துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தையடுத்து தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்கு அளிக்குமாறு பிரதமர் இன்று அறிவுறுத்தியதையடுத்து உடனடி நிவாரண வழிமுறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா கூட்டம் நடத்தி விவாதித்தார். தேசிய பேரிடர் மீட்புப்படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்களை நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக அனுப்பி துருக்கி அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருந்துகளுடன் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது. அங்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை, பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.