இந்தோ- பசிபிக் பகுதியில் நீண்டகால கேந்திர கூட்டாளிகளாக இந்தியாவும் ஃபிரான்சும் இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1947-ஆம் ஆண்டு தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதோடு, 1998இல் இந்த கூட்டுமுயற்சி மேம்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு உட்பட்டும், சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து இரு நாடுகளும் பணியாற்றி வருகின்றன.
இந்தோ-ஃபிரெஞ்சு கூட்டுமுயற்சியின் 25-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் 2047-ஆம் ஆண்டு வரை இரு தரப்பு உறவுக்கான திட்டங்களை செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றன. 2047-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டும், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவின் நூற்றாண்டும், கேந்திர கூட்டுமுயற்சியின் பொன் விழாவும் கொண்டாடப்படும்.
சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்றவும், இந்தோ- பசிபிக் மற்றும் அதை தாண்டிய பகுதிகளில் விதிகளின் அடிப்படையிலான உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்தவும் இந்தியாவும், ஃபிரான்சும் திட்டமிட்டுள்ளன. கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் விதி ஆகியவற்றின் உலகளாவிய மாண்புகளுக்கு ஏற்ப இந்தியாவும் ஃபிரான்சும் எதிர்காலத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றின் வாயிலாக நாடுகளின் இறையாண்மை மற்றும் முடிவு எடுக்கும் சுயாட்சியை வலுப்படுத்தவும், நமது பூமியை அச்சுறுத்தும் மிகப்பெரிய சவால்களை இணைந்து எதிர்கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.