பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்களுடனும், நம் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடனும், ஆகஸ்ட் 6-ந் தேதி அன்று மாலை ஆறு மணிக்கு காணொலி மூலம் உரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில், “உள்ளூர் தயாரிப்பு உலகளவில் செல்கிறது - உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம்” என்று பிரதமர் பிரகடனம் செய்ய உள்ளார்.
ஏற்றுமதி, மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளிலும், உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழிலாளர்களைச் சார்ந்த துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது. இதனால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் பயன்பெறும். இந்தியாவின் ஏற்றுமதி, உலகளாவிய வர்த்தகத்தில் அதன் பங்கை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே, இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
நமது ஏற்றுமதித் திறனை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் திறன்களை பயன்படுத்துவதற்கும், அனைத்து பங்குதாரர்களையும் ஊக்குவிப்பதே இந்தக் கலந்துரையாடலின் இலக்காகும்.
இந்தக் கலந்துரையாடலில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கேற்க உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட துறைகளின் செயலாளர்கள், மாநில அரசு அதிகாரிகள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.