இந்தியா-ஐப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான (2+2) பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சர் திரு.டோஷிமிட்சு மாட்டேகியும், பாதுகாப்பு அமைச்சர் திரு.டாரோ கோனோவும் இன்று பிரதமரை சந்தித்தனர்.
வருகை தந்த அமைச்சர்களை வரவேற்ற பிரதமர், 2018 அக்டோபரில் ஜப்பானில் நடைபெற்ற 13-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் தாமும், ஜப்பான் பிரதமர் திரு. ஷின்சோ அபேயும் நிர்ணயித்த இலக்கை எட்டுவதற்கு இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி குறித்து திருப்தி தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் இடையே பாதுகாப்பு, பந்தோபஸ்து, ராணுவம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை இந்தக் கூட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இருநாடுகளின் மற்றும் பிராந்திய, உலக மக்களின் நலனுக்காக இந்தியா-ஜப்பான் இடையேயான உறவுகள் அனைத்து நிலைகளிலும் மேம்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே தொடர்ச்சியாக உயர்நிலையில் கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெறுவது நட்புறவின் ஆழத்திற்கும், பலத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தாமும், பிரதமர் அபேயும் அதிமுக்கியத்துவம் அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவிருக்கும் பிரதமர் அபேயை வரவேற்க தாம் காத்திருப்பதாக அவர் கூறினார். ஜப்பானுடனான இந்தியாவின் உறவு இந்தியா-பசிபிக் பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு முக்கிய அம்சமாக இருப்பது போலவே இந்தியாவின் செயல்பாட்டுக்கான கீழைத்தேசக் கொள்கைக்கும் மைல் கல்லாக விளங்குகிறது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.