




பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்றுமதி கடன் உறுதி கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு அதாவது நிதியாண்டு 2021-22 முதல் நிதியாண்டு 2025-26 வரை ரூ. 4,400 கோடி மூலதனத்தை செலுத்த அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப பொது பங்கு விற்பனை மூலம் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதி அளித்திருப்பதுடன் இந்த முதலீட்டுக்கான ஒப்புதலால் கூடுதல் ஏற்றுமதிக்கு ஏதுவாக நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும்.
வணிக மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டு நுகர்வோர் பணம் செலுத்தாத அபாயங்களுக்கு எதிராக ஏற்றுமதியாளர்களுக்கு கடன் காப்பீட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 1957-ஆம் ஆண்டு இந்திய அரசால் ஏற்றுமதி கடன் உறுதி கழகம் தொடங்கப்பட்டது. ஏற்றுமதி கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிராக வங்கிகளுக்கு காப்பீட்டுத் தொகையையும் இது வழங்குகிறது. இந்திய ஏற்றுமதிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உறுதிப்பாட்டுடன், தனது அனுபவம், நிபுணத்துவத்தால் இந்திய ஏற்றுமதி துறைக்கு ஆதரவளிக்க இந்த நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடும் துறைகளின் ஏற்றுமதிகளுக்கு ஆதரவளிப்பதில் ஏற்றுமதி கடன் உறுதி கழகம் பரவலான பங்களிப்பை அளிப்பதுடன், சிறிய ஏற்றுமதியாளர்களின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இதுபோன்ற நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளையும் நிறுவனம் ஊக்குவிக்கிறது.
இந்த நிறுவனத்தில் மூலதன செலவு மேற்கொள்ளப்படுவதன் மூலம், ஏற்றுமதி சார்ந்த துறைகள், குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் ஈடுபட்டுள்ள துறைகள் பெருமளவு பயனடையும். அங்கீகரிக்கப்பட்ட தொகை தவணைகளில் செலுத்தப்படும். இதன் மூலம் ரூ.88,000 கோடி வரையிலான அபாயங்களைக் குறைக்கும் திறன் அதிகரிக்கும்.இதன் மூலம், ஏற்கனவே உள்ள நடைமுறைக்கு ஏற்ப ஐந்து ஆண்டு காலகட்டத்தை விட கூடுதலாக ரூ. 5.28 லட்சம் கோடி கூடுதல் ஏற்றுமதிக்கு இந்த நிறுவனம் ஆதரவளிக்கவும் வழிவகை செய்யப்படும்.
மேலும், கடந்த 2019, பிப்ரவரி மாதம் உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘எக்ஸ்போர்ட் டு ஜாப்ஸ்’ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ரூ. 5.28 லட்சம் கோடி ஏற்றுமதிகளால் 2.6 லட்சம் பணியாளர்கள் முறைப்படுத்தப்படுவார்கள். தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.