ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் திரு ஜீன் ஏவ்ஸ் லீ டிரையன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (15.12.2018) சந்தித்தார்.
பிரான்ஸில் உள்ள ஸ்டார்ஸ்பர்கில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்குத் தமது நெஞ்சார்ந்த அனுதாபங்களைப் பிரதமர் வெளிப்படுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சுடன் இந்தியா நிற்கும் என்றும் அவர் கூறினார்.
2018 மார்ச் மாதத்தில் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரான் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்ததையும், அண்மையில் அர்ஜென்டினாவில் ஜி 20 உச்சிமாநாட்டிற்கு இடையே தாங்கள் கலந்துரையாடியதையும் பிரதமர் கனிவுடன் நினைவுகூர்ந்தார்.
இருதரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், பிராந்திய மற்றும் உலகப் பிரச்சினைகளில் பிரான்ஸ் நாட்டின் அணுகுமுறை பற்றியும் பிரதமரிடம் திரு லீ டிரையன் எடுத்துரைத்தார். பாதுகாப்பு, விண்வெளி, பயங்கரவாத எதிர்ப்பு, கடற்பகுதிப் பாதுகாப்பு, ஆக்கத்திற்கான அணுசக்தி ஒத்துழைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகள் வலுப்பட்டு வருவதைப் பிரதமர் வரவேற்றார்.