2023 தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். 2023 தொகுப்பில் 15 பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 36 ஐஎஃப்எஸ் பயிற்சி அதிகாரிகள் உள்ளனர்.
பிரதமரின் தலைமையின் கீழ், வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியைப் பாராட்டிய பயிற்சி அதிகாரிகள், எதிர்வரும் புதிய பணிகள் குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்தனர். நாட்டின் கலாச்சாரத்தை எப்போதும் தங்களுடன் பெருமிதத்துடனும், கண்ணியத்துடனும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காலனித்துவ மனநிலையை வென்று, அதற்கு பதிலாக நாட்டின் பெருமைமிக்க பிரதிநிதிகளாக தங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி அவர் பேசினார்.
உலக அரங்கில் நாட்டின் கண்ணோட்டம் எவ்வாறு மாறி வருகிறது என்பதையும் பிரதமர் விவாதித்தார். தற்போது நாம் உலக நாடுகளுடன் சம நிலையில் பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்துடன் திகழ்ந்து வருவதாக அவர் கூறினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொவிட் தொற்றுநோயை இந்தியா எவ்வாறு கையாண்டது என்பது குறித்து அவர் பேசினார். மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான நாட்டின் முன்னேற்றப் பயணம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியமர்த்தப்படும் போது, இந்திய வம்சாவளியினருடன் தங்களது தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.