பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செமிக்கண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான இந்தியச் சூழல் என்ற திட்டத்தின் கீழ், மூன்று செமிக்கண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மூன்று தொழிற்சாலைகளும் அடுத்த 100 நாட்களுக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும்.
செமிக்கண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான இந்தியச் சூழல் திட்டம், கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ரூபாய் 76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கை செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் மைக்ரோ நிறுவனம் செமிக்கண்டக்டர் தொழிற்சாலையை நிறுவ 2023ம்- ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தைவானின் பவர்சிப் செமிக்கண்டக்டர் உற்பத்திக் கழகத்துடன் இணைந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம் தோலேராவில் ரூ. 91000 கோடி முதலீட்டில் செமிக்கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
அசாமின் மோரிகாவின் பகுதியில் ரூ. 27000 கோடி முதலீட்டில் டாடா செமிக்கண்டக்டர் அசெம்பளி மற்றும் டெஸ்ட் நிறுவனம் செமிக்கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், ஜப்பானின் ரெனெசஸ் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களை பங்குதாரர்களாகக் கொண்டு குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் சிஜி பவர் நிறுவனம் ரூ. 7,600 கோடி முதலீட்டில் செமிக்கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 20 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 60 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.