ஐரோப்பிய மன்றத் தலைவர் திரு சார்லஸ் மைக்கேலின் அழைப்பை ஏற்று 2021 மே 8-ஆம் தேதி நடைபெற உள்ள ஐரோப்பிய மன்ற கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்குபெறுவார்.
இந்திய- ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தை, போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் திரு ஆண்டோனியோ கோஸ்டா நடத்தவிருக்கிறார். ஐக்கிய ஐரோப்பிய மன்றத்தின் தலைமைப் பொறுப்பை தற்போது போர்ச்சுகல் வகிக்கிறது.
27 ஐக்கிய ஐரோப்பிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் இந்தக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வார். ஐக்கிய ஐரோப்பா + 27 உறுப்பினர்களும் இதே கட்டமைப்பில் இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிபருடன் பங்கேற்றுள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் சுகாதார ஒத்துழைப்பு; நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை பின்பற்றுதல்; இந்திய-ஐக்கிய ஐரோப்பிய பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துதல்; பரஸ்பர விருப்பத்தின் பேரில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் அவர்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐக்கிய ஐரோப்பிய உறுப்பினர் நாட்டு தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வாய்ப்பாக இந்தியா- ஐக்கிய ஐரோப்பிய தலைவர்களின் கூட்டம் அமையும். அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது விளங்குவதுடன், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 15-வது இந்திய-ஐக்கிய ஐரோப்பிய உச்சி மாநாடு முதல், நாடுகளிடையேயான உறவில் காணப்படும் உத்வேகத்தை மேலும் கட்டமைக்க உதவிகரமாக இருக்கும்.