தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியின்போது, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம் மாணவன் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் கேட்டான்.
இக்கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து, எளிமையான வார்த்தைகளில் விளக்கமளித்தார். “நமது உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே நேரடித் தொடர்பு உள்ளது. பிறர் செய்யும் கடமைகளைச் சார்ந்து, நேர்மறையாக நமது உரிமைகள் அமைகின்றன. ஒரு ஆசிரியர் தனது கடமையை சரிவரச் செய்தால், மாணவனின் கற்றல் உரிமை பாதுகாக்கப்படுகிறது” என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, “ஜெய் ஹிந்த்” என்று வாழ்த்துச் சொல்வது வழக்கம் என்று பிரதமர் கூறினார். விடுமுறைக் காலங்களில் வடகிழக்குப் பகுதிக்குச் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.