ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் 2024 பிப்ரவரி 13 அன்று அபுதாபியில் சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரவேற்ற அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாடு 2024-ல் பேசுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இது என்பதை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர். கடந்த எட்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு மேற்கொண்ட நான்கு பயணங்களையும் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் கீழ்க்கண்ட ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
I. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (IMEEC) குறித்த அரசுகளுக்கு இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தம்
III. டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
IV. மின்சார கட்டமைப்புத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
V. குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்துடனான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
VI. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகம் இடையே ஒத்துழைப்பு நெறிமுறை.
VII. உடனடி பணப் பட்டுவாடா தளங்களான யூபிஐ (இந்தியா) மற்றும் ஏஏஎன்ஐ (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம்.
VIII. உள்நாட்டு டெபிட் / கிரெடிட் அட்டைகளை ஜெய்வான் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) உடன் ரூபே-வை (இந்தியா) ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம்.
ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளை கண்டறியவும் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். 2022 மே 1 அன்று விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஐக்கிய அரபு அமீரக-இந்தியா வர்த்தக உறவுகளில் காணப்படும் வலுவான வளர்ச்சியை அவர்கள் வரவேற்றனர். இதன் விளைவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக நாடாகவும், இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா உள்ளது, இருதரப்பு வர்த்தகம் 2022-23 ஆம் ஆண்டில் 85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில், 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது குறித்து தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான முக்கிய காரணியாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் இருக்கும் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நான்காவது பெரிய முதலீட்டாளராகவும், ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டின் ஏழாவது பெரிய ஆதாரமாகவும் இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இரண்டிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டின் தனித்துவத்தையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.
2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை அபுதாபியில் நடைபெறும் 13-வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான மாநாட்டின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஜெபல் அலியில் பாரத் மார்ட்டை உருவாக்கும் முடிவை தலைவர்கள் வரவேற்றனர். நிதித் துறையில் பொருளாதார ஈடுபாடு ஆழமடைந்து வருவதை இரு தலைவர்களும் பாராட்டினர்.
எண்ணெய், எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இப்போது கையெழுத்தாகியுள்ள மின்சார இணைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அபுதாபியில் பிஏபிஎஸ் கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கியதற்காகவும், அதிபர் மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். பிஏபிஎஸ் கோவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா நட்பின் கொண்டாட்டம் எனவும் அமைதியான சகவாழ்வுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய உறுதிப்பாட்டின் உருவகம் என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடர்பாக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே அரசுகளுக்கு இடையேயான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தலைவர்கள் வரவேற்றனர்.
தமக்கும், இந்திய குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புக்காக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.