மாலத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு.அப்துல்லா ஷாகித் இன்று (13.12.2019) புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியைச் சந்தித்தார். 6-வது இந்தியா-மாலத்தீவு கூட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு.அப்துல்லா ஷாகித் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மாலத்தீவில் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தலைமையிலான அரசு தனது முதலாவது ஆண்டில் நிகழ்த்தி உள்ள சாதனைகளுக்காக அமைச்சர் ஷாகித்துக்கு பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியா-மாலத்தீவுக்கு இடையே உறவு முறைகள் மேம்பட்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், கடந்த ஓராண்டில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்தும் மனநிறைவு தெரிவித்தார். 6-வது கூட்டு ஆணையக் கூட்டத்தில் நடைபெற உள்ள விவாதங்கள் இருதரப்பினரும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இருதரப்புக்கும் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பட்டு முன்னேற்றத்திற்குரிய பெரிய திட்டங்களை உருவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டார். வலுவான, வளமான, அமைதியான, ஜனநாயக அடிப்படையிலான மாலத்தீவை உருவாக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து உழைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
இந்தியா-மாலத்தீவு உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் பிரதமர் மோடியின் தொலைநோக்கான உறுதியான தலைமைக்கு வெளியுறவு அமைச்சர் ஷாகித் நன்றி தெரிவித்தார். மாலத்தீவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவை அவர் வெகுவாக பாராட்டினார். “முதலாவதாக இந்தியா” என்ற கொள்கையிலும் இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மாலத்தீவு தலைவர்கள் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.