இந்தியா-ஆஸ்திரேலியா இடையே காணொலி வாயிலான இரண்டாவது உச்சிமாநாடு 2022 மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது காணொலி காட்சி மூலமான உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் காணொலி வாயிலான உச்சிமாநாட்டில் விவாதிக்கவுள்ளனர். இது இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பல்வேறு துறைகளில் புதிய முன்னெடுப்புகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
வர்த்தகம், குடிபெயர்வு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இணைந்து ஒத்துழைத்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர அக்கறை குறித்தும் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இந்த உச்சிமாநாடு இருக்கும்.