இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘க்வாட்’ எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் மெய்நிகர் உச்சி மாநாடு 2021 மார்ச் 12-ம் தேதி நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள், ஒருங்கிணைந்த இந்திய-பசிபிக் பகுதியில் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தில் தலைவர்கள் ஆலோசிக்கின்றனர். விநியோக சங்கிலியில் நெகிழ்வு, தற்போது உருவாகியுள்ள முக்கியமான தொழில்நுட்பங்கள், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பருவநிலை விஷயங்களில் நிலவும் சவால்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை இந்த உச்சிமாநாடு வழங்கும்.
கொவிட் -19 தொற்றை எதிர்த்து போராட மேற்கொள்ளப்படும் முயற்சிகள், இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பான, மலிவு விலை தடுப்பூசிகளை சமஅளவில் கிடைப்பதை உறுதி செய்வதில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் 4 நாடுகளின் தலைவர்கள் ஆலோசிப்பர்.