான்சும் இசைவு தெரிவித்தன. தற்போது நமது கூட்டு முயற்சிகளை பசிபிக் பெருங்கடலுக்கும் விரிவுபடுத்த நாம் தயாராக இருக்கிறோம்.
நமது இரு நாடுகளும் தடையில்லாத, வெளிப்படையான, உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்தோ- பசிபிக் பகுதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பிரதமர் திரு மோடியின் சாகர் திட்டமும், அதிபர் திரு மேக்ரானின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த திட்டமும் ஒருங்கிணைந்துள்ளன. விரிவான நமது ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், இணைப்பு, உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மனித மேம்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது.
நமது இருதரப்பு ஒத்துழைப்பு, நம் பரஸ்பர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கிறது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், இந்தியப் பெருங்கடல் பகுதி, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கும் மேம்பாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
இந்தியாவும், ஃபிரான்சும் சர்வதேச சூரிய ஒளி கூட்டணியை அறிமுகப்படுத்தியதோடு, இந்தப் பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளன. இந்தோ- பசிபிக் பூங்காக்கள் கூட்டுமுயற்சியை இரு நாடுகளும் தொடர்ந்து அமல்படுத்துவதுடன் பசிபிக் நாடுகளில் சதுப்புநிலங்களின் பாதுகாப்பிலும் ஆதரவளித்து வருகின்றன. இந்தோ-பசிபிக் பகுதியை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு உகந்ததாக உருவாக்கும் நோக்கத்தோடு இந்தோ- ஃபிரெஞ்சு சுகாதார வளாகத்தை கட்டமைப்பது பற்றியும் இரு நாடுகளும் ஆலோசிக்கும்.