கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் வகுப்பில் கலந்து கொள்வதற்காக 12ஆம் வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கூடியிருந்தனர். எந்தவிதமான முன்னேற்பாடும் இன்றி ஆச்சரியப்படத்தக்க வகையில் திடீரென பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இந்த அமர்வில் கலந்து கொண்டார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்ததன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. தங்களுக்கு இடையில் பிரதம மந்திரியை பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
”உங்களது ஆன்லைன் கூட்டத்தை நான் தொந்தரவு ஏதும் செய்யவில்லை என நினைக்கிறேன்” என்று பிரதம மந்திரி அவர்களிடையே பேசத் தொடங்கினார். மாணவர்களின் அந்தத் தருணத்தின் துடிப்பை உணர்ந்து திரு மோடி தேர்வுச் சுமையை நீக்கியது குறித்து அவர்களிடம் குறிப்பிட்டதோடு மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்ட மாணவர்களோடு சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் எந்தவிதமான சங்கடமும் இன்றி சௌகரியமாக உணரும் வகையில் அவர் தனது சொந்த வாழ்வின் சம்பவங்கள் சிலவற்றையும் அவர்களிடையே பகிர்ந்து கொண்டார். ”பாஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பல நாட்களாக நீடித்துக் கொண்டு இருந்த தேர்வு பற்றிய மனஅழுத்தம் குறித்து எடுத்துரைக்கும் போது பிரதமர் அந்த மாணவரின் குடியிருப்பு பகுதி எதுவென கேட்டுத் தெரிந்து கொண்டு தானும் அந்தப் பகுதியில் நீண்டகாலம் வசித்ததாக குறிப்பிட்டார்.
மாணவர்கள் மனம் திறந்து தங்களுடைய கவலைகளையும் கருத்துகளையும் பிரதம மந்திரியிடம் சுதந்திரமாகத் தெரிவித்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலான் பகுதியைச் சேர்ந்த மாணவர் பெருந்தொற்றுப் பரவலுக்கு இடையில் தேர்வுகளை ரத்து செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு இந்த முடிவு மிகச் சிறந்தது என்றும் குறிப்பிட்டார். மற்றொரு மாணவி, சிலர் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பராமரித்தல் போன்ற கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது இல்லை என்று வருத்தம் தெரிவித்ததோடு தனது வசிப்பிடத்தில் தான் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும் மிக விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்களிடம் நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது தெளிவாகத் தெரிந்தது. பெருந்தொற்றுப் பரவலின் அபாயம் குறித்த கவலையில் இருந்த அந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் தேர்வுகளை ரத்து செய்த முடிவுக்காக பிரதம மந்திரிக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். பெற்றோர்களும் இந்த முடிவை மிக சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டனர். வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதம மந்திரி தன்னிச்சையாக அனைத்துப் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தேர்வுகள் ரத்து செய்த பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து பிரதம மந்திரி கேட்டபொழுது ஒரு மாணவி “சார், தேர்வுகளை திருவிழா போன்று கொண்டாட வேண்டும் என்று நீங்கள் ஏற்கனவே கூறி உள்ளீர்கள் எனவே எனக்கு தேர்வு குறித்து எந்த விதமான பயமும் இல்லை” என்று பதில் அளித்தார், கெளஹாத்தியைச் சேர்ந்த இந்த மாணவி தான் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து வாசித்து வந்த பிரதம மந்திரியின் ”எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற புத்தகத்தை பாராட்டிப் பேசினார். மாணவர்கள் நிச்சயமற்ற இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு யோகா பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டனர்.
கலந்துரையாடல் மிகவும் இயல்பான முறையில் நடைப்பெற்றது. பிரதம மந்திரி இந்த கலந்துரையாடலை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். மாணவர்களை அழைத்து கலந்துரையாடலை ஒருங்கிணைப்பு செய்வதற்காக ஒரு பேப்பரில் மாணவர்களின் அடையாள எண்ணை எழுதித் தருமாறு மாணவர்களிடம் பிரதம மந்திரி கேட்டுக் கொண்டார். ஆர்வமுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியாக இந்த அறிவிப்பை பின்பற்றினர். விவாதத்தின் பொருளை விரிவுபடுத்துவதற்காக பிரதம மந்திரி தேர்வு ரத்து என்ற முடிவைத் தாண்டியும் விவாதத்தை முன்னெடுத்துச் சென்றார். நாட்டியம், யு-டியூப் மியூசிக் சேனல்கள், உடற்பயிற்சி மற்றும் அரசியல் போன்ற பலதரப்பட்ட செய்திகளுக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்வினை ஆற்றினர். இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அவர்கள் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுத வேண்டுமென்று பிரதமர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரதம மந்திரி மாணவர்களின் குழு மனப்பான்மையை பெரிதும் பாராட்டினார். கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது அவர்களின் பொது நிகழ்வு பங்கேற்பும் குழுவாக இணைந்து செயல்பட்டதும் பாராட்டத்தக்கது என்றார் பிரதம மந்திரி. மாணவர்கள் ஐபில், சாம்பியன்லீக் போட்டியை பார்ப்பார்களா அல்லது ஒலிம்பிக் போட்டிக்காக காத்திருப்பார்களா அல்லது சர்வதேச யோகா தினத்திற்காக காத்திருப்பார்களா என பிரதமர் கேட்ட பொழுது ஒரு மாணவி, கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கு காலஅவகாசம் நிறைய இருப்பதாக தெரிவித்தார். தேர்வுகள் ரத்து செய்த பிறகு உள்ள காலகட்டத்தை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் மேலும் கேட்டுக் கொண்டார்.