வெளியுறவுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் மேதகு டாக்டர் அர்சு ராணா தியூபா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
நேபாள வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் டாக்டர் தியூபாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இரு தரப்பினருக்கும் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகரித்து வருவதைப் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் இந்தக் கலந்துரையாடல்களின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துரைத்த அவர், இந்தியா நடத்திய உலகின் தென்பகுதி நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டின் 3 வது பதிப்பில் நேபாள பிரதமரின் பங்கேற்பையும் பாராட்டினார்.
நேபாளத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சி ஒத்துழைப்பு முயற்சிகள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்காக பிரதமருக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்திய-நேபாளம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அவர் உறுதிபூண்டார்.